விளையாட்டுத் திடலாக மட்டுமே ஒரு நிலப் பகுதியைப் பார்த்துப் பழகிய ஒருவருக்கு, 100 வருடங்களுக்கு முன்பு அதே இடத்திலிருந்த ஏரிக்கு நீர்ப்பறவைகள் வலசை வந்த வரலாறு தெரியாது. ஆனால், அந்த இடத்திலேயே வாழ்ந்து வருபவர்களுக்கும் சூழலியலாளர்களுக்கும் அந்த இடத்தைப் பற்றிய புரிதல் மாறுபட்டே இருக் கும். சுற்றுச்சூழலில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழும்போது, அந்தச் சூழலியலைப் பற்றிய கண்ணோட்டத்திலும்கூடத் தலைமுறை இடைவெளி வெளிப்படும்.
மனிதர்களின் கண்ணோட்டத்தில் சுற்றுச்சூழல் எப்படி அணுகப்படுகிறது என்பதை விளக்குகிறது மாறும் அடிப்படைகள் (Shifting Baseline) என்கிற கருத்தாக்கம். 1995இல் கடல்சார் ஆராய்ச்சியாளர் டேனியல் பாலி உருவாக்கிய கருத்தாக்கம் இது. “ஓரிடத்தின் சூழலியல் மாறிக்கொண்டே இருக்கும்போது, எது இயல்பானது என்பது பற்றிய புரிதலும் மாறிக் கொண்டேயிருக் கும்” என்பதே இதன் அடிப்படை. சூழலியல், சமூகவியல், உளவியல், அரசியல் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு கருத்தாக்கமாக இது கருதப்படுகிறது.
தலைமுறை நினைவிழப்பு
மீன்களின் எண்ணிக்கை, சராசரி எடை குறித்த மீனவர்களின் கண்ணோட்டத்தில் இது தெளிவாக வெளிப்படும். வயது முதிர்ந்த, அனுபவமிக்க மீனவர்கள், “முன்பு இருந்த மீன்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்துவிட்டது, எல்லாமே மாறிவிட்டது” என்பார்கள். அதே கடற்பகுதியில் மீன்பிடித்துவரும் இளைய மீனவர்களோ, “மீன்கள் நிறையக் கிடைக்கின்றன, பெரிதாக எந்த மாற்றமும் இல்லை” என்பார்கள். குறைந்த மீன்கள் கிடைக்கும் கடற்பகுதியையே பார்த்துப் பழகிய தலைமுறைக்கு, அதுவே இயல்பானதாகத் தோன்றுகிறது. ஆனால், முதியவர்களோ அதை மாற்றத்தின் விளைவாகப் புரிந்துகொள்கிறார்கள். புதிதாகத் தோன்றும் ஒவ்வொரு தலைமுறைக்கும் இயல்பான சூழல் எது என்பது பற்றிய புரிதல் மாறுகிறது. இது தலைமுறை நினைவிழப்பு (Generational amnesia) எனப்படுகிறது.
சுற்றுச்சூழல் தொடர்ந்து சீரழியும்போது, ஓரிடத்தில் இருக்கும் இயற்கையான சூழலின் சதவீதம் குறைகிறது. நகரமயமாதல் அதிகரிக்கும் போது, இயற்கையோடு செலவழிக்கும் நேரமும் குறை கிறது. அதனால் அடுத்தடுத்த தலைமுறையினர், ‘இயற்கையானது’, ‘இயல்பானது’ என்பதை எப்படி அணுகுகிறார்கள் என்பதும் வேகமாக மாறுகிறது. அடிக்கடி பார்க்கிற பறவைகளைப் பட்டியலிடச் சொல்லும்போது நகரத்து இளைஞர்களும் கிராமத்துப் பெரியவர்களும் எத்தனை பெயர்களைச் சொல்கிறார்கள் என்று ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையைப் புரிந்துகொள்ளலாம்.
பார்வைகளின் அடிப்படை
அடிப்படைகள் மாறிக்கொண்டேயிருப்பது என்பது மாற்றம் சார்ந்தது என்றாலும், அதன் பின்விளைவுகள் மோசமானவை. மாறும் அடிப்படைகளால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று 2018இல் வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரையில் சூழலியலாளர்கள் மசாஷி சோகா, கெவின் காஸ்டன் ஆகியோர் குறிப்பிட்டிருக்கிறார்கள்: சீரழிந்த சூழலியலைப் பார்த்து வளரும் தலைமுறையினர், அடுத்தடுத்த சூழலியல் சீரழிவுகளைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. எது இயல்பானது, எதைப் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றிய மக்களின் எதிர்பார்ப்பு இதனால் மாறுகிறது. சூழலியல் சீர்கேடு முழுவதுமாகச் சீரமைக்கப்படுவதில்லை. “ஒரு சூழலியல் எப்படி மாறுகிறது என்பதையே உணராதபோது, அதைப் பாதுகாக்க நீங்கள் எப்படி முன் வருவீர்கள்?” என்று கேட்கிறார்கள் சூழலியலாளர்கள்.
2018இல் ஜப்பானில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அழிந்துவரும் பவளத்திட்டைப் பாதுகாப்பதற்கு உதவுவீர்களா என்று கருத்துக்கணிப்பு நடத்தப் பட்டது. முதியவர்கள் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இளையவர்கள் பலரும் பவளத்திட்டுகள் நன்றாக இருக்கின்றன, அவற்றைப் பாதுகாக்கத் தேவையில்லை என்று கூறினார்கள். ‘காடு’ என்பதைப் பழங்குடியினர் புரிந்துகொள்வதற்கும் சமவெளி மக்கள் புரிந்து கொள்வதற்கும் இடையில் பெரும் வேறுபாட்டை உணர முடியும். அதுவும் மாறும் அடிப்படைகள் குறித்த கருத்தாக்கத்துக்கான உதாரணம்தான். இதே பிரச்சினை காலநிலை மாற்றம் பற்றிய கண்ணோட்டத்திலும் வெளிப்படுகிறது.
கள ஆய்வு மட்டும் போதுமா?
சூழலியல் ஆய்வுகளுக்குள் இந்தக் கருத்தாக்கம் எப்படி இயங்குகிறது என்பதை விரிவாக விளக்குகிறார் கடல்சார் ஆராய்ச்சியாளர் டேனியல் பாலி. அறிவியல்ரீதியாகத் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கிய பின்னர் கிடைக்கும் ஆவணங்களையே அறிவியலாளர்கள் ஆய்வுக்காக எடுத்துக்கொள்கிறார்கள். இந்தத் தரவுகள் சமீபகாலத்தியவை என்பதால், அதற்கு முந்தைய காலகட்டத்தின் சூழலியல் எப்படி இருந்தது என்பதை நாம் பார்க்க மறுக்கிறோம். வரலாற்றுரீதியாக ஒரு சூழலியல் எப்படி இருந்தது என்று மீள் கட்டமைப்பு செய்ய வேண்டுமென்றால் (Historical reconstruction), அறிவியல் தரவுகள் மட்டுமல்லாமல் மற்ற ஆவணங்களையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
செவிவழிச் செய்திகள், வரலாற்றுக் குறிப்புகள், இலக்கியங்கள், பயணக் கட்டுரைகள், கப்பல் குறிப்புகள், அரசவை ஆவணங்கள் போன்ற எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தால் மட்டுமே சூழலியல் மாற்றத்தின் தீவிரம் நமக்குப் புரியும். மாணவர் தங்கும் விடுதியில் தரப்பட்ட உணவுப் பட்டியலைக்கொண்டே போர்னியோவில் காட்டுப்பன்றிகளுடைய எண்ணிக்கையில் ஏற்பட்ட மாறுதலைக் கணித்திருக்கிறார் ஜூலியன் கால்டேகாட் என்கிற அறிவியலாளர். இது போன்ற ஆய்வுகளை முன்னோடியாகக்கொண்டு சூழலியல் ரீதியிலான வரலாற்று மாற்றங்களை ஆவணப்படுத்த முயலலாம்.
கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர் தொடர்புக்கு: nans.mythila@gmail.com