உயிர் மூச்சு

பேசும் படம்: வண்ணங்களின் பேருலகு!

செய்திப்பிரிவு

ஒரு காலத்தில் ஒளிப்படக் கருவியில் சிறைப் பிடிக்கப்படும் படங்களைப் போலத் துல்லியமாக ஓவியம் வரைவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்கள் ஓவியர்கள். இன்றைக்கு ஒளிப்படக் கலை தொழில்நுட்பங்கள் பரவலாகிவிட்ட நிலையில், ஓவியம் போல ஒளிப்படங்கள் எடுப்பதையே பல கலைஞர்கள் சவாலாக நினைக்கிறார்கள்.

கர்நாடகத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். ரவிபிரகாஷின் இயற்கை தொடர்பான மேக்ரோ ஒளிப்படங்களை, ஓவியம் போன்ற ஒளிப்படங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக நிச்சயமாகச் சொல்லலாம். லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் அவருடைய ஒளிப்படங்களை அங்கீகரித்துள்ளது.

ஊர் திரும்பல்

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மடியில் அழகு சொட்ட அமைந்திருக்கும் மலைநாடு பகுதியில் உள்ளது ஹோசஹள்ளி கிராமம் - தினமும் ஆயிரம் இயற்கைச் சித்திரங்கள் விரியும் நிலப்பரப்பு. அங்கே பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ, எஸ்.எஸ். ரவிபிரகாஷின் நினைவில் காடு ஆழப் புதைந்திருந்தது.

வளர்ந்து பொறியியல் படித்து ஐ.டி. துறையில் வேலைக்குப் போனார். நிறைய மென்பொருள் பொறியாளர்களைப் போலவே தன் மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் உத்வேகப்படுத்திக் கொள்ளவும் கேமராவுடன் தன் கிராமத்துக்குத் திரும்பினார் ரவிபிரகாஷ். இயற்கையைச் சிறைபிடிக்க ஆரம்பித்த அவர் அதிலேயே ஆழமாக மூழ்கி, அரிய முத்துகளைத் தேட முயற்சித்தார்.

வளர்ந்து பொறியியல் படித்து ஐ.டி. துறையில் வேலைக்குப் போனார். நிறைய மென்பொருள் பொறியாளர்களைப் போலவே தன் மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் உத்வேகப்படுத்திக் கொள்ளவும் கேமராவுடன் தன் கிராமத்துக்குத் திரும்பினார் ரவிபிரகாஷ். இயற்கையைச் சிறைபிடிக்க ஆரம்பித்த அவர் அதிலேயே ஆழமாக மூழ்கி, அரிய முத்துகளைத் தேட முயற்சித்தார்.

சிற்றுயிர்களிடம் வீழ்ந்தேன்

“ஒளிப்படங்கள் எடுப்பது பிடித்திருந்தது. அதிலும் மலரின் இதழ் அடுக்குகள், வண்ணத்துப்பூச்சிகள், பனித்துளிகள் என்று சின்னஞ்சிறு உலகில் சஞ்சரித்து, அங்கே நுணுக்கமாகத் தீட்டப்பட்டிருக்கும் வண்ணங்களைச் சிறைபிடிக்கப் பெரிதும் விரும்பினேன். ஏழு ஆண்டுகளுக்கு முன் டி.எஸ்.எல்.ஆர். எனப்படும் டிஜிட்டல் எஸ்.எல்.ஆர். கேமராவை வாங்கிய பிறகு சிற்றுயிர்களின் உலகத்துக்குள் விழுந்துவிட்டேன்” என்கிறார் எஸ்.எஸ். பிரகாஷ்.

மேக்ரோ ஒளிப்படக் கலை சவால்கள் நிறைந்தது. இயற்கை வெளியில் பூச்சிகள், சிற்றுயிர்களை தேடிப் படமெடுப்பதே சவால் என்றால், அவற்றைச் சரியான வகையில் காட்சிப்படுத்துவது அதைவிட சிக்கலானது. ஒரு கட்டத்தில் இதுபோல வண்ணத்துப்பூச்சிகளையும் புழுக்களையும் வெறுமனே ஆவணப்படுத்துவது ரவிபிரகாஷுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தியது.

“சிற்றுயிர்களின் நுணுக்கங்களை மட்டும் பதிவு செய்வது என் நோக்கமல்ல. அவற்றைக் கலாபூர்வமாகப் படமெடுப்பதிலேயே கவனம் செலுத்திவருகிறேன்” என்று கூறும் ரவிபிரகாஷ், முழுநேரக் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராக மாற விரும்புகிறார்.

லண்டன் விருது

அதை அங்கீகரிப்பதுபோல் காட்டுயிர் ஒளிப்படக் கலைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான, லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் 2014-ம் ஆண்டுக்கான சிறந்த ஒளிப்படக் கலைஞருக்கான விருது ரவிபிரகாஷுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 96 நாடுகளைச் சேர்ந்த 43,000 பேர் பங்கேற்ற, இந்தப் போட்டியில் ரவிபிரகாஷ் விருது வென்றுள்ளார்.

நீர்நில வாழ்விகள், ஊர்வன பிரிவில் இந்த விருதை அவர் பெறக் காரணமாக இருந்த படம் ‘தெய்வீகப் பாம்பு’ என்று தலைப்பிடப்பட்ட பச்சைப்பாம்பின் படம். வழக்கமான பாம்புப் படங்களிலிருந்து இந்தப் படம் முற்றிலும் வித்தியாசப்படுகிறது. பின்பக்கமிருந்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பாம்பின் கண்ணில் ரவிபிரகாஷின் லென்ஸின் மையம் குவிந்திருப்பதே விருது பெற்றதற்குக் காரணம்.

“இதுபோன்ற நல்ல படங்களை எடுக்க விலை உயர்ந்த கேமரா அவசியம் என்று பலரும் தவறாக நம்புகிறார்கள். பழைய நிக்கான் டி5000 மூலம்தான் விருது வென்ற பல படங்களை நான் எடுத்திருக்கிறேன். சிறந்த படங்களை எடுப்பதற்கான ரகசியம் கேமராவில் இல்லை, நம்மிடம்தான் இருக்கிறது” கண்களைச் சிமிட்டி சிரிக்கிறார் ரவிபிரகாஷ்.

SCROLL FOR NEXT