உயிர் மூச்சு

மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பை விளக்கும் ஹோம்!

வா.ரவிக்குமார்

வார்த்தைகளே இல்லாமல் வாத்தியங்களின் ஒலியின் மூலமும் தாளங்களின் வழியாகவும் நம் மனத்தின் ஆழத்தில் இரக்கத்தைக் கசியவைக்க முடியும் என்பதை இசை சார்ந்த சமூக வலைத்தளங்களில் வெளிவந்திருக்கும் `ஹோம்' என்னும் இசைத் தொகுப்பு நிரூபித்திருக்கிறது.

லோப க்ரோத மோக மத உலகம் பழிக்கத்தக்கப் பஞ்சமா பாதகங்களை விட்டொழிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் இறைவனின் அருளை வேண்டினால் எப்படிக் கிடைக்கும் என்னும் சிந்தனையை நம்முள் விதைக்கிறது லோப, க்ரோத, மோக மதே.. என்னும் பாடல்.

`தந்த விளையாட்டு' எனும் டிராக்கின் முகப்பு இசையே ஒரு வேட்டையாடுதலுக்கான முன் தயாரிப்பையும் பதட்டத்தையும் நமக்குள் ஏற்படுத்துகிறது. குறிப்பாக `கன்றின் குரலைக் கேட்டுக் கனிந்து வரும் பசு போல்' என்னும் பாடலுக்கான இசை நம்மை அதிர்வடைய வைக்கும் ரகம்! இந்த ஹோம் இசை ஆல்பத்தை சிங்கப்பூரிலிருக்கும் சுஷ்மாவும் அமெரிக்காவிலிருக்கும் ஆதித்ய பிரகாஷும் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர். இந்த இசை ஆல்பத்தின் உள்ளடக்கம், நோக்கம் குறித்து சுஷ்மாவிடம் பேசியதிலிருந்து…

குழுவினருடன் சுஷ்மா

மனத் தவிப்பிலிருந்து மீள...

`Reflection On My relationship with nature sustainability and wild life' தமிழில் சொல்வதானால், சூழலியல் மீதான என்னுடைய அக்கறை, இயற்கையின் மீதான என்னுடைய ஆர்வம், காட்டுயிர்கள் மீதான என்னுடைய நேசம், அவற்றுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும்போது எனக்கு ஏற்படும் பதட்டம், தவிப்பு இதுபோன்ற உணர்வுகளிலிருந்து நான் மீண்டுவருவதற்குக் கடந்த காலங்களில் பெரிதும் போராடியிருக்கிறேன். இந்தப் பாதிப்புகள் சில நாட்களுக்கு இருக்கும். அதிலிருந்து மீண்டு வருவதற்கு மனதளவில் நிறையப் போராட வேண்டியிருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு பாதிப்பு கடந்த மே 2020லும் நிகழ்ந்தது. கேரளாவில் கர்ப்பமாக இருந்த ஒரு யானைக்கு, பட்டாசுகள் வைத்த அன்னாசிப்பழத்தை சில நயவஞ்சகர்கள் கொடுத்து, பட்டாசு வெடித்து, கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த யானை இங்கும், அங்கும் ஓடித் தவித்து, இரண்டு நாட்களுக்குப் பின், அங்கிருந்த ஏரியில் தன்னுயிரை இழந்தது. இந்தக் கோரமான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இந்த கர்ப்பிணி யானையின் மரணம் என்னை மிகவும் பாதித்தது.

உணர்ச்சிகளின் வடிகாலாக இசை

இவ்வளவு கொடூரமான மனிதர்களை நினைத்து என் மனம் பெரிதும் வருந்தியது. இந்தக் கொடுமைக்கு எதிராக என்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கம், கோபம், வெறுப்பு... இப்படிப் பலவிதமான உணர்ச்சிக் கலவைகள் என்னுள் எழுந்தது. அந்த உணர்ச்சிகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த எனக்குத் தெரியவில்லை. அதனால் இசையின் வழியாக வெளிப்படுத்த நினைத்தேன். அதன் வெளிப்பாடாகவே `ஹோம்' என்னும் இசை ஆல்பத்தை அமெரிக்காவிலிருக்கும் ஆதித்ய பிரகாஷோடு இணைந்து உருவாக்கினேன். அவர் இந்த ஆல்பத்திற்கு என்னோடு சேர்ந்து இசை அமைத்ததுடன் பாடியும் இருக்கிறார். காங்கோவில் இயற்கை வளங்கள், கனிம வளங்களை எடுக்கும் பணியின் காரணமாகவும் அங்கிருக்கும் கொரில்லாக்கள் அழிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பிஞ்சு கொரில்லாக்கள் தங்களின் தாய், தந்தை, குடும்பத்தை இழந்து ஆதரவற்று தவித்துப் போகும் நிலையைப் பார்க்கும் போது நெஞ்சம் பதறியது.

மனிதனுக்கும் இயற்கைக்கும் இருக்கும் தொடர்பை ஆழமாக உணரும் வழியாக இசையின் மூலமாகச் சொல்ல நினைத்தேன். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான பந்தத்தை, என்னுடைய வாழ்க்கையிலிருந்து, இயற்கையை அனுபவிக்கும் போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சி, மனிதனால் இயற்கை பாதிக்கப்படும் போது எனக்கு உண்டாகும் வலி, என்னுடைய ஆதங்கம் போன்றவற்றை இசையால் வெளிப்படுத்தும் முயற்சியைச் செய்திருக்கிறேன்.

உலகத்தை உலுக்கும் ஒப்பாரி

`ஹம்சத்வனி நேச்சர்' என்னும் டிராக்கில் பாரதியாரின் வரிகளை விருத்தமாகப் பாடியிருப்பேன். முகாரி ராகத்தை அடிப்படையாகக் கொண்டு யானையின் இறுதிச் சடங்கு என்னும் டிராக்கை அமைத்திருப்பேன். உணர்வுகளைக் கடத்துவதற்குப் பெரிதும் பாலமாக இருப்பது இசைதான். இதைக் கேட்கும் ஒருவருக்கு ஏற்படும் மகிழ்ச்சி, சோகம் எதுவாக இருந்தாலும் அதற்கான காரணத்தை அவர்கள் இயற்கையிடம் தேடும் எண்ணம் வரவேண்டும். கர்னாடக இசையை ஆதாரமாக வைத்து இப்படிக்கூட ஒரு கதையைச் சொல்ல முடியும் என்னும் நம்பிக்கை இதன் மூலம் வந்திருக்கிறது" என்கிறார் நெகிழ்வாக சுஷ்மா.

ப்ரவீன் ஸ்பர்ஷ் என்னும் பிரபல மிருதங்கம், தாள வாத்தியக் கலைஞர்தான் இந்தப் பாடலுக்கான தாளத்தை அமைத்துள்ளார். மேட்டிசையின் பிரதான வாத்தியமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் மிருதங்கத்தின் ஒலியோடு பறை, தமரு, சக்தி போன்ற வாத்தியங்கள் இறுதி ஊர்வலத்துக்குப் பிரதானமாக வாசிக்கப்படும் `ஒத்த' எனப்படும் வகைமையில் ராஜன், தீபன், விஜய் ஆகியோரின் வாசிப்பு, உலகத்துக்கே அந்த ஒற்றை கர்ப்பிணி யானையின் மரணச் செய்தியை உள்ளத்தைப் பிழியும் வகையில் அறிவிக்கிறது.

கன்றின் குரலைக் கேட்டுக் கனிந்து வரும் பசு போல் பாடலைக் கேட்க:

SCROLL FOR NEXT