உயிர் மூச்சு

புதிய சூழலியல் நூல்கள்

ஆதி

கன்னியாகுமரி முக்குவர்
வறீதையா கான்ஸ்தந்தின், ஆதி பதிப்பகம்,
தொடர்புக்கு: 99948 80005

கடல், மீனவர்கள் குறித்து காத்திரமான எழுத்தைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருபவர் பேராசிரியர் வறீதையா. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்குவர்கள் குறித்த புரிதலை வழங்கும் இனவரைவியல் நூலாக இது எழுதப்பட்டுள்ளது. முக்குவர் தொழில், பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை முறை சிக்கல்கள், அரசியல், கத்தோலிக்கத் திருச்சபையின் பங்களிப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆழமாகவும், திறந்த மனத்துடன் ஆசிரியர் ஆராய்ந்துள்ளார்.

கார்ப்பரேட் கோடரி
நக்கீரன், காடோடி, வாட்ஸ்அப் தொடர்புக்கு: 80727 30977

குழந்தைகள் அதிகம் விரும்பும் சாக்லெட், பெரியவர்கள் அதிகம் விரும்பும் காபி, ஆடைகளுக்கு ஆதாரமாக இருக்கும் பருத்தி போன்றவற்றுக்கும் சூழலியல் சீர்கேடுகளுக்கும் கார்பரேட் அரசியலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்க வாய்ப்பு உண்டா? உண்டு என்கிறது இந்த நூல். உலக நிறுவனங்கள் சூழலியலைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலமும் நடத்தும் ஆதிக்கத்தையும் அழிவையும் இந்த நூல் விவரிக்கிறது.

கடலும் மனிதரும்
நாராயணி சுப்ரமணியன், வாசக சாலை,
தொடர்புக்கு: 99426 33833

சூழலியல் குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் இளம் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் நாராயணி. அடிப்படையில் கடல்சார் ஆய்வாள ரான அவர், கடல், கடற்கரை உயிரினங்கள் குறித்து அதிகம் எழுதிவருகிறார். கடலுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தொடர்புகளில் அவருடைய இந்த நூல் கவனம் குவிக்கிறது. குறிப்பாக, நாம் அதிகம் அறியாத கடல் உயிரினங்கள் குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.
இந்திய வண்ணத்துப்பூச்சியியலாளர்கள்

ஏ. சண்முகானந்தம், உயிர் பதிப்பகம்,
தொடர்புக்கு: 98403 64783

18ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த டென்மார்க் மருத்துவர் யோஹன் ஜெரார்ட் கோனிங் வண்ணத்துப்பூச்சிகள் குறித்து ஆராய்ந்தார். இந்திய வண்ணத்துப் பூச்சிகள் குறித்த தொடக்கக் கால அறிவியல் ஆய்வாக இதைக் கருதலாம். அவருக்குப் பிறகு வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னாயே தொடங்கி பலரும் இந்திய வண்ணத்துப் பூச்சிகளை ஆராய்ந்திருக்கிறார்கள். அந்த ஆய்வுகள் வழி வண்ணத்துப்பூச்சிகளை அறிமுகம் செய்கிறது இந்த நூல்.

காலநிலை மாநாடு பேச மறந்தவை
கோவை சதாசிவம், குறிஞ்சி பதிப்பகம், தொடர்புக்கு: 99650 75221

காலநிலை மாற்றம் மிகப் பெரிய பேசுபொரு ளாக மாறாத சூழ்நிலையில், அதன் மோசமான தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட இருப்பவர்கள் குழந்தைகள்தான். காலநிலைப் பேரிடர்களால் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் குழந்தை கள், ‘எங்கள் எதிர்காலம் என்னவாயிற்று’ என்று உலக மக்களிடம் கேட்பதாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கான வார்த்தைகளைத் தேடி இந்த நூல் பயணிக்கிறது.

கங்கை
பொ. முத்துக்குமரன், ம. சாலமன் பெர்னாட்ஷா, என்.சி.பி.எச்.,
தொடர்புக்கு: 044 26359906

உலகின் பேராறுகளில் ஒன்றான கங்கை, இந்தியாவில் புனிதமாக மதிக்கப்படுகிறது. ஆனால், அந்த ஆறு தன் உயிர்ப்பை இழந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்துள்ள கங்கை ஆறு, இன்றைக்கு சூழலியல் சீர்கேட்டின் அடையாளமாக மாறிவிட்டது. கங்கையை மீட்க எத்தனையோ திட்டங்கள் இடப்பட்டாலும், அது இழந்த உயிர்ப்பை மீட்க முடியவில்லை. கங்கை குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளது இந்த நூல்.

இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள்
அறிமுகக் களக்கையேடு, தொடர்புக்கு:
https://birdsoframanathapuram.wordpress.com/

மாவட்ட வாரியாக பறவைகள் கையேடு வெளியாகி வரும் சூழலில் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை அந்த மாவட்டத்துக்கான பறவைகள் கையேட்டை வண்ணத்தில் வெளியிட்டுள்ளது. கஞ்சிரங்குளம், சித்திரங்குடி, மேல்-கீழ் செல்வனூர், தேர்த்தங்கல், சக்கரக்கோட்டை ஆகிய பறவை சரணாலயங்களுடன் மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் எனும் பெருமைமிகு பகுதியையும் கொண்டது ராமநாதபுரம் மாவட்டம். 160 பறவைகளைப் பற்றிப் படங்களுடன் விவரித்துள்ளதன் மூலம், அந்த மாவட்டத்தின் பறவை வளத்தை இந்த நூல் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.

ஜே.டி. பெர்னாலின் வரலாற்றில் அறிவியல்
வி. முருகன், பாரதி புத்தகாலயம்,
தொடர்புக்கு: 044-24332424

போலி அறிவியல், அறிவியல் தொழில் நுட்பத்துக்கு எதிரான பிற்போக்குக் கருத்து கள் எல்லா காலத்திலும் உண்டு. அந்தக் கருத்துகள் அறிவியலை எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் சமூகத்தின் முன்னேற்றம், சமூக மேம்பாட்டில் அறிவியலின் பங்கு குறித்து ஆராய்ந்தது ஜே.டி. பெர்னால் ‘வரலாற்றில் அறிவியல்’ நூல். அந்த நூலின் பின்புலத்தைப் பேராசிரியர் வி. முருகன் இந்தத் தமிழ் நூலில் அலசியிருக்கிறார்.

அப்பாவும் மகனும்
பொ. திருகூடசுந்தரம், முல்லை பதிப்பகம், தொடர்புக்கு: 9840358301

எல்லாருக்கும், குறிப்பாகக் குழந்தை களுக்கு ஒரு விஷயம் எப்படி நடக்கிறது, எப்படி இயங்கு கிறது என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கும். அறிவியல் காரணங்களைத் தெரிந்து கொள்ள விழையும் இந்த ஆர்வத்துக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர்களும் தீனி போட்டிருக்கிறார்கள். அந்த வகையில் பொ. திருகூடசுந்தரம் 253 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள நூல் இது. தற்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது.

இவர்கள் இல்லாமல்
பீ. கலீல் அகமது, மலர் புக்ஸ், தொடர்புக்கு: 93828 53646

அறிவியலின் வரலாற்றில், குறிப்பாக மேற்கத்திய நவீன அறிவியல் முன்வைத்துவரும் வரலாற்றில் இஸ்லாமிய அறிஞர்களும் இஸ்லாமியர்களின் அறிவியல் பங்களிப்பும் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கின்றன. நிலவில் 24 பகுதிகளுக்கு இஸ்லாமிய அறிவியலாளர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ள தகவல் பலருக்கும் தெரியாது. நவீன உலகுக்கு கேமரா, காபி, சோப்பு, காகிதம் எப்படி வந்தது, அதற்கு இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு என்ன என்று சொல்கிறது இந்தப் புத்தகம். கண்டுபிடிப்புகளின் வழியாக அறிவியலாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT