உயிர் மூச்சு

பசுமை இலக்கியம்: தொலைந்துபோன மழைப் பாடகர்கள்

செய்திப்பிரிவு

எல்லோரையும் ‘தவளை’ என்று எழுதச் சொன்னார் எங்கள் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். நான் ‘தவல’ என்று எழுதி அடி வாங்கினேன். அடித்துக்கொண்டே சொன்னார்… “தண்ணி பிடிக்கிறது தவலை; தண்ணியில இருக்கிறது தவளை’’. இதுதான் தவளை என்றதும் என் மனதில் தத்தித் தாவுவது.

அந்நியமாகிவிட்டன

கோவை சதாசிவம் எழுதித் தடாகம் வெளிட்டுள்ள ‘தவளை நெரிக்கப்பட்ட குரல்’ புத்தகத்தைப் படித்த பிறகுதான் தெரிந்தது சுவாரசியங்கள் பொதிந்த இந்த உயிரினத்தைப் பற்றிய எனது அறியாமை. ஊர்ந்து செல்லாமல், நடந்து செல்லாமல், தத்தித் தாவுகிற அதன் வாழ்க்கை தொடர்ந்து அதைப் பார்க்கத் தூண்டும். கிராம வாழ்க்கையில் அனுபவமேறியவர்களுக்கு தவளையைப் பற்றி கூடுதல் தகவல்கள் தெரிந்திருக்கலாம்.

ஃப்ராக் (frog) என்று சொல்ல மட்டும் தெரிந்து வைத்திருக்கிற இன்றைய குழந்தைகளுக்கு அந்நிய உயிரினமாகிவிட்டன தவளைகள். இந்தப் பின்னணியில் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தன்மையைக் கொண்ட நீர்நில வாழ்வி அது என்பது தெரிந்தாலும்கூடப் பயனில்லை.

நிலஅதிர்வு தெரியும்

தவளைகளைப் பற்றி இப்புத்தகத்தில் ஏராளமான செய்திகளை நுட்பமுடன் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். குட்டையில் வாழ்ந்தாலும்… சொட்டு நீர் குடிக்காது தவளை என்று இவர் எழுதியதைப் படித்தறிந்தபோது, ‘அதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்…’ என்று வாய்விட்டுப் பாடத் தோன்றியது. அதுமட்டுமல்ல நம் மூதாதையர்களில் பட்டறிவின் துணைகொண்டு ‘நீர்நிலை என்பது தவளைகளுக்கு வாழ்விடம்தான், உணவல்ல’ என்று நமக்கெல்லாம் உணர்த்துகிறார்.

‘எங்களுக்கென்று இயற்கை சில மகத்தான நுண் உணர்வுகளை வழங்கியுள்ளது. நிலத்தோடு ஒன்றி வாழ்வதால் நில அடுக்குகளின் உலுக்கு மையங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதை எளிதாக உணர்ந்துகொள்வோம். ஒருவித வாயுத் துகள்களின் கசிவை வைத்துப் பூகம்பம் வருவதை உணர்ந்து நான்கைந்து நாட்களுக்கு முன்பே பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துவிடுவோம்’ என்று ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார் சதாசிவம். எல்லாத் தவளைகளுக்கும் இந்த உணர்வு இருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு சில தவளை இனங்களுக்கு அந்த உணர்வு இருப்பதே இயற்கையின் அதிசயம்தான்.

சுற்றுச்சூழல் சுட்டி

‘சிங்க நடை போட்டுச் சிகரத்தைத் தொடுவோம்’ என்றெல்லாம் பீற்றிக்கொள்கிற ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு இல்லாத ஒரு நுண் உணர்வைக் கொண்டிருக்கிற தவளைகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள விரும்புகிற ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

தவளை யாரையாவது கடித்து விஷமேறிவிட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இருக்கவே இருக்காது, ஏனெனில் தவளைகளுக்குப் பற்களே கிடையாது என்பதுதான் உண்மை. குளமோ, ஆறோ, வாய்க்காலோ அதில் மிச்சம் இருக்கிற ஒன்றிரண்டு தவளைகளை உற்றுப் பாருங்கள். அதன் மீது பச்சை நிறம் படிந்திருந்தால் அது நன்னீர்; அடர் பழுப்பு நிறம் படித்திருந்தால் அந்த நீரே மாசுபட்டது என்கிற தகவல் ஒரு பிளேட் பிரியாணிக்கு, ஒரு பாசுமதி சோறு பதம்!

வெளியீடு: தடாகம், 112, திருவள்ளுவர் சாலை,
திருவான்மியூர், சென்னை 41 / 89399 67179

SCROLL FOR NEXT