உயிர் மூச்சு

உச்சிக்கிளைகளின் உலகம்

ஆசை

என் குழந்தைப் பருவத்தைக் கற்பனை நிரம்பியதாக மாற்றியதில் மரங்களுக்கு முக்கியப் பங்குண்டு. எங்கள் வீட்டில் இருந்தவை சிறுசிறு மரங்கள். பப்பாளி, முருங்கை, கல்யாண முருங்கை, வேப்ப மரம், கிளுவை, பூவரசு அவ்வளவுதான். இந்த மரங்களோடு விளையாட முடியாது. ஆனால், ஏதோ ஒரு வகையில் தினசரி வாழ்வின் பின்புலமாக அமைதியாக இருந்தன இந்த மரங்கள்.

மரத்தோடு விளையாடி

மன்னார்குடி என்ற சிறு நகரத்தில் மரங்களுடனான எனது அனுபவங்கள் குறைவானவைதான். உண்மையில் நான் மரங்களோடு பேசி, விளையாடி, மரங்களில் உறங்கியதெல்லாம் எனது சொந்த ஊரான வடுவூரில்தான்.

விடுமுறைகளின்போது அங்கே சென்றால் போதும். ஆயா வீட்டு மா மரமும் புளிய மரமும்தான் எனது விளையாட்டுக் களங்கள். உயிர் பற்றிய எந்தப் பயமுமின்றி கிளையில் தொங்கித்தொங்கி தரைக்கே வராமல் ஒவ்வொரு மரமாய்த் தாவிக்கொண்டிருப்போம்.

அப்போது நடிகர் ஜாக்கி சான்தான் எங்கள் ஆதர்சம். மரங்களின் கிளைகள் குறித்து எங்களுக்கு நிறைய கற்பனை பெருகும். வளைந்து நெளிந்தும் செங்குத்தாகவும் இருக்கும் கிளைகள் எங்களுக்கு அமானுஷ்யமான உணர்வைத் தரும். அந்தக் கிளைகளை வைத்து, நாங்களே கதைகளை உருவாக்குவோம். திரைப்படங்களை அரங்கேற்றுவோம்.

வில்லன் இருக்கும் கிளை, யாரும் நெருங்க முடியாத ஒரு கோட்டை. அதன்மேல் பாம்புபோல் ஊர்ந்துசென்று கதாநாயகியை மீட்டுக்கொண்டுவருவோம். சிறுகிளைகளை ஒரு கையால் பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆர். - நம்பியார்போல் சண்டை போட்டுக்கொள்வோம். உடல் முழுக்கச் சிராய்ப்புகள் இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டோம்; வலியும் தெரியாது. அன்று மாலையோ மறுநாளோ குளிக்கும்போதுதான் உடல் முழுதும் ஒரே எரிச்சலாக இருக்கும்.

உச்சிக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது. கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாதது. இருந்தும், நாங்கள் சிறுவர்களாக இருந்தபடியால் அதிக எடையுடன் இருக்கமாட்டோம் என்பதால் உச்சிக்கிளைக்குச் சற்றுக் கீழேயுள்ள கிளை வரை சென்றுவிடுவோம்.

உச்சிக்கிளைகளின் உலகமே தனி. மரத்தின் உச்சியிலேயே ஒட்டுமொத்த வாழ்நாளையும் கழித்துவிடலாம். அப்படிப்பட்ட எண்ணம்தான் - எண்ணமல்ல கனவு என்றே சொல்ல வேண்டும் - அப்போது இருந்தது.

அந்தப் பருவத்தில் பார்த்த ‘கரிமேடு கருவாயன்' திரைப்படத்தில் ஒரு தென்னை மரத்தின் உச்சியில்தான், தேடப்படும் குற்றவாளியான விஜயகாந்த் குடியிருப்பார். அந்தத் திரைப்படம் எங்கள் கற்பனையில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்கவே முடியாது. அதற்குப் பிறகு மரங்கள்தான் எங்கள் வாழ்க்கை என்று முடிவுசெய்தோம். ஆனாலும், விடுமுறை முடிந்ததும் எங்கள் கனவு கலைந்துவிடும்.

மரங்ளே ‘டாய் ஸ்டோர்'

மரத்தில் ஏறி விளையாடுவது ஒரு வகை என்றால், மரங்களிலிருந்து கிடைப்பவற்றைக் கொண்டு விளையாட்டுப் பொருட்கள் செய்து விளையாடுவது இன்னொரு வகை. நுணா மரத்தின் காய்களில் ஈர்க்குச்சி செருகித் தேர் செய்து விளையாடுவோம்.

அப்புறம் ‘நுங்கு ரோதை'யை மறந்துவிட முடியுமா? ஐந்து பைசா பப்படங்களுக்காக நுங்கு ரோதை பந்தயங்களெல்லாம் வெகு விமரிசையாக நடக்கும். ‘நுங்கு ரோதை' என்ற சொல் ஒன்றே போதும், பலரும் பின்னோக்கிய காலப்பயணம் செல்ல.

அதேபோல், பனையோலையில் செய்யும் காற்றாடி, தென்னை ஓலையில் பின்னிப்பின்னிச் செய்யும் பாம்பு, புளியங்கொட்டைகளை வைத்து விளையாடும் பல்லாங்குழி, சிறு குரும்பையைக் குச்சி முனையில் செருகி ஈட்டி போல் எறிந்து விளையாடும் விளையாட்டு என்று எனது குழந்தைப் பருவத்தின் எல்லா விளையாட்டுகளையும் அவற்றுக்கான விளையாட்டுப் பொருட்களையும் தந்தவை மரங்களே.

நாங்களாகவே கண்டுபிடித்துக் கொண்ட விளையாட்டுகள், அதற்கு நாங்களாகவே செய்துகொண்ட விளையாட்டுப் பொருட்கள்… அப்போது தெரியவில்லை, இப்போதுதான் தெரிகிறது எவ்வளவு வளமான குழந்தைப் பருவத்தைக் கடந்துவந்திருக்கிறேன் என்று.

சிறுவர்களுக்கு, கற்பனையூட்டத்துடன் கூடிய துடிப்பான ஒரு பொழுதுபோக்கு (enlightened leisure) தேவை என்பது உலகமெங்கும் உளவியலாளர்கள் முன்மொழியும் கருத்து. எனது இளமைப் பருவத்தில் அப்படிப்பட்ட ஒரு பொழுதுபோக்கை இயற்கையே தந்திருக்கிறது. அதற்கு மரங்களுக்குத்தான் நான் பெரிதும் நன்றி சொல்வேன்.

SCROLL FOR NEXT