சேலம் வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகச் சிறிய விலங்கு களைப் பற்றி ஆய்வு நடத்திவருகிறேன். சேலம் சேர்வராயன் மலையில் மட்டுமே வசிக்கும் ஆபத்தில் உள்ள ‘பெரிய பாறை எலிகள்’ குறித்ததே என்னுடைய ஆய்வு. அதன் தொடர்ச்சியாகக் கிழக்கு மலைத்தொடர் குறித்து சில விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது.
கிழக்கு மலைத்தொடர் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மலைப்பகுதி. இது வடக்கு ஒடிசாவிலிருந்து ஆந்திர மாநிலம் வழியாகத் தெற்கே தமிழ்நாடு வரை உள்ளது. கர்நாடகத்தின் சில பகுதிகளையும் தெலங்கானாவையும் கடந்து செல்கிறது. தென்னிந்தியாவின் கிழக்குக் கடலோரச் சமவெளிகளில் பல சிறிய, நடுத்தர நதிகளுக்கு ஆதாரமாக உள்ளது.
கிழக்கு மலைத்தொடரும், அவற்றின் புவியியலும் பண்டைய இந்தியாவின் பரிணாம வளர்ச்சி பற்றிய தரவுகளைக் கொண்டுள்ளன. உலகில் வேறெங்கும் காணப்படாத தாவர, விலங்குகளை இந்த மலைத்தொடர்கள் கொண்டுள்ளன. இந்த மலைத்தொடர் பல்வேறு ஓரிட வாழ்விகளுக்கு மையமாகத் திகழ்கிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையில் 400-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன.
அதேநேரம், 1920ஆம் ஆண்டு முதல் கிழக்கு மலைத்தொடரின் வனப்பகுதி வெகுவாகச் சுருங்கிவிட்டது.இந்தப் பிராந்தியத்துக்கு உரிய பல தாவர இனங்கள் அழிவின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. இந்தப் பகுதியில் அதிக அளவு களப்பணிகள் ஊக்குவிக்கப்பட்டு, நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டால் மனித சமூகத்துக்கு இன்னும் பல இயற்கைக் கண்டுபிடிப்புகள் கிடைக்கும். இப்படிக் கண்டுபிடிக்கப்படும் புதிய உயிரினங்கள் நம் காடுகளின் வளத்தை உலகுக்கு எடுத்துச்சொல்லும்.
இந்தியாவில் 132 தாவர, விலங்கு இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. ஆசியச் சிங்கங்கள், புலிகள், வரையாடு, வெளிமான், ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் போன்ற உயிரினங்கள் அருகிவருகின்றன. கிழக்கு மலைத்தொடரின் பல விலங்குகளும் ஆபத்தில் உள்ளன. குறிப்பாக ஜெர்டன் கல்குருவி, தேவாங்கு, மூங்கணத்தான், பொன்னிறப் பல்லிகள், பெரிய பாறை எலிகள் உள்ளிட்டவை ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. இந்த அரிய உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: brawinkumarwildlife@gmail.com