சிறு வயதில் நண்பன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது குளியலறை அருகே புழு ஒன்று ஊர்வதைப் பார்த்து நாங்கள் கூச்சலிட, அங்கே பதற்றத்துடன் வந்த நண்பனின் பாட்டி ‘இது புழு இல்ல, செவிட்டுப் பாம்பு’ எனச் சொன்னது எங்களுக்குக் கூடுதல் அச்சத்தைக் கொடுத்தது. அங்கிருந்து விலகி நின்று நாங்கள் பாம்பைப் பார்த்துக்கொண்டிருக்க, கையில் காகிதமும் தீப்பெட்டியுமாகப் பாட்டி வந்தார். பாம்பால் தரையில் வேகமாகச் செல்ல முடியவில்லை. அவர் காகிதத்தைப் பாம்பின் அருகில் வைத்தபடி ஈர்க்குச்சியால் பாம்பை அதில் தள்ளி தாளை வேகமாகப் பொட்டலமிட்டார். அவர் செயல் எங்களுக்குப் புரியாதிருக்க, அடுத்த நொடியே பொட்டலத்தில் தீ வைத்தார். தீ கொழுந்துவிட்டு எரிய, பாம்பின் கருகிய சடலமே மிஞ்சியது.
“நாம தூங்கிட்டு இருக்கும்போது இந்தப் பாம்பு நம்மோட காதுக்குள்ள போயிட்டா, பின்ன காது கேக்காம போயிடுமாம். இத அடிச்சா சீக்கிரத்துல சாகாதாம், அதனாலதான் தீ வச்சி எரிச்சேன்” எனப் பாட்டி சொன்னார். மனிதர்களின் காதுகளில் நுழைய இப்பாம்பிற்கு என்ன தேவையிருக்கிறது என்கிற கேள்விக்கு, அன்று யாரிடமும் பதில் இல்லை. பல வருடங்கள் கடந்த நிலையில் இன்றும் இப்பாம்பைப் பார்த்தால் இதையேதான் பெரும்பாலானவர்கள் செய்கி றார்கள் என்பது வருத்தத்திற்கு உரியது.
புழுவல்ல, பாம்பு
இந்தியாவில் காணப்படும் பாம்பினங் களில் மிகச் சிறியது இந்த நஞ்சற்ற புழுப்பாம்பு (Brahminy Worm Snake-Indotyphlops braminus). இப்பாம்பில் பல இனங்கள் இருந்தாலும் ‘இன்டோடைப்லோப்ஸ்’ பேரினத்தில் எட்டு வகையான இனங்கள் அறியப்பட்டுள்ளன. அதில் ‘பிராமினஸ்’ பெரும்பான்மையான நிலப்பரப்பில் காணக் கூடிய இனமாக இருக்கிறது. மண்ணுக்குள் வாசம் செய்யும் இவற்றால் கடினமான மண்ணைத் துளைத்துச் செல்ல இயலாது. ஈரமான, இறுக்கமற்ற மண்ணில் எளிதில் நுழைந்து வாழ ஏதுவான உடலமைப்பைப் பெற்றிருக்கிறது.
அரையடிக்கும் சற்றுக் கூடுதலாக வளரும் இப்பாம்பு பால்பாயின்ட் பேனாவின் ரீபிள் அளவு பருமனில், சீரான உருளையாக நீண்டிருக்கிறது. நீண்ட தலையில் வட்டமான முகவாய், சிறிய கருநிறக் கண், தெளிவற்ற கழுத்து, கூம்பு வடிவக் குட்டையான வாலைக் கொண்டிருக்கிறது. வாலின் நுனியில் காணப்படும் கூரிய முள் போன்ற அமைப்பு, பாம்புகளைக் கையாளும்பொழுது தோலில் அழுத்தும். இது ஒரு தற்காப்பு நடவடிக்கையே. இதனால் பாதிப்பில்லை.
மென்மையான செதில்களுடன் வழவழப் பாகத் தோற்றமளிக்கிறது. உடலின் மேலே ஒரே நிறமாக அடர் பழுப்பாகவோ இளம்பழுப்பாகவோ காணப்படலாம். அடி வயிற்றுப் பகுதி மேலிடலைவிடச் சற்று வெளிறிக் காணப் படுகிறது. இதன் உடல் செதில்களும் பிளவுபட்ட நாக்கும் இதை மண்புழுக்களிலிருந்து எளிதில் வேறுபடுத்தி அறிய உதவுகின்றன.
ஆராய்ச்சி தேவை
தோட்டத்தில் மண்ணைத் தோண்டும் பொழுது, பூந்தொட்டிகள், கற்குவியல்கள், மக்கிய இலைகள் அல்லது மண்ணில் கிடக்கும் மரக்கட்டைகளை ஒதுக்கும்பொழுது எனப் பலமுறை இப்பாம்பைப் பார்த்திருக்கிறேன். சில நேரம் வீட்டினுள், குறிப்பாகக் குளியலறையில் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் ஈரமான பகுதியையே விரும்புகிறது. அதன் வாழ்விடத்தில் கிடைக்கக்கூடிய சிறு உயிரினங்களும் அதன் இளம் உயிரிகளுமே இதன் உணவு. இவ்வினத்தில் ஆண் பாம்புகள் இல்லை. பெண் பாம்புகள் ‘பார்த்தீனோஜெனடிக்’ எனப்படும் பாலினமற்ற இனப்பெருக்க முறையில் முட்டையிடுகின்றன. நாடு முழுவதும் காணப்படும் இவ்வினம் அலங்காரத் தாவரங்களோடு சேர்த்து எடுத்துச் செல்லப்படும் மண்ணின் வழியே பிற நாடுகளுக்குப் பரவி வாழ்ந்து கொண்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
மிகச் சிறிய பாம்பினமான இது, இரவாடி வாழ்க்கையைப் பெற்று மண்ணினுள் துளைத்து வாழும் தன்மையைப் பெற்றிருப்பதால் இதன் செதில் அமைப்பையோ, பிற அங்க அடையாளத்தையோ, அதன் பண்பியல்புகளையோ நம்மால் கண்டுணர முடியவில்லை. இவை சார்ந்த ஆராய்ச்சியை முன்னெடுக்கும்பொழுது அவற்றை ஆழ்ந்து அறிவதோடு, அதன் பாதுகாப்பிற்கும் பங்களிக்க முடியும்.
ஒரு மழைச்சாரலில் வீட்டினுள் புழுப்பாம்பு நெளிவதைப் பார்த்து குழந்தைகள் என்னிடம் சொல்ல, தாளின் உதவியால் பாம்பை மெல்ல எடுத்து தோட்டத்தின் ஈரமான பகுதியில் விட்டோம். பாம்பு மெல்ல மண்ணுள் நுழைந்து சென்றதைப் பார்த்து குழந்தைகள் குதூகலத்துடன் கூச்சலிட்டனர்.
கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: oorvanapalli@gmail.com