16ஆம் நூற்றாண்டில் பல ஐரோப்பிய நாடுகளின் பயணிகள், அரசு சார்புடைய நிறுவனங்கள் போன்றவை உலகம் முழுக்கப் பயணித்துப் புதிய நிலங்களையும் தீவுகளையும் நாடுகளையும் கைப்பற்றத் தொடங்கின. கைப்பற்றிய நிலப்பரப்புகளை ஆக்கிரமித்த காலனி ஆதிக்கவாதிகள், கைப்பற்றிய நாடுகளின் அரசியல், பொருளாதாரச் சூழலை முற்றிலுமாக மாற்றியமைத்தார்கள். காலனியாதிக்கக் காலகட்டம் மனித வரலாற்றில் பல திருப்பங்களுக்குக் காரணமாக அமைந்தது. அதேநேரம், காலனியாதிக்க மனநிலையும் அது முன்னிறுத்திய தத்துவமும் சூழலியல் சுரண்டலுக்கும் வழிவகுத்தன.
இயற்கையின் எல்லாக் கூறுகளையும் ‘வளம்’ என்று அடையாளப்படுத்தி அவற்றைச் சுரண்டுவது, சூழலியலின்மீது ஆதிக்கம் செலுத்துவது ஆகிய காலனி யாதிக்கச் செயல்பாடுகள் சூழலியல்சார் காலனியாதிக்கம் (Ecological Colonialism/ Eco colonialism) எனப்படுகிறது. ஆல்ஃபிரெட் கிராஸ்பி என்கிற வரலாற்று அறிஞரின் முன்மொழிவில் இந்தக் கருத்தாக்கம் 1986இல் உருவாக்கப்பட்டது.
எதிர்நிலைக்குத் தள்ளிய ஆதிக்கம்
காலனியாதிக்கத்துக்கு முந்தைய காலகட்டத்தில் இயற்கையும் மனிதனும் எதிர் நிலைகளில் நிறுத்தப்படும் இருமையத்தன்மையைப் பெற்றிருக்கவில்லை. உலகின் பல தொல்குடிகள் நில உடைமையாளர்களாக அல்லாமல், நிலத்தில் வசிப்ப வர்களாகவே தங்களைக் கருதிவந்தனர். இயற்கையின் ஓர் அங்கமாகவே மனித இனம் தன்னை நினைத்திருந்தது. உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் பண்பாட்டு, இனக்குழு சார்ந்த அடை யாளங்கள் இருந்தன. அவை நம்பிக்கை அடிப்படையில் பூடகமாக, நாட்டார் கதைகள் மூலமாக, குலச்சின்னங்களாக மனிதர்களோடு பிணைக்கப்பட்டிருந்தன (Totemic relationships). பல உயிரினங் களும் தாவரங்களும் இயல்பாகவே பாதுகாக்கப்பட்டன. காலனியாதிக்கம் இவற்றைச் சிதைத்தது.
ஒரு நிலப்பரப்பின் சூழலியல்மீது ஆதிக்கம் செலுத்துவது என்பது, ஒரு இனக்குழுவின்மீது ஆதிக்கம் செலுத்து வதற்கான முதல் படியாக காலனியாதிக்கம் கருதியது. மனிதனையும் இயற்கையையும் எதிரெதிராகப் பார்க்கும் பார்வை, சூழலியல்சார் இனவாதம், கட்டுப்பாடின்றி வளங்களைச் சுரண்டுவது ஆகிய மனநிலைகளோடு செயல்பட்ட காலனி ஆதிக்கவாதிகள், காலனி நாடுகளின் சூழலியலைச் சீர்குலைத்தனர்.
ஒட்டுமொத்த சிதைவு
இந்தியாவில் காலடி எடுத்துவைத்த பிரிட்டிஷார், ஆரம்ப காலகட்டங்களில் கப்பல் - ரயில் கட்டுமானத்திற்காகவும் சாலைகள் அமைக்கவும் லட்சக்கணக்கில் காட்டு மரங்களை வெட்டியதாகக் குறிப்பிடுகிறார் ஆய்வாளர் ராமச்சந்திர குஹா. உயிரின, இனக்குழுவின் அடையாளம், இயற்கையின் அங்கம் ஆகிய அம்சங்கள் மறைந்து, வெறும் பயன்பாட்டுப் பொருளாக மட்டுமே இயற்கையின் கூறுகளைப் பாவிக்கும் காலனியாதிக்க மனப்பான்மையை இதிலிருந்து உணர்ந்து கொள்ள முடியும்.
இப்படிப் பல நாடுகளில் காடுசார் வளங்கள் முற்றிலும் சுரண்டப்பட்டன. அடிப்படை உணவுத் தேவைக்காக வேட்டையாடும் தொல்குடிகளைக் காட்டு மிராண்டிகளாக அடையாளப்படுத்தி விட்டு, காலனி ஆதிக்கவாதிகள் பொழுது போக்குக்காகக் குடியேறிய நாடுகளின் உயிரினங்களை வேட்டையாடினர்.
அத்துடன் அவர்கள் கொண்டுவந்த செல்லப் பிராணிகளும் தாவரங்களும் புதிய நாடுகளின் சூழலோடு முரண்பட்டன. காலனி ஆதிக்கவாதிகளின் செம்மறியாடு களைக் காப்பதற்காக தைலசீன் (Tasmanian Tiger) எனப்படும் இரைகொல்லி, காலனி ஆதிக்கவாதிகளின் செல்லப்பிராணி களோடு முரண்பட்டு Crescent Nail tail wallaby எனப்படும் கங்காருவைப் போன்ற இனம் உள்ளிட்டவை முற்றிலும் அற்றுப்போய்விட்டன. அத்துடன் காலனி ஆதிக்கவாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட பல உயிரினங்கள், ஊடுருவிய இனங்க ளாக மாறி இன்றைக்குப் பல நாடுகளின் சூழலியலைச் சிதைத்துவருகின்றன.
காலனி ஆதிக்கவாதிகள் குடியேறிய நாடுகளில் ஒற்றைப் பயிர்களைப் பரவலாகச் சாகுபடி செய்யும் பெருந் தோட்டங்களைக் (Monoculture plantations) உருவாக்கினர். இந்தத் தோட்டங்களில் ஐரோப்பியர்களுக்குத் தேவையான அயல் பயிர்கள் பயிரிடப்பட்டு, உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் செயல் படுத்தப்பட்டன. மண்வளம் குன்றுவதற்கு இது முக்கியமான காரணியாக விளங்கியது.
இப்படித் தங்கள் செயல்பாடுகளால் வளங்கள் வேகமாக அழிவதை ஒருகட்டத்தில் உணர்ந்த காலனி ஆதிக்கவாதிகள், இனவாத அடிப்படையில் சூழலியல் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்கினர். அதுவும் அங்கிருந்த இனக்குழுக்களுக்கு எதிராகவே அமைந்தது. இந்தியாவில் பிரிட்டிஷார் உருவாக்கிய பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளிலிருந்து தொல்குடிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
மீட்பர் மனோபாவம்
காலனியாதிக்கத்திலிருந்து பல நாடுகள் விடுதலை பெற்றுவிட்ட இந்தக் காலகட்டத்திலும், சூழலியல் பாதுகாப்பின் பல திட்டங்களில் அந்த மனநிலை எதிரொலித்துக்கொண்டேயிருக்கிறது. ஆப்பிரிக்கா - ஆசிய நாடுகளின் சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்து பல மேலைநாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவிக்கின்றன. ‘ஆப்பிரிக்காவை ஆப்பிரிக்கர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்’ என்கிற வாசகத்தோடு அங்கே நிலவும் வேட்டையை விமர்சிப்பது, ஆசிய இனக்குழுக்களின் சூழலியல் செயல்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்துவது ஆகியவை இன்றைக்கும் தொடர்கின்றன. சுற்றுச்சூழலைச் சுரண்டும் காட்டுமிராண்டிகளாகக் கீழை நாடுகளைப் பொதுமைப்படுத்தி, எல்லாம் அறிந்த மீட்பர்களாக மேலை நாடுகள் தங்களை நிலைநிறுத்தும் இந்த வழக்கத்தை வெள்ளையர்களின் மீட்பர் மனோபாவம் (White Saviour Complex) என்கிறார் நைஜீரிய அமெரிக்க எழுத்தாளர் தேஜூ கோல்.
காலனி ஆதிக்கவாதிகள் உருவாக்கிய சட்டங்களில் இனவாதக் கூறுகளை இனம் கண்டு, அவற்றைத் திருத்துவது இன்றைய சூழலியல் பாதுகாப்பின் முக்கியப் பணியாக இருக்கிறது. சூழலியல் கல்வியிலும் இந்த மனோபாவம் சார்ந்த பாதிப்பு இருக்கிறதா என்கிற கேள்வியும் அண்மைக்காலத்தில் எழுப்பப்பட்டு வருகிறது. வேட்டை, உயிரினங்களுக்கும் மனிதர்களுக்குமான முரண், காடுகளில் வசிக்கும் இனக்குழுக்களின் செயல்பாடு ஆகியவை பற்றிய காலனி ஆதிக்கவாதி களின் புரிதல் சூழலியல் நீதிக்கு முற்றிலும் எதிரானது. ஆகவே, அந்தப் புரிதலிலிருந்து விடுபட வேண்டியது அவசியம். கடந்த கால - தற்காலக் காலனியாதிக்க மனோபாவத்தின் தாக்கம் அறவே இன்றி, சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com