உயிர் மூச்சு

நல்ல பாம்பு 10: இரு முறை பார்த்த அதிர்ஷ்டம்

செய்திப்பிரிவு

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை. அங்கிருந்து மேல் கோதையாறு வழியாக முத்துக்குளி வயலுக்குச் சென்று புலிகளைக் கணக்கெடுப்பதுதான் அன்றைக்கு எங்களுடைய பயணத் திட்டமாக இருந்தது. உலகிலுள்ள நஞ்சுப் பாம்புகளிலேயே பெரிய பாம்பான ‘ராஜ நாகத்தை (King cobra - Ophiophagus Hannah, கருநாகம் என்றும் கூறப்படுகிறது) இத்தருணத்தில் பார்த்து விடவேண்டும் என்பது எனது ஆவலாக இருந்தது.

இது குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு வேட்டைத் தடுப்பு காவலர் குறுக்கிட்டார். “நீங்கள் சொல்லும் பாம்பு பார்க்கப் பெரிசா, கன்னங்கரேர்னு மஞ்சள் பட்டைகளோட இருக்குமா?” என்றார். “ஆமாம்! நீங்கள் இந்தப் பாம்பைப் பார்த்திருக்கி றீர்களா?” எனக் கேட்டேன். அவர் சிரித்தபடியே, “நாம இப்போ போற அதே பாதையில சில தடவை பார்த்திருக்கேன். ஒரு பாம்புதான் இருக்கு. அணையைக் கடக்கும் பாதையில இருக்குற கற்குவியல் உள்ளதான் இருக்கும், வெளிய வரும். நம்மள ஒன்னும் பண்ணாது. மழை அடிச்சு ஓஞ்ச பிறகு வரும். வெயில்ல படுத்துக் கிடக்கும்” என்றார். என் ஆர்வம் அதிகரித்தது.

மேற்கு மலைத் தொடர், ஆந்திரப் பிரதேசம், பிஹார், ஒடிசாவின் பீதர்கனிகா, மேற்கு வங்கத்தின் சுந்தரவனம், வடகிழக்குப் பகுதிகள், உத்தராகண்ட், அந்தமான் தீவுகள் என நாட்டின் வேறுபட்ட நிலப்பரப்புகளில் வாழும் இவற்றைக் காண்பது அரிது. எனக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

தவறவிட்ட வாய்ப்பு

அரிய உயிரினங்கள் பலவற்றை அன்றைக்குப் பார்க்க முடிந்தாலும், நாங்கள் தேடிப்போனது கண்ணில் படவில்லை. மழை சற்று வலுத்து அடிக்கவே, ஓரிடத்தில் ஒதுங்கினோம். மதியம் மணி ஒன்றரை வாக்கில் மழை நின்றது, அருகிலிருந்த ஓடையில் ‘பெட்டோமின் கீல்பேக்’ பாம்பைக் கவனித்துக்கொண்டிருந்தேன், உடன் வந்தவர்கள் முன்னே சென்றார்கள். திடீரென்று அவர்கள் அழைக்க, நான் விரைந்தேன். “இப்படி வாய்ப்ப தவறவிட்டுட்டீங்களே!” என்றனர் அனை வரும். எனக்கு ஒன்றும் புரியவில்லை. “புலியைப் பார்த்தீர்களா?” என்றேன். “இல்லை தம்பி, அந்த ராஜ நாகம் இங்கதான் படுத்திருந்துச்சு, 10 அடி நீளமிருக்கும். எங்கள பார்த்தவுடனே அங்கே போய் மறைஞ்சிடுச்சு” என அந்த இடத்தை சுட்டிக்காட்டினார் வேட்டைத் தடுப்புக் காவலர். எனக்குப் பெரும் வருத்தமானது.

இந்தப் பாம்பு மட்டுமே உடலால் இலைசருகுகளைக் குவித்து மெத்தையாக்கி அதனுள் முட்டைகளை இட்டு, குட்டிகள் பொரித்து வெளிவரும் வரை அருகே யிருந்து பாதுகாக்கும். பிற பாம்புகளை விரும்பி உண்டாலும் சிலநேரம் உடும்புகள், பிற உயிரினங்களை அது உண்பதும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவை 15 அடி நீளம் வரை வளரக்கூடும்.

அடுத்தடுத்த சந்திப்பு

பயணத்தின் கடைசி நாளில் புலியைப் பார்க்க முடியாவிட்டாலும், அதன் தெளிவான கால்தடத்தை நீர்க்குட்டை அருகே பார்க்க முடிந்தது. “இப்பொழுது வந்த வழியே திரும்புவோம், அந்த பாம்பு அங்கேதான் படுத்திருக்கும், பார்த்துவிடலாம்” என்றார் வேட்டைத் தடுப்பு காவலர். இருவரும் முன்னேறினோம். இவை பகலாடிகள். தரைவாழ் பண்பைப் பெற்றிருந்தாலும் மரங்களிலும் இவற்றைப் பார்க்க முடியும். அவர் சொன்னபடியே அதே இடத்தில் காலை 9.30 மணி அளவில் அந்த ராஜ நாகம் வெயில் காய்ந்துகொண்டிருந்தது. தூரத்திலிருந்தபடியே அதைக் கவனித்தோம்.

தெளிவான தலை, வட்ட வடிவக் கண்கள். மென்மையான செதில்களுடன் பழுப்பு நிறத்தில் மஞ்சள் பட்டைகள் கழுத்தில் ஆரம்பித்து வால் நோக்கி செல்லசெல்ல மங்கி, வால் பகுதி கருத்திருந்தது. பின்னால் வந்தவர்கள் எங்களை நெருங்கியபோது எங்களைக் கவனித்து சிறிதாகப் படத்தை (hood) விரித்தது. பார்க்கப் பயம் தந்தாலும் சாதுவாக அங்கிருந்து நகர்ந்து கற்குவியலின் இடுக்கினுள் சென்று மறைந்தது.

எனக்கு அதிர்ஷ்டமிருந்தது. இரண்டு நாள் கழித்து அதே இடத்தில் மீண்டும் அதைப் பார்த்தபொழுது அதன் வாழ்விடம், இயல்பு எனப் பலவற்றைப் புரிந்துகொள்ள முடிந்தது.

நிலைமை மாறுகிறது

ராஜ நாகம் அடர் காடுகளில் காணப்படுவதால் மனிதர்களுக்குத் தொந்தரவு இல்லை என்று கருதிய காலம் போய், இப்பொழுது மலையடிவாரங்கள், அதையொட்டிய விவசாய நிலங்கள், தோட்டங்கள், மனிதக் குடியிருப்பு போன்ற இடங்களில் இயல்பாகப் பார்க்கப்படும் ஒன்றாகிவருகிறது. இப்பாம்புகள் எளிதில் கடிப்பதில்லை. எச்சரிக்கை விடுத்து விலகவே முயல்கின்றன. இதன் கடி நல்ல பாம்பைப் போன்றே நரம்பைத் தாக்கும் நஞ்சை கொண்டிருந்தாலும், அதனோடு ஒப்பிடும்பொழுது வீரியம் குறைவு.

ஆனால், இது உருவத்தில் பெரிது என்பதால் உடலில் செலுத்தப்படும் நஞ்சின் அளவு அதிகம். இதன் நஞ்சால் யானைகளே சில மணி நேரத்தில் மரணமடைய வாய்ப்பிருக்கும் நிலையில், மனிதர்களின் நிலை? இந்தியாவில் இப்பாம்புக் கடியால் சில மரணங்கள் நிகழ்ந்துள்ளன. எதிர்காலத்தில் இப்பாம்புக் கடிகளை எப்படி எதிர்கொள்வது, இதற்கான நஞ்சு முறிவு மருந்தைப் பெறுவது எப்படி என்று தீவிரமாக யோசிக்க வேண்டிய தருணம் இது.

கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: oorvanapalli@gmail.com

SCROLL FOR NEXT