சின்னஞ்சிறிய ஊர்த் தேன்சிட்டுக்கள் என் வாழ்க்கையை இப்படிப் புரட்டிப் போடும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. வீடு, பள்ளிக்கூடம், என் மாணவ மாணவியர்கள் எனச் சிறிய உலகத்தையே சுற்றி வந்த எனது மனச்சிறகை விரிக்க வைத்துப் புதிய உலகுக்கு அழைத்துச் சென்றவை பறவைகளே. ஆசிரியர் பணி முடிந்ததும் வீட்டுக்குள் வந்து அடையும் எனது பண்பை மாற்றி ஆறு, ஏரி, குளம், மலை, கடல், புல்வெளி என்று என்னை வெளியே இழுத்துவந்து, பல நில அமைப்புகளைக் காணவைத்த புவியியல் ஆசிரியரும் பறவைகள்தாம். இயற்கையைப் புரிந்துகொள்ள வைத்தவையும் பறவைகளே.
விடுமுறை என்றால் மலைகள், நீர்நிலைகள், சமவெளிகள் எனப் பறவைகளைப் போலப் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்படி ஓடிக்கொண்டிருந்த வேளையில் ஒரு பறவை என்னை இரண்டு மாதங்களுக்கு வீட்டிலேயே கட்டிப்போட்டு வைத்தது.
புதிய அனுபவம்
எங்கள் வீட்டு முற்றத்தில் வளர்ந்திருக்கும் முல்லைச் செடியில் ஜூலை மாதம் 6ஆம் நாள் காலை ஒரு ஜோடி ஊர் தேன்சிட்டுகள் விளையாடிக்கொண்டிருந்தன. அது வழக்கமானது என்று கடந்து சென்றேன். ஆனால், அவை தொடர்ச்சியாக வருவதும் செல்வதுமாக இருந்தன. இது எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. நான் பறவை ஆர்வலராக இல்லையென்றால் இதைப் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டேன்.
தொடர்ந்து உற்றுநோக்கியபோது விஷயம் புரிந்தது. அந்தப் பறவைகள் கூடுகட்டத் தொடங்கின. அதுவரை எந்தப் பறவையையும் தொடர்ந்து கண்காணித்தது இல்லை. இப்படி நம் வீட்டிலேயே தேன்சிட்டுகள் கூடமைத்து இனப்பெருக்கம் செய்வதைப் பதிவுசெய்ய முடிந்தது நல்வாய்ப்புதான். நாள்தோறும் கண்காணிக்கத் தொடங்கினேன்.
அந்தத் தேன்சிட்டுகள் மென்மையான நார், சிறு குச்சிகள், சிலந்தி வலை, காய்ந்த இலைச் சருகு ஆகியவற்றைக் கொண்டு கூடமைத்தன. பன்னிரண்டு நாட்களில் கூட்டைக் கட்டிமுடித்தன. பெண் பறவை மட்டுமே கூடு கட்டியது. ஆண் பறவை அருகிலிருந்த கொய்யா மரத்தில் அமர்ந்து மேற்பார்வையிட்டது.
எங்கள் வீட்டுக் கதவைத் திறந்தால் ஐந்தடி தொலைவிலிருக்கும் முல்லைக் கொடியில் கூடு இருப்பது தெரியும். அவ்வளவு நெருக்கம். நாங்கள் இருப்பதையோ, அடிக்கடி கதவைத் திறந்து ஒளிப்படம் எடுப்பதையோ பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் கருமமே கண்ணாகக் கூடு கட்டியது பெண் தேன்சிட்டு.
கூடு கட்டும்போதே பெண் பறவை கூட்டின் உள்ளே அமர்ந்து, அந்த இடம் அடைகாப்பதற்கு ஏற்புடையதாக உள்ளதா எனப் பார்த்துக் கொண்டது. கூடு சிறியதாக இருந்தால் கூட்டுக்குள் நுழைந்து உடலை ஒரு குலுக்கு குலுக்கிக் கூட்டைப் பெரிதாக்கும். கூடு கட்டுவதற்கு எடுத்துக்கொண்ட உழைப்பு, வேகம் போன்றவற்றை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பறந்து பறந்து சென்று பொருட்களைத் திரட்டி, வேகமாகக் கொடியில் கோத்துப் பின்னி, கூடு அமைப்பதில் வெளிப்படுத்திய வேலைத் திறன் அபாரமானது. திட்டமிடல், வேகம், பணி நேர்த்தி, குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்தல் போன்ற பண்புகளை இந்தப் பறவைகள் புரிய வைத்தன.
அடைகாத்தல்
கூடு கட்டி முடிக்கப்பட்ட பதிமூன்றாவது நாள் பெண் பறவை முதல் முட்டையை இட்டது. அடுத்த நாள் இரண்டாம் முட்டையை இட்டது. முட்டை அழகாக நீள்வட்ட வடிவில் வெளிர் பச்சை நிறத்தில் ஆங்காங்கே சிறு புள்ளிகளுடன் சிறிய அளவிலிருந்தது. கூடு கட்டுவதில் காட்டிய வேகத்திற்கு மாறாக நிதானமும் பொறுமையும் கொண்டதாகப் பெண் பறவை இப்போது தென்பட்டது. பெண் பறவை மட்டுமே முட்டைகளை அடைகாத்தது.
ஆண் பறவை கொய்யா மரத்தில் அமர்ந்து பெண் பறவைக்குத் துணையாகக் காவல் காத்துக்கொண்டிருந்தது. பெண் பறவை உணவுக்காகவும் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் மட்டுமே கூட்டை விட்டு வெளியேறியது. உணவு கிடைத்தவுடன் கொய்யா மரத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தது. அப்போது தனது அலகுகளால் இறகுகளை மென்மையாகக் கோதிவிட்டு உடலைத் தூய்மைப்படுத்திக்கொண்டது. அடைகாக்கும் பணி 14 நாட்கள் நீண்டது.
குஞ்சு பொரிந்தது
கூடு கட்டும்போது எங்கள் வீட்டுக் கதவைத் திறப்பதாலோ அப்பகுதிக்குச் செல்வதாலோ பறவைகளுக்கு இடையூறு ஏற்பட்டதுபோல் தோன்றவில்லை. ஆனால், அடைகாக்கும்பொழுது கதவைத் திறந்தாலோ அந்த வழியே மாடிக்குச் சென்றாலோ அச்சத்தில் கூட்டைவிட்டு அகன்று கொய்யா மரத்தில் அமர்ந்துகொள்ளும். அதனால், வீட்டின் கதவைத் திறக்காமலேயே வைத்துவிட்டோம். மாடிக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டோம்.
வீட்டு ஜன்னலிலிருந்து கண்காணிக்கத் தொடங்கினேன். இடையூறு செய்யாமல் அதனுடைய செயல்பாடுகளைப் பதிவுசெய்ய வேண்டும் என்று கருதினேன். ஒரு சிசிடிவி கேமராவைப் பொருத்திவிட்டால் அந்தப் பக்கம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை, அதற்கு இடையூறும் இருக்காது. கணினி மூலமே அதனைத் தொடர்ந்து கண்காணித்துக் கொள்ளலாம் என்று முடிவுசெய்தேன். அதனால், கூடு இருந்த இடத்திற்கு ஐந்துஅடி தொலைவில் ஒரு சிசிடிவி கேமராவைப் பொருத்திக் கணினியுடன் இணைத்துவிட்டேன். இதைச் செய்வதற்கும் தேன்சிட்டு குஞ்சு பொரிப்பதற்கும் சரியாக இருந்தது.
ஆகஸ்ட் மாதம் மூன்றாம் நாள் அதிகாலையில் முட்டை பொரிந்து குஞ்சுகள் வெளிப்பட்டன. கூடு அமைத்தல், அடைகாத்தலில் பெண் பறவை மட்டுமே பங்கேற்றது. உணவூட்டலில் ஆண் பறவையும் பங்குகொண்டது. பொரித்த முட்டை ஓடுகளை அவை இரண்டும் சேர்ந்து அகற்றிக் கூட்டைத் தூய்மைப்படுத்தின. இளம் குஞ்சுகளில் சிறு சிறு அசைவுகள் மட்டுமே வெளிப்பட்டன. அவை எவ்வித ஒலியும் எழுப்பவில்லை. கிட்டத்தட்ட 16 நாள்கள் இளம் குஞ்சுகளுக்குப் பெற்றோர் உணவூட்டின.
முதல் ஐந்து நாட்களுக்குப் பாதி செரிமானமான உணவையே இளம் பறவைகளுக்குப் பெற்றோர் வழங்கின. முதலில் உணவை விழுங்கி, அவற்றை வாய்க்குக் கொண்டுவந்து (Regurgitate) குஞ்சுகளுக்கு ஊட்டின. ஆறாவது நாள் முதல் சிலந்தி, புழு, சிறிய பூச்சிகள் போன்ற புரதச் சத்து மிகுந்த உணவு வகைகளை நேரடியாகக் குஞ்சுகளுக்கு ஊட்டின. இச்செயல்களோடு கழிவுகளை அகற்றுதலும் தவறாமல் நடந்தது. இளம் குஞ்சுகளின் எச்சங்கள் கூட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டு, 15 மீட்டர் தொலைவில் உள்ள புதருக்கு அருகில் போடப்பட்டன.
ஆண் பறவை விரைவாக உணவை ஊட்டிவிட்டுச் சென்றுவிடும். ஆனால், பெண் பறவை உணவு ஊட்டிய பின் சிறிது நேரம் கூட்டுக்கு வெளியே காத்திருக்கும். இளம் பறவைகள் எச்சமிட்டவுடன் உடனடியாக எடுத்துச் செல்வதற்காகவே அப்படி அது காத்திருப்பது புரிந்தது. தொடர்ந்து கண்காணித்ததில் ஒரு நாளில் 86-லிருந்து 138 முறை பெற்றோர் உணவு கொண்டுவந்து குஞ்சுகளுக்குக் கொடுத்துச் சென்றுள்ளன. அதேபோல இளம் பறவைகளின் கழிவைக் கூட்டிலிருந்து ஒரு நாளைக்கு 12 முதல் 20 முறை அவை அப்புறப்படுத்தியுள்ளன.
பறத்தல் எனும் சுதந்திரம்
இறுதியில் அந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வு நடைபெற்றது. உணவூட்ட ஆரம்பித்து 16ஆம் நாளில் முதல் குஞ்சு கூட்டை விட்டு வெளியே கீழே விழுந்து தரையில் தத்தித் தத்திப் பறந்தது. சிறிது நேரத்தில் இரண்டாவது குஞ்சும் கூட்டைவிட்டு வெளியே வந்தது. இரு இளம் பறவைகளும் கூட்டை விட்டு வெளியேறியது முதல் தாய்ப்பறவை குஞ்சுகளை நோக்கிச் சத்தமிட்டுக்கொண்டே இருந்தது. சற்று நேரத்தில் ஆண் பறவை வந்தவுடன் தாய்ப்பறவை நிம்மதி அடைந்து சத்தமிடுவதை நிறுத்திக்கொண்டது. தந்தை பறவை அந்தத் தருணத்தைக் கையாண்டு இரண்டு குஞ்சுகளுக்கும் வழிகாட்டி அருகே உள்ள மரங்களுக்குப் பறந்து செல்லக் கற்றுக்கொடுத்தது. ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு எட்டாவது முயற்சியில் இரு இளம் பறவைகளும் 10 மீட்டர் தொலைவில் உள்ள பெரிய வேப்ப மரத்திற்குப் பறந்து சென்றன.
அடுத்த இரண்டு நாட்களுக்குக் குஞ்சு களுக்குப் பறத்தல், உணவு தேடுதல் போன்ற பயிற்சிகளைப் பெற்றோர் கொடுத்தன. ஒரு புதிய தலைமுறையின் உதயம் மகிழ்ச்சிகரமாக ஆரம்பமானது. எனது உற்றுநோக்கலும் மகிழ்வுடன் நிறைவுற்றது. சந்ததியுடன் பெற்றோர் இனிதே புறப்பட்டுச் சென்றன. அவற்றின் கூடு இன்னமும் அங்கே தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அந்தக் கூடு ஒரு தலைமுறையின் வாழ்க்கையை அருகிலிருந்து பார்த்த அனுபவத்தை அமைதியாகச் சொல்கிறது.
இப்படி ஒவ்வொருவரும் தங்களுடைய சுற்றுப் புறத்தில் உள்ள பறவைகளை உற்றுநோக்கலாம். அவற்றின் செயல்பாடுகளைக் கவனிக்கலாம். அவை இயற்கைக்கும் நமக்கும் செய்யும் நன்மை களை எண்ணிப்பாருங்கள். பறவைகளையும் இயற்கையையும் பூமியையும் நேசிக்கும் ஒரு புதிய தலைமுறை நிச்சயம் உருவாகும்.
கட்டுரையாளர், அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை
மின்னஞ்சல்: vadivu.senthilkumar@gmail.com