உயிர் மூச்சு

ஞெகிழி இல்லா பெருங்கடல் - கிழக்கு கடற்கரைச் சாலையில் செயல்படுத்தப்படும் சூழலியல் முன்னெடுப்பு

நிஷா

மனிதர்களின் சுயநலத்தால் கடலில் குவியும் ஞெகிழி கழிவு இன்று உலகின் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து நிற்கிறது. ஞெகிழி கழிவுகளிலிருந்து கடலையும், அதில் வாழும் உயிரினங்களையும் மீட்டெடுத்துக் காக்கும் விதமாகப் பல முன்னெடுப்புகளைச் சூழலியல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தகைய முன்னெடுப்புகளில் ஒன்றே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா’ எனும் தொண்டு நிறுவனம் செயல்படுத்தி வரும் WAVES OF CHANGE எனும் திட்டம்.

கடற்கரை பகுதிகளில் ஞெகிழி கழிவுகள் ஊடுருவுவதைத் தடுத்து, கடலின் தூய்மையைப் பாதுகாக்கும் விதமாகக் கடந்த ஆகஸ்டு 2020 முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரைச் சாலையில் சோழிங்கநல்லூருக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையிலான 35 கிமீ பகுதியில் இருக்கும் பனையூர் குப்பம், சின்ன நீலாங்கரை குப்பம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், சின்னாடி குப்பம், பட்டிபுலம், நெம்மேலி, வடநேம்மேலி, திருவிடந்தை, கோவளம், முட்டுக்காடு, கானத்தூர், தேவநேரி, வெண்புருஷம் ஆகிய 13 மீனவ கிராமங்களில் உள்ள 8,555 குடியிருப்புகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் பிரதான நோக்கங்கள்:

  • கடல், கடற்கரை பகுதிகளில் ஞெகிழி கழிவு ஊடுருவுவதைத் தவிர்த்தல்,
  • முறையான ஞெகிழி கழிவு மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்துதல்
  • ஒரு முறை பயன்படுத்தப்படும் ஞெகிழி பொருட்களின் உபயோகத்தைத் தவிர்த்தல்.
  • ஞெகிழி பொருட்களுக்கு மாற்றாக லாபகரமான பசுமை சார்ந்த சிறு தொழில்களை உருவாக்குதல்
  • ஞெகிழி கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்தல்.
  • உலகின் மிகச் சிறந்த கழிவு மேலாண்மை தொழில்நுட்பங்களை உள்ளூர் அளவில் பரவலாகச் செயல்படுத்துதல்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 'ஞெகிழி இல்லா பெருங்கடல்' என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. அந்த கொண்டாட்டத்தில் கோலப் போட்டி, சுவர் ஓவியம் தீட்டும் போட்டி, கழிவுகளிலிருந்து கலைப்பொருட்களை உருவாக்கும் போட்டி, ஞெகிழிக்கு மாற்றாக இருக்கும் பொருட்களுக்கான கண்காட்சி அரங்கு, இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை கூடம் உள்ளிட்டவை இடம்பெற்றன.

அந்தப் போட்டிகளிலும், நிகழ்வுகளிலும் மக்கள் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர், ஞெகிழி கழிவைக் குறைத்தல், மறு உபயோகம் செய்தல், மறுசுழற்சி செய்தல் போன்றவற்றைக் குறித்த தெளிவான புரிதலையும், விழிப்புணர்வையும் அதில் பங்கேற்றவர்கள் பெற்றனர்.

ஞெகிழி இல்லா பெருங்கடல் என்பது ஒரு பெரும் முயற்சி. அது சாத்தியமாவதற்கு நம் அனைவரின் பங்களிப்பும் தேவை. சிறு துளியே பெரு வெள்ளம் என்பது போல், நம்மிலிருந்து தொடங்கும் சிறு மாற்றமும் கடலின் நலனைப் பாதுகாக்கும், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வை மீட்டெடுக்க உதவும்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

SCROLL FOR NEXT