இரவில் ஊர்வனவற்றைப் பார்த்து வெகுநாட்களாகிவிட்ட நிலையில் சக ஆராய்ச்சியாளருடன் கடற்கரையை ஒட்டிய நிலப்பரப்பிற்குச் சென்றோம். கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு கிராமம் எங்களை ஈர்த்தது. காரணம், அந்நிலத்திற்கே உரித்தான பனைமரங்களும் உடைவேல் மரங்களும் புதர்செடிகளும் சூழ அக்கிராமம் இருந்ததே. எதிரே இருந்த திறந்தவெளி காடு எங்கள் ஆர்வத்தை அதிகப்படுத்தியது. மாலை இருள் சூழ, உதவிக்காக அந்த இடத்தை அறிந்த ஒருவரை அழைத்துக்கொண்டு இரவு நடையை ஆரம்பித்தோம்.
கடற்கரையை ஒட்டிய நிலப்பரப்பு என்பதால் ஆவல் அதிகமாக இருந்தது. அன்று பிரகாசமாக இருந்த நிலவொளி, எங்களுக்குச் சாதகமாக இல்லை. சில ஜெர்பில் (Gerbil rat) எலிகளையும் முயல்களையும் தாண்டி வேறு எதுவும் தென்படவில்லை. உடன் வந்தவர் திடீரென்று நின்று ‘சுருட்டை விரியன்’ எனச் சத்தமிட்டார். இதுபோன்ற நிலப்பகுதிகளில் சுருட்டை காணப்படுவது இயல்புதான். ஆனால் நாங்கள் அருகே சென்று பார்த்தபோதுதான், அது ஒரு பூனைப்பாம்பு (Common cat snake – Boiga trigonata) எனத் தெரிந்தது.
துருத்திய கண்கள்
குறைந்த நஞ்சுடைய பூனைப்பாம்பு நாடு முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இரவாடியாக இருப்பதால் இவற்றை எளிதில் காண முடியாது. திறந்தவெளி காடுகள், புதர்க் காட்டுப் பகுதிகளில் தென்படும் இவை மரவாழ் பாம்பாக அறியப்பட்டாலும், நிலப்பகுதியில் காணப்படும் சிறு பொந்துகள், கற்பிளவுகள் என மறைந்து வாழ ஏதுவான இடத்தில் வசிக்கிறது. பெரும்பாலான நேரம் சிறிய புதர் செடிகளில் கண்டுகொள்ளமுடியாத வகையில் அந்த இடத்தோடு ஒன்றியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இவை முட்டையிடுபவை. 2021ல் கண்டறியப்பட்ட புது இன பூனைப்பாம்போடு சேர்த்து 17 இனங்கள் இருக்கின்றன. இதுவும் ‘கொலுப்ரிடே’ குடும்பத்தைச் சேர்ந்தது. நீளம் நான்கடியைத் தாண்டுவது அரிது.
உடன் வந்தவரின் கால் அதிர்வு சத்தம் அப்பாம்பை விழிப்படைய வைத்தது. மணற்பரப்பில் இருந்தபடியே தலையை உயர்த்தி, முன் உடலை ‘S’ வடிவில் மடக்கியபடி எதிர்ப்பைக் காட்டியது. பளிச்சிட்ட அதன் மென்மையான செதில்கள் சமீபத்தில் சட்டையைக் கழற்றியிருந்ததை உணர்த்தியது. துருத்திக்கொண்டிருந்த அதன் பெரிய கண்களில் காணப்பட்ட செங்குத்தான கண் பாவை பார்க்கப் பூனையின் கண்ணை நினைவுபடுத்தின. இதனால்தான் இதற்கு இப்படிப் பெயர் வந்ததுபோல.
உற்றுநோக்குதல் தரும் அறிவு
உடல் பழுப்பு நிறம். கழுத்தில் ஆரம்பித்து குதப்பகுதி வரை மேலிருந்து கீழ்நோக்கி இரு பக்கமும் வெள்ளை நிற வரிகளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. வால் மெல்லிதாக நீண்டிருந்தது. இப்பாம்பின் முக்கிய அடையாளமே முக்கோண வடிவத் தலையும் அதன் மேல் காணப்பட்ட ‘Y’ போன்ற தலைகீழான அடையாளமும்தான். இது பிடரிவரை நீண்டு இதய வடிவிலிருந்தது. ஆரம்பக்காலத்தில் இப்பாம்பை இனம் கண்டறிவதில் பலமுறை குழம்பியிருக்கிறேன். இதுபோன்ற உற்றுநோக்குதல்தான் குழப்பமான உயிரினங்களைப் பிரித்தறிவதற்கான ஒரே வழி.
மேற்தாடையின் கடைவாயில் நஞ்சுப் பல்லைப் பெற்றிருக்கிறது. குறைவான நஞ்சுடைய பாம்பினமாக அறியப்பட்டாலும், இதன் நஞ்சு நரம்பைத் தாக்கக்கூடியது. இதன் கடி சிறு உயிரினங்களை விரைவில் செயலிழக்க வைத்தாலும், மனிதர்களுக்கு வலியையும் வீக்கத்தையும் மட்டுமே உருவாக்கும், ஆபத்தில்லை. இப்பாம்பைச் சுருட்டை விரியனுடன் குழப்பிக்கொண்டு பயத்தில் கொல்லப்படுவது வேதனையளிக்கிறது. இவ்விரண்டு இனத்திற்குமிடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.
அடுத்து தன் மெல்லிய வாலை மேல்நோக்கி உயர்த்தி அசைத்தது. வாலின் நுனிப்பகுதி வேகமாக முன்னும் பின்னுமாக ஆடியது. இது எதிராளியைத் திசைதிருப்ப அல்லது எச்சரிப்பதற்கான யுக்தி. சிறிது நேரத்துக்குப் பின் அவ்விடத்தைவிட்டு அகன்றது. ஒரே பாம்பினத்தை பல முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்றை புதியதாக அறியவோ உணரவோ முடிகிறது. அன்றைக்கு எங்களுக்கும் அதுதான் நிகழ்ந்தது.
கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: oorvanapalli@gmail.com