உயிர் மூச்சு

பள்ளிக்கரணை சதுப்புநில குப்பை மேட்டில் பெரும் தீ

ஆதி

தென் சென்னையின் அமைந்திருக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலக் காட்டுப் பகுதி அருகேயுள்ள குப்பைக் கிடங்கில் நேற்று மாலை தொடங்கி எரிந்துவரும் தீயை உடனே அணைக்கவும் கட்டுப்படுத்தவும் அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சூழலியல் செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய சதுப்புநிலங்கள் பாதுகாப்பு - மேலாண்மை (NWCMP) திட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநிலங்கள் என அறிவிக்கப்பட்ட 94 சதுப்புநிலங்களில் ஒன்று பள்ளிக்கரணை சதுப்புநிலம். 1960களில் 6,000 ஹெக்டேராக இருந்தது பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் தற்போது 690 ஹெக்டேர் மட்டுமே எஞ்சியிருக்கிறது. நாள்தோறும் ஐந்தாயிரம் மெட்ரிக் டன் குப்பை கொட்டப்படும் சென்னை மாநகராட்சியின் மிகப்பெரிய குப்பைக் கிடங்கு பள்ளிக்கரணையின் பெருங்குடி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்துவருகிறது. இதில் குப்பை கொட்டுவதற்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றம் பல முறை கண்டனம் தெரிவித்தும், தொடர்ந்து மாநகராட்சியின் குப்பை கொட்டப்பட்டுவருகிறது.

முன்பு இந்தக் குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ வைத்து குப்பை எரிக்கப்பட்டுவந்தது. அதனால் எரியும் ஞெகிழியிலிருந்து வெளியாகும் டையாக்சின் போன்ற நச்சு வாயுக்கள் சுற்றுவட்டார இளம்தாய்மார்களின் தாய்ப்பாலில் கலந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகக் குப்பை எரிக்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதன்கிழமை மாலையில் தொடங்கி பள்ளிக்கரணை பெருங்குடி குப்பைக் கிடங்கில் குப்பை எரியத் தொடங்கியது. இரவிலும் தொடர்ந்து குப்பை எரிந்துகொண்டிருந்தது. குப்பை எரிவதால் சுற்றுவட்டார மக்கள் பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால், ஏரியில் வாழும் பறவைகள், பூச்சிகள், உயிரினங்கள், தாவரங்கள் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன.

இந்த சதுப்புநிலம் உயிரினப் பன்மை (Bio diversity) மிகுந்த இடமாக உள்ளது; பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் மட்டும் 625 வகைத் தாவரங்கள், உயிரினங்கள் வாழ்கின்றன. சென்னை மாநகருக்குள் பூநாரைகள் (Flamingo) வந்து இரை தேடிச் செல்லும் இடமாகவும் பள்ளிக்கரணை உள்ளது. தற்போது குப்பை எரிந்துகொண்டிருக்கும் பகுதிக்கு எதிரே உள்ள 318 ஹெக்டேர் பகுதியை (Reserved forest) 2019இல் தமிழ்நாடு அரசு காப்புக் காடாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சதுப்புநிலத்தின் ஒரு பகுதியில் எரிந்துவரும் தீ சார்ந்து உருவாகும் பிரச்சினைகள் குறித்து ‘சூழல் அறிவோம்’ விழிப்புணர்வுக் குழுவின் செயல்பாட்டாளர் தீபக் வெங்கடாசலம், சில விஷயங்களைக் கவனப்படுத்துகிறார்:

  • முதல் கட்டமாகக் குப்பை எரிவதை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். கடும் கோடைக் காலமான இந்த நேரத்தில், தீயைக் கட்டுப்படுத்தாவிட்டால் இயற்கைக்கும் சுற்றுவட்டார மக்களுக்கும் மிகப் பெரிய பாதிப்பு உண்டாகும்.
  • சென்னையின் மிகப்பெரிய குப்பை மேடான இந்தக் குப்பை மேடு குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்தி குப்பையை அகற்றத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
  • பஞ்சாயத்து வாரியாக குப்பையைத் தரம் பிரித்து, குப்பை சேகரிப்பு மையங்களைப் பரவலாக்கி, சதுப்புநிலத்தில் குப்பை கொட்டுவதை படிப்படியாகக் குறைக்க வேண்டும்.
  • நில அளவை (survey) செய்து சதுப்புநிலத்தின் அளவையும் எல்லைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்
  • வனத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்தாலும் இன்னும் காப்புக் காடாக (Reserved forest) அறிவிக்கப்படாமல் உள்ள 380 ஹெக்டேர் நிலத்தைக் காப்புக் காடாக அறிவிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு இடைப்பட்ட பகுதியை (Buffer zone) உருவாக்க வேண்டும்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

SCROLL FOR NEXT