உயிர் மூச்சு

பாறுக் கழுகுகளைத் தேடி...

செய்திப்பிரிவு

பாறுக் கழுகுகள் எனப்படுபவை இயற்கை நமக்களித்த சிறந்த துப்புரவாளர்கள். காடுகளில் இறக்கும் உயிரினங்கள், கால்நடைக் கழிவுகளை உண்டு இயற்கைக்கும் மனிதர்களுக்கும் பெரும்சேவை புரிந்துவந்தன. 50 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நாட்டில் வெண்முதுகுப் பாறு, கருங்கழுத்துப் பாறு, மஞ்சள்முகப் பாறு, செந்தலைப் பாறு என நான்கு வகைப் பாறுக் கழுகுகள் வாழ்ந்துவந்தன. கம்பீரமான இந்தப் பாறுக் கழுகுகள் தமிழ்நாட்டுக் காடுகளில் உயிர் பிழைத்திருக்க இன்றைக்குப் போராடிக்கொண்டிருக்கின்றன.

சொற்ப எண்ணிக்கையில் எஞ்சியிருக்கும் பாறுக் கழுகு களைக் காப்பாற்ற சில முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் பாறுக் கழுகு களைக் காப்பாற்றச் செயல்பட்டுவரும் ‘அருளகம்’ அமைப்பைச் சேர்ந்த சு. பாரதிதாசன் ‘பாறுக் கழுகுகளைத் தேடி - In search of Vultures’ என்கிற இரு மொழி நூலை எழுதியுள்ளார். பாறுக் கழுகுகளைப் பற்றி முழுமையான தகவல்களை வழங்கும் இந்த நூல் நிறைய வண்ணப்படங்களுடன் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சன்மார் நிறுவனத்தின் ஒரு பிரிவாகச் செயல்பட்டுவரும் கலம்க்ரியா அமைப்பின் சந்திரா சங்கர், நூலைப் பதிப்பித்துள்ளார்.

காட்டில் பாறுக் கழுகுகள் குறைந்ததற்கான காரணம், பாறுக் கழுகுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான பண்பாட்டுத் தொடர்பு, பாறுக் கழுகுகள் பெருமளவில் இறக்கக் காரணமாக இருக்கும் கால்நடைகளுக்கு வழங்கப்படும் டைக்ளோஃபெனாக் வலிநிவாரணி, அந்த வலிநிவாரணி பயன்பாட்டைத் தடைசெய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டரீதியான முயற்சிகள் உள்ளிட்டவற்றை இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. தமிழகக் காட்டுயிர்ப் பாதுகாப்பு வரலாற்றில் இந்த நூல் ஒரு முக்கிய ஆவணமாகத் திகழும். இயற்கை வளப் பாதுகாப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு உதவும் வழிகாட்டியாகவும் இருக்கும்.

பூவுலகில் எந்த ஓர் உயிரினம் அற்றுப்போனாலும், அது உணவுச் சங்கிலியைக் கடுமையாகப் பாதிக்கும்; சூழலியல் சமநிலையையும் சேர்த்தே குலைக்கும். எனவே, உயிரினங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் பாறுக் கழுகைப் போன்று அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட பறவைகளை மீட்டெடுக்க முடியும் என்கிறார் சு. பாரதிதாசன்.

காட்டுப் பகுதிகளில் விபத்துகளால் பலியாகும் உயிரினங்களைப் புதைப்பதற்கு மாறாக, பாறுக் கழுகுகள் சாப்பிடுவதற்காக விட்டுவிட வேண்டும். இதன் மூலம் பாறுக் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் பாரதிதாசன் கோரிக்கை விடுக்கிறார்.

நூலைப் பெறுவதற்கு: 044 28128051 / 52

மின்னஞ்சல்: k-kriya-1@sanmargroup.com

SCROLL FOR NEXT