உயிர் மூச்சு

முன்னத்தி ஏர் 29: சொத்தை குறைவு, லாபம் அதிகம்

பாமயன்

ராஜபாளையம் இயற்கை உழவர் மணியின் முறைப்படி கத்தரி நாற்றுகளில் முதலில் நோய்த்தொற்று நீக்கப்படுகிறது. அதற்குப் பிறகு, ஏற்கெனவே நன்கு தயாரிக்கப்பட்ட நிலத்தில் பாத்திகள் அமைக்கப்பட்டு அவற்றில் நாற்றுகள் நடப்படுகின்றன.

அடியுரமாகத் தொழுவுரம், வேப்பம் புண்ணாக்கு, சாம்பல் ஆகிய கலவை உரத்தை மணி இடுகிறார். இத்தனைக்கும் இவர் அசோஸ்பைரில்லம் போன்ற உயிர் உரங்கள், உயிர்மப் பூச்சிக்கொல்லிகள், நோய்த்தடுப்பான்கள் எதையும் பயன்படுத்தவில்லை. ஆனால், தனது பண்ணையிலேயே பலவிதமான கரைசல்களைத் தயாரித்துப் பயன்படுத்திக்கொள்கிறார்.

புதிய பரிசோதனைகள்

இருபத்தைந்து நாட்கள் கழித்து விளக்குப் பொறிகள் மூலம் தீமை செய்யும் பூச்சிகளைப் பிடித்து அடித்துவிடுகிறார். வெள்ளை ஈ, அசுவினிப் பூச்சிகள், காய்ப்புழுக்கள், தண்டுத்துளைப்பான்கள், வேர்ப்புழுக்கள் என்று கத்தரியைத் தாக்கும் பூச்சிகள் நிறைய உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கரைசல்களை மாற்றிமாற்றிப் பயன்படுத்துகிறார்.

குறிப்பாக, மீன்பாகு என்ற திரவ ஊட்டத்தை அனைத்துக் கரைசல்களோடும் சேர்த்துத் தெளிக்கிறார். முக்கூட்டு எண்ணெய் என்ற ஒரு முறையைப் பின்பற்றிப் புழுக்களைக் கட்டுப்படுத்துகிறார். ஏதாவது புதிய தொழில்நுட்பம் பற்றி தெரியவந்தால், உடனடியாக அதைப் பரிசோதனை செய்து பார்த்துவிடுகிறார். இவரது பார்வை அந்தத் தொழில்நுட்பம் தற்சார்புடையதாக இருக்கிறதா? இயற்கையோடு இயைந்ததாக உள்ளதா என்பது மட்டுமே.

ரசாயனத்தில் பாதி சொத்தை

இவரது கத்தரி நான்கு மாதங்கள்வரை தொடர்ச்சியாகக் காய்க்கிறது. ரசாயன வேளாண்மை செய்யும் பக்கத்துத் தோட்ட உழவர்கள், மூன்று மாதங்கள் மட்டுமே கத்தரி அறுவடை செய்கின்றனர். அத்துடன் காய்களில் ‘சொத்தை' எனப்படும் புழு தாக்கப்பட்ட காய்கள் இவரது பண்ணையில் 10 முதல் இருபது விழுக்காடு மட்டுமே வருகிறது. ஆனால், ரசாயன முறையில் 50 விழுக்காடு அளவில், அதாவது பாதிக்குப் பாதி சொத்தை வருகிறது.

“ரசாயன முறையில் விளைச்சல் கூடுதலாக உள்ளது உண்மைதான். ஆனால், இயற்கை முறையில் நான் இன்னும் சரியான உர மேலாண்மை செய்தால் ரசாயன விளைச்சலை விஞ்ச முடியும்” என்கிறார் மணி.

எதில் லாபம் அதிகம்?

இவரது கணக்குப்படி வாரத்தில் இரண்டு முறை அறுவடை நடக்கிறது. அரை ஏக்கரில் ஒரு முறைக்கு 200 கிலோ வருகிறது. அதில் 50 கிலோ (சொத்தை) கழிவு. ஆக, 150 கிலோ விற்பனைக்குக் கிடைக்கிறது. நான்கு மாதங்கள்வரை அறுவடை தொடர்கிறது.

எது அதிக லாபம் தருகிறது என்பதை அறிய இயற்கை கத்தரி வேளாண்மை, ரசாயனக் கத்தரி வேளாண்மை வரவு செலவை ஒப்பிட்டால் தெரிந்துவிடும். (பார்க்க: பெட்டிச் செய்தி)

இவரது கத்தரியின் சுவையையும் தரத்தையும் அறிந்தவர்கள் விரும்பி வாங்குகின்றனர். இவருடைய இயற்கை முறைக் கத்தரிக்காய் கூடுதல் விலைக்கு விற்கவில்லை. பொதுச் சந்தையில்தான் மணி விற்கிறார். விலையும்கூட ரசாயன வேளாண்மைக்கான விலையே கிடைக்கிறது. ஆனால், இவரது காய் சந்தைக்கு வந்தவுடன் விற்றுத் தீர்ந்துவிடுகிறது. சில நண்பர்கள் இவரது பண்ணையில் வந்தே வாங்கியும் செல்கின்றனர்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

மணி தொடர்புக்கு: 98421 21562

SCROLL FOR NEXT