இன்றைக்குக் கிடாத்தலைமேடு சேதுராமனுக்கு இயற்கை வேளாண்மை மூலம் தொடர்ச்சியாக ஏக்கருக்கு 30 மூட்டை நெல் கிடைக்கிறது. அது மட்டுமல்ல வேதி விவசாயத்தில் ஆண்டுக்கு ஆண்டு விளைச்சல் குறைந்ததுபோல, இதில் வீழ்ச்சியடையவில்லை.
அதேநேரம், 'இயற்கை வேளாண்மையில் இடுபொருள் செலவு பெரிதாகக் குறையவில்லை. ஆனால், நான் செலவு செய்யும் பணம் எனது அண்டையில் உள்ள தொழிலாளர்களுக்குத்தான் போகிறதே தவிர, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அல்ல. அது உள்ளூர்ப் பொருளாதாரத்தை உயர்த்துகிறது' என்கிறார் சேதுராமன்.
எளிய வேளாண் நுட்பங்கள்
தன்னுடைய வயலில் முன்னேறிய இயற்கை வேளாண்மை நுட்பங்களைக்கூட அவர் பயன்படுத்துவது இல்லை. மிக எளிமையான பல பயிர் பசுந்தாள் சாகுபடி, அமுதக் கரைசல், ஆவூட்டம் எனப்படும் பஞ்சகவ்யம் போன்ற மிகப் பழமையான இயற்கை வேளாண் நுட்பங்களையே பயன்படுத்துகிறார். அப்படி இருந்தும் விளைச்சல் குறையாமல் உள்ளது.
அவருடைய மருமகனும் அவரால் ஈர்க்கப்பட்டு மிகச் சிறப்பானதொரு இயற்கை உழவராக மாறியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கருக்கு மட்டுமே சேதுராமன் நெல் சாகுபடி செய்துவந்தார். ஆனால், அவருடைய மருமகனோ 25 ஏக்கர் நெல் சாகுபடி செய்கிறார்.
தானியம் பயிரிட்டால் தப்பிக்கலாம்
சீரகச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, ஆந்திரா பொன்னி போன்ற நெல் வகைகளை சேதுராமன் பயிரிடுகிறார். குறைந்த அளவில் அரிசியாக மாற்றி விற்பனையும் செய்கிறார். ஆனால், இதில் அவர் முழுமையாக ஈடுபடுவதில்லை. ‘நான் மெனக்கெடல் இல்லாமல் செய்கிறேன், கொஞ்சம் கூடுதலாக மெனக்கெட்டால், நல்ல லாபம் கிடைக்கும்' என்கிறார். அவருடைய அரிசிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
சேதுராமனின் அடிப்படையான கவலை நெல்லுக்குப் பயன்படுத்தும் நீரின் அளவு கட்டு மீறி அதிகமாகிவிட்டது, அதைக் குறைக்க வேண்டும் என்பதே. ஒரு பயிராக நெல்லும் மறு பயிராகச் சிறுதானியங்களும் சாகுபடி செய்தால் மட்டுமே உழவர்கள் தப்பிக்கலாம் என்கிறார். அரசின் கொள்கைகள் மீதும் திட்டங்கள் மீதும் பல முன்னோடி உழவர்களுக்கு இருக்கும் வருத்தமும் சினமும் அவருக்கும் உண்டு.
விடையில்லாக் கேள்விகள்
விளைபொருளுக்கு உரிய விலையும், மண்ணைக் கெடுக்காத தொழில்நுட்பங்களும் உழவர்களுக்குக் கிடைத்தால் வேறு எதுவுமே தேவையில்லை. உழவர்களே தங்களைப் பார்த்துக்கொள்வார்கள் என்பது அவருடைய கருத்து. ஆனால், ஊருக்குப் பத்து டிராக்டரைக் கொடுத்து, பின்னர் முதலுக்கு மேல் வட்டியையும் பெற்றுக்கொண்டு, தவணைப் பாக்கிக்காகக் காவல்துறை மற்றும் குண்டர்களைக் கொண்டு உழவனை அடிக்கிற கொடுமை ஒருபக்கம், சில ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கிக் கொண்டு உல்லாச வாழ்வு நடத்துபவர்களைக் காப்பாற்றும் அவலம் மறுபுறம். இதுதான் நமது நாட்டின் பொருளியல் கொள்கை.
ஊருக்கு ஒன்றிரண்டு டிராக்டர் போதுமே, ஏன் வீட்டுக்கு வீடு டிராக்டர்? அதற்கு எதற்குக் கடன் என்று வேளாண்மைத் துறை வலியுறுத்துவதில்லை. நிலத்தடி நீர் மிகவும் குறைந்த கறுப்பு ஒன்றியங்களில் தண்ணீரை உறிஞ்சும் கரும்பு சாகுபடி நடக்கிறதே, அது ஏன் என்ற கேள்வியையும் கேட்பதில்லை. ஆண்டுக்கு ஆண்டு விலைவாசி ஏறும்போது அரசு ஊழியர் போன்ற அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், உணவை உற்பத்தி செய்யும் உழவனின் விளைபொருளின் விலை மட்டும் ஏறுவதே இல்லையே ஏன் என்ற கேள்வியை அரசியல் கட்சிகளும் எழுப்புவதில்லை.
வேதி விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்கிறார்களே, இயற்கை விவசாயி ஒருவர்கூடத் தற்கொலை செய்துகொள்ளாமல் தாக்குப்பிடித்து வாழ முடிவது ஏன் என்ற கேள்வியை நமது கொள்கை வகுப்பாளர்கள் யாரும் கேட்பதில்லை. இப்படிப் பல அடிப்படைக் கேள்விகள் கேட்கப்படாமலேயே உள்ளன. இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்பொழுதுதான், சேதுராமன் போன்றோரின் மனக்குமுறல்கள் நிம்மதிப் பெருமூச்சாக மாறும்.
சேதுராமனைத் தொடர்புகொள்ள: 9952844467
அடுத்த வாரம்: (விடாமுயற்சி வெற்றி தரும்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com