உயிர் மூச்சு

இயற்கை நாட்குறிப்பு வாரம்: நில்! கவனி! எழுது! வரை!

நிஷா

இயற்கையை நோக்குவது பெரும் உவகை அளிக்கும் செயல். தாவரங்கள், பறவைகள், உயிரினங்கள், வண்ணத்துப்பூச்சிகள் போன்றவற்றை ஆவலுடன் உற்றுநோக்கும் போக்கு இன்று பெருமளவில் அதிகரித்துவருகிறது. இயற்கையைத் தொடர்ந்து கவனிப்பது பயனுள்ள பொழுதுபோக்காக மட்டும் இருக்கவில்லை. அது அறிவியல் ஆய்வுகளுக்கு உதவும் ஒன்றாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் பறவை நோக்குவோர், தாவரங்களைப் பதிவு செய்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

இயற்கையின் மீது பிடிப்பு கொண்டவர்களை எழுதவும் பதிவு செய்யவும் உற்சாகப்படுத்தும் வகையில் உலக இயற்கைக் குறிப்பேட்டு வார விழா 2022 கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக இயற்கையின் ஏதாவது ஒரு அம்சத்தைப் பட்டியலிடலாம். படம் வரையலாம், எங்கே பார்த்தோம், என்ன பார்த்தோம், எத்தனை பார்த்தோம் என்பன போன்ற விவரங்களைக் குறிப்பெடுக்கலாம். இப்படிக் குறிப்பெடுக்கும் முயற்சியை ஊக்குவிக்கும் வகையிலேயே, உலக இயற்கைக் குறிப்பேட்டு வார விழா கொண்டாடப்படுகிறது. 'வேருக்குத் திரும்புங்கள்' என்பது இந்தாண்டின் கருப்பொருள்.

இந்த நிகழ்வில் யார் வேண்டுமானாலும் பங்கெடுக்கலாம். இப்படிப் பதிவு செய்வதை மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளலாம். உங்களது குறிப்பேட்டின் பக்கங்களை #naturejournalingweek.org ஹேஷ்டேக் கொண்டு Instagram, Facebook, Twitterஇல் பகிர்ந்துகொள்ளலாம். International Nature Journaling Week Facebook Groupஇல் இணைந்து கொள்ளலாம். Instagramல் இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள https://www.instagram.com/green_scraps/ யையும் தொடரலாம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயல்பாடு!

  • ஜூன் 1 – பாராட்டுங்கள் - இயற்கையின் ஏதாவது ஒரு அம்சத்தைப் பாராட்டுங்கள். அந்தப் பாராட்டைப் பற்றி சிறிய குறிப்போ, கவிதையோ, கட்டுரையோ எழுதலாம்.
  • ஜூன் 2 – பகிருங்கள் - இயற்கை சார்ந்து காணும் உயிரினங்களை, அதன் அனுபவத்தை மற்றவர்களுடன் பகிருங்கள்
  • ஜூன் 3 – படைப்பாற்றல் - சூரிய ஒளியின் வீச்சு, மேகத்தில் நிகழும் வண்ண ஜாலங்கள், பூவின் இதழ்கள், வீட்டின் அருகில் உள்ள மரங்கள், கூட்டமாகப் பறக்கும் பறவைகள் போன்றவற்றில் நிறைந்திருக்கும் இயற்கையின் படைப்பாற்றலைக் குறித்துக் குறிப்பு எடுங்கள்
  • ஜூன் 4 – உத்வேகம் - உங்களுக்கு உத்வேகம் அளிக்கும் இயற்கையின் ஏதேனும் ஓர் அம்சத்தைத் தேர்ந்தெடுத்து அதைப் பொறுமையாக உற்றுக் கவனியுங்கள்.
  • ஜூன் 5 – நம்பிக்கை கொள்ளுங்கள் - இயற்கையின் பல அம்சங்கள் நமக்குப் புரியாத புதிராக இருக்கலாம். ஒவ்வொரு நாளும் புதிய தகவல்களைத் தந்து இயற்கை நம்மை ஆச்சரியப்பட வைக்கலாம். இருப்பினும், இயற்கையின் பேராற்றலின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நம்பிக்கையை மற்றவர்களுக்கும் பரப்புங்கள்.
  • ஜூன் 6 – பராமரியுங்கள்! - உங்களைச் சுற்றி நிறைந்திருக்கும் இயற்கையின் ஏதேனும் ஓர் அம்சத்தைப் பராமரியுங்கள்.
  • ஜூன் 7 – கொண்டாடுங்கள் - இயற்கையின் எல்லா நிகழ்வுகளையும் ஒரு கொண்டாட்ட மனநிலையில் அணுகுங்கள். சூரியனின் உதயத்தில் தொடங்கி, சூரியனின் மறைவுவரை நிகழும் அனைத்து ஆச்சரியங்களையும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுங்கள்.

இயற்கையுடன் நம்மை இணைத்துக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு. நம் வீட்டுத் தோட்டம், மொட்டை மாடி, வீட்டிலிருந்து பார்வை எல்லைக்குள் உள்ள பகுதிகளில் மேற்கண்ட அம்சங்களைப் பார்த்துப் பதிவு செய்யலாம்.

மேலும் தகவல்களுக்கு: https://www.naturejournalingweek.com/

SCROLL FOR NEXT