திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை வேளாண் பண்ணையில் ஜூன் 4, 5-ம் தேதிகளில் தேசிய அளவில் நெல் திருவிழா நடைபெறுகிறது.
கடந்த 2006-ல் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இத்திருவிழாவைத் தொடங்கி வைத்தார். 10-ம் ஆண்டு தேசிய நெல் திருவிழா ஜூன் 4, 5-ம் தேதிகளில் நம்மாழ்வார் நினைவரங்கில் நடைபெறுகிறது.
காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன், கிரியேட் அமைப்பின் தலைவர் துரைசிங்கம், மேலாண் அறங்காவலர் பொன்னம்பலம், தமிழக இயற்கை உழவர் இயக்கத்தின் மாநிலத் தலைவர் அ. அம்பலவாணன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த விழாவில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி வேளாண் வல்லுநர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர்.
இதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள், நிலம், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், நிறுவனத்தைத் தொடங்க வேண்டியதன் அவசியம், பாரம்பரிய நெல் சாகுபடி, உழவர்களுக்கான நபார்டு திட்டங்கள், இயற்கை உழவர் வேளாண் சான்று பெறும் முறை குறித்து பேசப்படுகிறது.
அத்துடன், இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரும் 156 பாரம்பரிய நெல் விதைகள் ஆறு ஆயிரம் விவசாயிகளுக்கு தலா இரண்டு கிலோ வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமனைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல்
விவரங்களுக்கு: 9443320954, 9487830954, 04369-220954