உயிர் மூச்சு

சென்னையில் எர்த் அவர்

செய்திப்பிரிவு

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'எர்த் அவர்' என்னும் விளக்குகளை அணைக்கும் பிரசாரத்தை ஒவ்வொரு மார்ச் மாதமும் உலக இயற்கை நிதியம் எனப்படும் (WWF) நடத்திவருகிறது. இந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி இரவு 8.30 - 9.30 மணிவரை 'எர்த் அவர்' கடைப்பிடிக்கப்பட்டது.

கடந்த எட்டு ஆண்டுகளாக உலகின் முன்னணி நகரங்களில் நடைபெறும் இந்தப் பிரசார நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்த 150 நகரங்கள் பங்கேற்றன. இந்த ஆண்டு எர்த் அவரின் இந்திய விளம்பரத் தூதர் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்.

சூரிய மின்சக்திக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்துவதே 'எர்த் அவர்' பிரசார நிகழ்ச்சியின் இந்த ஆண்டு நோக்கம். இந்தியா முழுவதுக்கும் தேவையான மின்சாரத்தைச் சூரிய மின்சக்தி மூலமாகவே பூர்த்தி செய்ய முடியும் என்பதும் கவனப்படுத்தப்பட்டது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜோதிர்கமயா அமைப்பின் டிஃபானி மரியா பரார், ‘எர்த் அவர்’ குறித்துச் சென்னை கல்லூரிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பேசினார்.

பிரசாரத்தின் ஒரு பகுதியாக அன்றைக்கு ஒரு நாள், ஒரு மணி நேரம் மட்டும் விளக்குகளை அணைத்து வைப்பது ஓர் அடையாளம்தான். உலகமும் நாமும் ஆரோக்கியமாக இருக்க, மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது அத்தியாவசியம்.

- நேயா

SCROLL FOR NEXT