மனிதனின் சுயநலம், அதன் காரணமாகச் சுரண்டப்படும் இயற்கை வளங்கள், ஆக்கிரமிக்கப்படும் காடுகள், அதனால் நேரும் மனித - காட்டுயிர் எதிர்கொள்ளல், கொல்லப்படும் உயிர்கள் எனக் காட்டுயிர்களின் வாழ்வு கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், சூழலின் மீது அக்கறையை வெளிப்படுத்தும் இன்றைய தமிழ்நாடு அரசாங்கத்தின் சில அறிவிப்புகள் அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கின்றன.
தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் நடந்த காவல்துறை, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அந்த விவாதத்தின்போது, இளம் மற்றும் முதல்முறை குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் "பறவை" என்னும் முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்துதல், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணித்துத் தக்க நடவடிக்கை எடுக்க "பருந்து" என்ற செயலி உருவாக்குதல் ஆகியவைக் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இவை ஏற்படுத்திய அதிர்ச்சியை விட, இது குறித்து நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தமிழ்நாடு காவல்துறை, முதல் முறையாகக் குற்றம் புரிபவர்களை ‘பறவை’ எனவும், தொடர்ந்து குற்றம் புரிபவர்களை ‘பருந்து’ எனவும் இரு பிரிவாகப் பிரித்து அவர்களின் நடவடிக்கையைக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்தச் செய்திகள் தெரிவித்தன. இதுபோன்ற சொல்லாடல்கள் ‘பறவையையும்’. ‘பருந்தையும்’ எதிரியாகச் சித்தரிக்காதா? ஏற்கெனவே அழிவின் விளிம்புக்கு இட்டுச் செல்லப்படும் காட்டுயிர்களின் வாழ்க்கையை இவை இன்னும் பேரழிவுக்கு இட்டுச் செல்லாதா?
இது குறித்து தமிழ்நாடு அரசு காட்டுயிர் வாரிய உறுப்பினர் சு.பாரதிதாசன் “கவிஞர், வைரமுத்துவின் வரிகளில் சொல்லுவதென்றால், தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம் குறைந்த பட்சம் வேறு இரண்டு சொற்கள் கிடைக்காதா. எனவே மேற்கண்ட சொல்லைத் தவிர்க்க வேண்டும்” என்று தமிழ்நாடு காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.