கந்தர்வக்கோட்டையில் உள்ள செந்தில்நாதனின் பண்ணையில் பல பயிர்களிலிருந்து வருமானம் கிடைக்கிறது. இவர் பின்பற்றும் முறைகளால் தென்னையில் காயின் அளவு அதிகரித்துள்ளது. தென்னை கொடுக்கும் நீர் மற்ற பயிர்களுக்கும் கிடைக்கிறது. இப்படி ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கிறார். பாதை ஓரங்களில் கரும்பை நட்டு, அதையும் அறுவடை செய்துகொள்கிறார்.
அவருடைய 107 ஏக்கர் அளவுள்ள பெரிய பண்ணையை மிகத் தெளிவாகத் திட்டமிட்டு நிர்வாகம் செய்கிறார். மழை அளவை ஆண்டுதோறும் செப்பமாகக் கணக்கிட்டு வைத்துள்ளார். தான் சேகரித்து வைத்திருக்கும் தரவுகளிலிருந்தே ‘பருவநிலை மாற்றம் உண்மை' என்பதை மெய்ப்பிக்க முடியும் என்று கூறுகிறார். ஒவ்வோர் ஆண்டும் இவருடைய பண்ணையில் மழைப்பொழிவு குறைந்துதான் வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நல்ல மழை கிடைக்கிறது என்று கூறுகிறார். ஆனால், இவருடைய பண்ணையில் நிலமே தெரியாத அளவுக்குப் பயிர்கள் மூடப்பட்டுள்ளதால் நீர் ஆவியாவது குறைந்துள்ளது.
நிழல், விளைச்சலைப் பாதிக்குமா?
வெயிலைச் சிறப்பாக அறுவடை செய்யும்போதுதான் நமக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பது இயற்கை வேளாண்மையின் அடிப்படை விதிகளில் ஒன்று. அதை செந்தில்நாதன் சிறப்பாகக் கடைப்பிடிக்கிறார். எந்த ஒரு இடத்தையும் சும்மா விட்டு வைப்பதில்லை. மரங்களையோ, செடிகளையோ, காய்கறிகளையோ நட்டுக்கொண்டே இருக்கிறார். நிழல் இருந்தால் விளைச்சல் குறையும் என்று கூறும் உழவர்கள், ஒரு முறை இவருடைய பண்ணையைச் சென்று பார்த்தால் தங்களுடைய கருத்தை மாற்றிக்கொள்வார்கள்.
ஒரு குறிப்பிட்ட பயிரில் குறிப்பிட்ட வருமானம் என்பதல்ல இவருடைய கணக்கு. ஒட்டுமொத்தமாகப் பண்ணையில் வரும் வருமானம் என்ன என்பதற்கே கவனம் கொடுக்கப்படுகிறது. அப்படிப் பார்க்கும்போது தென்னையில் தேங்காய் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது, வாழையில் தார் அதிகம் கிடைக்கிறது. வாழையில் குறைந்தால் வேறொரு பயிர் அதை ஈடுகட்டுகிறது. இது இயற்கையின் மர்மம். இந்த உண்மையை உழவர்கள் புரிந்துகொண்டாலே, பாதி சிக்கலைத் தீர்த்துவிட முடியும்.
இடைத்தரகர் ஒழிப்பு
செந்தில்நாதன் சந்தித்த அடுத்த சிக்கல் சந்தை. இவர் ஏராளமான தேங்காய்களை உற்பத்தி செய்தாலும், விற்கும்போது விலை குறைந்துவிடுகிறது. அது தவிர இடையில் ஏராளமான இடைத்தரகர்களால் விலையேற்றப்பட்ட பின், நுகர்வோரைச் சென்றடையும்போது விலை கடுமையாக அதிகரித்துவிடுகிறது. அதற்கு மாற்றாக வெளியில் உள்ள மொத்தச் சந்தை விலையைவிட 10 சதவீதம்வரை குறைத்து, தன்னுடைய பண்ணையிலேயே பொருட்களை விற்கிறார். எந்த ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தாத இயற்கைவழி விளைபொருள் இவருடைய பண்ணையிலேயே சந்தை விலையைவிட குறைவாகக் கிடைக்கிறது. இதை வாங்கி விற்பவர்கள் எளிதாக 10 சதவீத லாபத்தைப் பெறுகின்றனர். ஆக, அனைவருக்கும் லாபம் தரும் ஒரு முறையை அவர் கையாளுகிறார்.
அவருடைய பண்ணையில் விளையும் காய்கறிகளைப் பண்ணையில் வேலை செய்யும் பணியாளர்களே பெருமளவு வாங்கிக்கொள்கின்றனர். அதற்கான விலையையும் அவர்களே நிர்ணயம் செய்கின்றனர். இதன் மூலம் பணியாளர்களுக்கும் பயன் கிடைக்கிறது. மொத்தத்தில் மிகச் சிறந்த ஒரு மாதிரிப் பண்ணையாக இவரது 'உணவுக் காடு' விளங்குகிறது.
(அடுத்த வாரம்: நெல்லும் நீரும்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
இவருடைய பண்ணையை அமைத்த பசுமை வெங்கடாசலத்தை தொடர்புகொள்ள: 94435 45862