‘இயற்கை வேளாண்மை நன்மை தரும்’ என்று சொல்லப்படும் போதெல்லாம், அதை அடித்துச் சாய்க்கும் விதமாக ‘மக்கள் அனைவருக்கும் அதன் மூலம் உணவளிக்க முடியாது’ என்ற வாதத்தையே திரும்பத் திரும்பக் கேட்டு வருகிறோம்.
இந்த வாதம் எவ்வளவு ஆதாரமற்றது என்று சொல்கிறது சே. கோச்சடை- த.வே. நடராசன் தொகுத்த ‘நீடித்த வேளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும்’ என்ற விரிவான நூல்.
‘உலகின் சர்க்கரைக் கிண்ணம்’ என்ற பாராட்டப்படும் அளவுக்குக் கரும்பை அதிகமாகப் பயிரிட்டு, அத்தியாவசியத் தேவையான உணவை இறக்குமதி செய்துவந்த நாடு கியூபா. ஆனால், 1989-ல் சோவியத் ஒன்றியம் பிரிந்த பிறகு கியூபாவால் அப்படி இருக்க முடியவில்லை. இனிமேல் கியூபாவுக்குச் சரிவுதான் என்று நம்பப்பட்டது. ஆனால், அடுத்த 15 ஆண்டுகளில் பெரும் உணவுப் புரட்சியை அந்நாடு நிகழ்த்திக் காட்டியது. அதுதான் இயற்கை வேளாண்-நகர்ப்புற விவசாய இயக்கப் புரட்சி.
அதுவரை தான் மேற்கொண்டு வந்த வேதி வேளாண்மையைத் தள்ளி வைத்துவிட்டுத் தீர்க்கமாகச் செயலில் இறங்கியது கியூப கம்யூனிச அரசு. இதன்மூலம் வேதி உரங்கள்-பூச்சிக்கொல்லிகள் மூலம் மட்டுமே உணவு உற்பத்தி பெருகும் என்ற மூடநம்பிக்கையை உடைத்து இயற்கை வேளாண்மை மூலம் அபரிமித விளைச்சல் சாத்தியம்; பெரிய பண்ணைகள்தான் அதிக உணவு உற்பத்தி செய்ய முடியும் என்ற மூடநம்பிக்கையை உடைத்துச் சிறு நிலங்கள், தெருவோரம், வீட்டு முற்றம், மொட்டை மாடிகளிலேயே அதிக உணவு உற்பத்தி சாத்தியம்;
சிறிய நாடுகள் உணவுப் பற்றாக்குறையைப் போக்கிக்கொள்ள இறக்குமதி செய்தே ஆக வேண்டும் எனப்படும் மூன்றாவது முக்கிய மூடநம்பிக்கையையும் கியூபா உடைத்துள்ளது.
வேளாண்மைத் துறையில் இன்றைக்கு நாம் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சினைகளுக்குக் கியூபா அற்புதமான மாற்று வழிகளைக் காட்டியுள்ளது. பின்பற்றத் தயாராக இருக்கிறோமா?
என்.சி.பி.எச். வெளியீடு,
தொடர்புக்கு: 044-26359906