உயிர் மூச்சு

முன்னத்தி ஏர் 21: புதுக்கோட்டை ஆப்பிளும் புதுமையான உரமும்

பாமயன்

அடுக்குமுறை சாகுபடியில் மது ராமகிருஷ்ணன் பின்பற்றும் வழிமுறைகளைப் பார்த்தோம். அடுக்குமுறைச் சாகுபடிக்கு நல்லதொரு இன்னொரு எடுத்துக்காட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டத்தில் உள்ள ‘பூர்வ பூமி' என்ற பண்ணை. இதன் உரிமையாளர் செந்தில்நாதன், அமெரிக்காவில் பணிபுரிந்தவர். வேளாண்மையின் மீதான ஆர்வத்தில் முற்றிலும் முந்திரிக்காடாக இருந்த இடத்தை மாற்றி, இன்றைக்குப் பல அடுக்குச் சாகுபடிக்கு மாற்றியுள்ளார்.

முதலில் பாம்ரோசா என்ற மணக்கும் எண்ணெயைச் சாகுபடி செய்து, அதை எண்ணெயாகக் காய்ச்சி வடிக்கும் ஆலை முதலியவற்றை வைத்து மிக நுட்பமாகச் செயலாற்றிவந்தார். ஆனால், போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை. பின்னர் தென்னை மர சாகுபடிக்கு மாறினார். ஓரினச் சாகுபடியாகத் தென்னையை மட்டுமே வளர்த்து வந்ததால், அவருக்கு ஆண்டுக்கு ஆண்டு செலவு மட்டும் அதிகமாகிக்கொண்டே சென்றது. எவ்வளவுதான் காய் காய்த்தாலும், செலவு என்னவோ கூடிக்கொண்டே போனது.

வறட்சி மாவட்டத்தில் சாதனை

அதன் பின்னர்தான் பசுமை வெங்கடாசலம் என்ற இயற்கை வேளாண் வல்லுநரை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அவருடைய வழிகாட்டுதலில் தனது பண்ணையை மாற்றியமைத்தார். அந்தப் பண்ணை மிகச் சிறந்த அடுக்குமுறைச் சாகுபடிக்கான பண்ணையாக இப்போது விளங்குகிறது. வேதி உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ இல்லாத இயற்கை வழிப் பண்ணையாக இது விளங்குகிறது.

ஓர் அடுக்கு தென்னை, அதற்கு ஊடாகக் கோகோ, அதற்கு இடையில் மலைவேம்பு, தேக்கு, சப்போட்டா என்று பன்மயத் தன்மை கொண்ட பண்ணையைச் செந்தில்நாதன் உருவாக்கியுள்ளார். ஆப்பிள் மரம்கூட இவருடைய பண்ணையில் வளர்கிறது. இஞ்சி அறுவடையாகும் நிலையில் உள்ளது. மூடாக்குப் பயிராக அன்னாசிப் பழத்தை நட்டு வைத்துள்ளார். கடுமையான வறட்சிமிக்க மாவட்டமான புதுக்கோட்டையில், இதை ஒரு பெரும் சாதனை என்றே சொல்ல வேண்டும்.

புது வகை உரம்

இயற்கை வேளாண்மைதான் என்றாலும், இவருடைய பண்ணையில் தொழு உரத்தைக்கூடப் பயன்படுத்துவதில்லை. பொதுவாக இயற்கை வேளாண் பண்ணைக்கு மாடு அத்தியாவசியம் என்று கூறப்படும். ஆனால், இவர் மாடுகளை வளர்க்கவில்லை. இயற்கை உரத்துக்காக இவர் வேறொரு புதிய உத்தியைக் கையாளுகிறார். அதாவது ‘காடி மாவு' எனப்படும் பச்சரிக் கஞ்சி ஊறலைப் பயன்படுத்துகிறார்.

இதற்குப் பச்சரியை சோறுபோல வேக வைக்கிறார். அதை ஒரு பானையில் இட்டு ஏழு நாட்களுக்கு ஊற வைக்கிறார். அதில் குறிப்பிட்ட அளவு நுண்ணுயிர்கள் பெருகுகின்றன. அதன் பின்னர் அத்துடன் நாட்டுச் சர்க்கரையைச் சமஅளவு கலந்து, மீண்டும் ஏழு நாட்கள் ஊற வைக்கிறார். இதன் மூலமாக நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் ஏராளமாகப் பெருகிவிடுகின்றன. அதை எடுத்து அத்துடன் நீர் சேர்த்து, சொட்டு நீர்ப்பாசனம் வழியாகத் தாவரங்களுக்குச் செலுத்துகிறார். இத்துடன் கூடுதலாக உமிச் சாம்பலை ஆங்காங்கே தூவிவிடுகிறார். உரத்துக்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் இவ்வளவுதான்.

இதன் மூலமாக மண்ணுக்கு வேண்டிய சத்துகளை நிறைவு செய்துகொள்கிறார். இப்படிச் செய்வதால், இவருடைய பண்ணைக்கு வெளியிடு பொருள் செலவு என்பது பெரிதும் குறைந்துவிட்டது.

(அடுத்த வாரம்: கந்தர்வக்கோட்டை உணவுக் காடு)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
இவருடைய பண்ணையை அமைத்த பசுமை வெங்கடாசலத்தை தொடர்புகொள்ள: 9443545862

SCROLL FOR NEXT