உயிர் மூச்சு

நல்ல பாம்பு 12: அருகிலிருந்தும் அறியப்படாத சாரைப் பாம்பு

செய்திப்பிரிவு

காலை மணி பதி னொன்றைத் தாண்டியிருந்தது. அலுவல் வேலையாக அவசரமாக வெளியே சென்றுகொண்டி ருந்தேன். செல்லும் வழியில் சாலை ஓரமாக இருந்த தோட்டத்தை மக்கள் கூட்டமாகப் பதற்றத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நானும் அக்கூட்டத்தில் ஒருவனானேன்.

அங்கே இரண்டு பெரிய பாம்புகள் உடலைப் பிணைத்தபடி கழுத்தை உயர்த்தி ஆடிக்கொண்டிருந்தன. இரண்டுமே சாரைப்பாம்புகள் (Indian Rat snake – Ptyas mucosa). இப்பாம்பை அறியாதவர்கள் குறைவு. இவை எளிதில் பார்க்கப்படக்கூடியவை என்பதால், நாம் அறிந்த முதல் பாம்பு இதுவாகத்தான் இருக்கும்.

இரண்டு பாம்புமே ஆறடி நீளத்தில் கை தடிமனில் ஒன்று மஞ்சள் நிறத்திலும் மற்றொன்று கரிய நிறத்திலும் இருந்தன. இவை கருமை, கரும் பச்சை, மஞ்சள், பழுப்பு எனப் பல நிறங்களில் காணப்படுகின்றன. அங்கிருந்த பெரியவர் மஞ்சள் பாம்பு சாரை, கருமையாக இருந்தது நல்ல பாம்பு என்றார்.

அருகிலிருந்தவர்களும் ஆமோதித்தார்கள். இன்றும் சாரைப்பாம்பும் நல்ல பாம்பும் இணைசேருகின்றன என நம்பப்படுகிறது. வெகுஜன ஊடகமும் இந்தத் தவற்றைப் பிரதிபலிக்கிறது. இது உண்மையல்ல, இரண்டுமே வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றின் உருவ அமைப்பு, பழக்கவழக்கங்கள் ஒத்திருந்தாலும் சாரை யின் வலுவான முக்கோண வடிவ உடலும், தெளிவான கழுத்தும், குறுகிய தலையும் நல்ல பாம்பிலிருந்து வேறுபடு கிறது. மற்றபடி இரண்டிலுமே ஆண், பெண் உண்டு.

நஞ்சு இல்லை

கொலுபிரிடேவில் இருக்கும் இந்தப் பேரினத்தில் மொத்தம் நான்கு இனங்கள் காணப்பட்டாலும் ‘மியூகோசா’ நாடு முழுவதும் காணப்படக்கூடியது. பகலாடி யான இவை பல வகையான உயிரினங்களை உணவாக்கிக் கொண்டாலும், முக்கிய உணவு எலிகள். இதனால்தான் மிக எளிதாக நம் வீடுகளுக்கு அருகிலும், தோட்டங்கள், வயல்வெளிகளிலும் பார்க்க முடிகிறது. தரைவாழ் பண்பைப் பெற்று வேகமாகச் செல்லக்கூடிய இவை, மரத்தில் ஏறவும் நீரில் நீந்தவும் கூடியவை.

சாரையின் வால் நுனியில் நஞ்சு முள் இருக்கிறது, அது குத்தினால் ஆபத்து என்றார் அங்கிருந்த ஒருவர். ஆனால், இவை நஞ்சற்றவை. இவற்றை மீட்கும்பொழுது நம் பிடியைத் தளர்த்த வேண்டுமென்பதற்காக தன் உடலால் நம் கையை நன்றாகச் சுற்றிக்கொண்டு இறுக்கும். மேலும், வாலின் நுனியால் குத்தும். இந்த பண்பைப் பெரும்பான்மையான பாம்புகளில் பார்க்க முடிகிறது. ஆனால், வாலில் முள்ளோ நஞ்சோ இல்லை. கோபம் கொள்ளும் பொழுது கழுத்தைப் புடைத்து அதிவேகமாக மேலே சாடிக் கடிக்கும். இதன் கடியால் கடிவாயில் ரத்தம் வருவதோடு சிறு வெட்டுக்காயம் ஏற்படலாமே தவிர, ஆபத்து ஏதுமில்லை.

இப்படியும் ஒரு நம்பிக்கை!

ஒரு காலத்தில் தோலுக்காகக் கொல்லப்பட்ட பாம்பினங்களில் இவை பெரும்பான்மையாக இருந்தன. இந்திய வன (பாதுகாப்பு) சட்டம் 1972, பாதுகாக்கப்பட்ட பட்டியல் இரண்டில் சேர்க்கப்பட்ட பின்பும், இன்றும் வெவ்வேறு வகைகளில் பாதிப்பைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

நாங்கள் பார்த்த சாரைகளினிடையே வேகம் அதிகரித்தது. உண்மை என்னவென் றால் தழுவிக்கொண்டிருந்த இரண்டுமே ஆண் சாரைகள்தாம். பெண்ணைக் கவர்வதற்காக வந்திருக்கின்றன. அருகில்தான் பெண் பாம்பு மறைந்திருக்கும். இரண்டும் பலப்பரீட்சையில் மூழ்கியிருந்தன. தங்களின் முழு உடலையும் ஒன்றோடு ஒன்று பின்னி, கழுத்தைப் புடைத்து ஒன்றையொன்று தாக்காமல் தலையை உரசிக்கொண்டு மாறிமாறி உயர்வதும் தாழ்வதுமாக இருந்தன. இதில் வலிமை படைத்தது பெண் பாம்புடன் இணைகிறது.

அரை மணி நேரத்துக்கு மேலாக அங்கே வெளிவந்து ஆடுவதும் பின் புதரில் மறைவதுமாக இருந்தன. அக்கூட்டத்தில் ஒருவர் தன் தோள் துண்டை எடுத்து பாம்பின் மீது போடுவதற்காக முனைய, அங்கிருந்த வர்கள் எச்சரிக்கவும் பின்வாங்கினார். இணைந்திருக்கும் பாம்புகள் மீது போட்ட துண்டை எடுத்துப் பயன்படுத்தினால் அதிர்ஷ்டமாம். இப்படி இன்னும் எவ்வளவு மூடநம்பிக்கைகள் பாம்புகளின் மீது? நம் புரிதல் மேம்பட்டாக வேண்டிய அவசியம் நிறையவே இருக்கிறது.

கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: oorvanapalli@gmail.com

SCROLL FOR NEXT