உயிர் மூச்சு

ஆமைகள் பிழைக்குமா, அழியுமா?

பாலாஜி லோகநாதன்

உலகக் கடல் ஆமைகள் நாள்: மே 23

பெருங்கடல்கள் எங்கும் நீந்தி, அவற்றின் நீள அகலங்களை அளக்கும் ஏழு வகை கடல்வாழ் ஆமைகள் இந்தப் பூவுலகில் வாழ்கின்றன. கடும் குளிர் பிரதேசங்களைத் தவிர, உலகின் எல்லாக் கடல்களையும் அவை சுற்றி வருகின்றன! நம் கடல்களில் நெடுங்காலமாக வாழ்ந்துகொண்டிருக்கும் உயிரினங்கள் என்று ஆமைகளைச் சொல்லலாம்.

தங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான காலம் பெருங்கடல்களிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் இந்த ஆமைகள், குறிப்பிட்ட கால இடைவெளியில் கடற்கரையோரங்களுக்கு வருவது உண்டு. ஜனவரி முதல் ஏப்ரல் மாதங்களுக்கு இடையே இந்தியக் கடற்கரைகளுக்குப் பெண் ஆமைகள் முட்டையிட வருகின்றன.

பங்குனி ஆமைகள்

இப்படி இந்தியக் கடற்கரைகளுக்கு, குறிப்பாகத் தமிழகக் கடற்கரைகளுக்கு அதிகம் வரும் ஆமையினம் ஆலிவ் ரிட்லி; இதய வடிவம் கொண்ட இந்த ஆமைகள் ஆலிவ் பச்சை நிறத்தில் இருப்பதால் இந்தப் பெயர். பங்குனி மாதத்தில் தமிழகக் கடற்கரைகளுக்கு அதிகம் வருவதால், தமிழில் இவை பங்குனி ஆமைகள் எனப்படுகின்றன.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாத இறுதியில் இனச் சேர்க்கைக்காக இந்த ஆமைகள் கடல் ஓரங்களுக்குச் செல்கின்றன. பிறகு பெண் ஆமைகள் முட்டையிடுவதற்காக இரவில் கடற்கரைகளுக்கு வருகின்றன. ஒவ்வொரு பெண் ஆமையும் வருடத்துக்கு இரண்டு முறை முட்டை இடும். ஒரு முறைக்கு 50 முதல் 190 முட்டைகள்வரை இடலாம். முட்டையிட்ட 45 முதல் 60 நாட்களுக்குள் குஞ்சு பொரிந்துவிடும்.

அழிவின் விளிம்பில்

கடல் சுற்றுச்சூழல் சமன்பாட்டில் கடல் ஆமைகள் முக்கியப் பங்காற்றுவதால், இந்த ஆமைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

15-ம் நூற்றாண்டில் 10 லட்சம் ஆமைகள் பூமியில் வாழ்ந்துள்ளன. இன்றைக்கு அவை 90 சதவீதம் அழிந்துவிட்டன. அதனால் பங்குனி ஆமைகளை அழித்துவரும் உயிரினமாகச் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (ஐ.யு.சி.என்.) வகைப்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் இயற்கையிலேயே இடப்படும் 1,000 முட்டைகளில், ஒன்று மட்டும் வளர்ந்த ஆமைப் பருவத்தை அடைகிறது.

அச்சுறுத்தும் அம்சங்கள்

பங்குனி ஆமைகளின் வாழ்க்கையை இரண்டு முக்கிய விஷயங்கள் அச்சுறுத்துகின்றன:

முதலாவது, மீன்பிடி கருவிகள். ஆமைகள் விற்பனைக்குப் பயன்படுவதில்லை என்றாலும், மீன்பிடி வலைகளில் சிக்குகின்றன அல்லது வளர்ந்த ஆமைகள் மீன்பிடி படகுகளின் முன் சுழல்விசிறிகளில் சிக்கிக் காயமடைகின்றன, இறக்கின்றன.

இரண்டாவது, கடற்கரை ஓரங்களில் எரியும் நியான் விளக்குகளும், கடற்கரையில் திரியும் நாய்கள், காகங்கள், முட்டைகளைத் திருடும் மனிதர்களாலும் இந்த இனம் அழிகிறது.

திசைமாற்றும் வெளிச்சம்

ஆமைக் குஞ்சுகள் முட்டையிலிருந்து பொரிந்து வெளிவரும்போது, கடலின் தொடுவானத்துக்கு மேலே பிரதிபலிக்கும் நிலவு, நட்சத்திரங்களின் வெளிச்சத்தை நோக்கி - அதாவது கடலை நோக்கி நகரும் வகையில் இயல்பூக்கமாக அதன் மரபணுவில் பதிந்துள்ளது.

ஆனால், இப்போது கடற்கரை சாலையிலும், அங்குள்ள கடைகளிலும் எரியும் பிரகாசமான விளக்கு வெளிச்சத்தால் ஆமைக் குஞ்சுகள் கடலை நோக்கிச் செல்லாமல் நிலத்தை நோக்கித் திரும்பி விடுகின்றன. ஆமைக் குஞ்சுகள் பிறந்த 24 மணி நேரத்துக்கு எந்த உணவும் தேவையில்லை. இருந்தாலும் கடலுக்கு எதிர்ப்புறமாக நகரும்போது, ஈரப்பதத்தையும் உடல் சக்தியையும் வேகமாக இழந்துவிடுகின்றன. நாய், காக்கைகளால் உண்ணப்படுகின்றன. சாலைகளில் செல்லும் வாகனங்களிலும் சிக்கி நசுங்கிவிடுகின்றன.

எஞ்சியுள்ளது தப்புமா?

இந்த உலகில் 12 கோடி ஆண்டுகளாக வாழ்ந்து உலகின் பெருங்கடல்களுக்கெல்லாம் பயணித்துவந்த ஓர் உயிரினத்தை அழிவின் விளிம்புக்குத் தள்ளியதற்கு மனிதர்களே காரணம்.

பங்குனி ஆமைகள், முதுகெலும் பில்லாத கடல் உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. அதன் மூலம் கடல் உணவுச் சங்கிலியில் அவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. கடற்கரையோரச் சூழலிலும் திறந்த கடல் பகுதிகளிலும் இவை முக்கிய உயிரினங்களாகத் திகழ்கின்றன.

பங்குனி ஆமைகள் அழிந்தால், மேற்கண்ட எல்லாமே சீர்குலையும். கடல் உணவையும் கடற்கரையையும் நம்பி வாழும் நாமும் இதனால் பல பாதிப்புகளைச் சந்திக்கத்தான் போகிறோம்.

இப்போதும்கூட பங்குனி ஆமைகள் முற்றிலும் அற்றுப்போகும் நிலைக்குச் செல்லவில்லை. சென்னை கடற்கரைக்குக் குறைந்த எண்ணிக்கையிலாவது வந்துகொண்டுதான் இருக்கின்றன. எஞ்சியுள்ள ஆமைகளைக் காப்பது, நம் கையில்தான் இருக்கிறது.

ஆமைகளைக் காக்கும் மாணவர் அமைப்பு

மாணவர் கடல் ஆமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு (எஸ்.எஸ்.டி.சி.என்.) 1988-ம் ஆண்டு முதல் சென்னை கடற்கரைப் பகுதியில் ஆமை முட்டைகளைச் சேகரித்துப் பாதுகாப்பாகப் பொரிக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. கடற்கரையில் ஆமை முட்டைக் கூடுகளைக் கண்காணிப்பது, முட்டைகளை மீட்பது, பாதுகாப்பாகப் பொரிக்கும் குழிகளுக்கு முட்டைகளைக் கொண்டுபோய்ச் சேர்ப்பது, ஆமைக் குஞ்சுகள் பொரிந்தவுடன் அவற்றைக் கடலில் பத்திரமாக விடுவது போன்ற பணிகளை இந்த அமைப்பு செய்துவருகிறது.

பிறந்த கடற்கரைக்கே திரும்பும் ஆமைகள்

பங்குனி ஆமைகள் முட்டையிடுவதில் பல்வேறு வியக்கத்தக்க அம்சங்கள் பொதிந்துள்ளன:

முட்டையிடுவதற்காகப் பெண் ஆமைகள் கூட்டமாகக் கரைக்கு வருவதற்கு ‘அரிபடா’ என்று பெயர். இதற்கு ஸ்பானிய மொழியில் ‘கரைக்கு வருதல்’ என்று அர்த்தம். இப்படி உலகிலேயே அதிகமான ஆமைகள் முட்டையிடும் மூன்று இடங்களில் ஒடிஷா கடற்கரையும் ஒன்று.

ஆமைகள் முட்டையிடுவதில் உள்ள மற்றொரு வியக்கத்தக்க உண்மை, பெண் ஆமைக் குஞ்சுகள் எந்தக் கடற்கரையில் பிறந்தனவோ, அதே கடற்கரைக்கே வளர்ந்து கருத்தரித்த பிறகு மீண்டும் முட்டையிட வருவதுதான்.

இன்னொரு விஷயம், தட்பவெப்ப நிலை மாற்றமே கடல் ஆமை முட்டைகளில் பாலினத்தை நிர்ணயிக்கிறது. பொதுவாக வெப்பமான சூழலில் பெண் ஆமைக் குஞ்சுகளும், வெப்பம் குறைந்த சூழலில் ஆண் ஆமைக் குஞ்சுகளும் உருவாகின்றன. புவி வெப்பமயமாவதால் ஆண் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து, பாலினச் சமநிலை குலைந்து இந்த அரிய இனம் அழிந்துபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்பட ஆர்வலர்
தொடர்புக்கு: bala.1211@gmail.com

SCROLL FOR NEXT