உயிர் மூச்சு

முன்னத்தி ஏர் 11 : வேளாண்மை வருமானம் தர...

பாமயன்

இயற்கைவழி வேளாண்மையாக இருந்தாலும்கூட ஓரினச் சாகுபடி என்பது என்றைக்குமே உழவர்களுக்குப் பயன்தருவது கிடையாது. ஓரினச் சாகுபடி என்பது பண்ணை முழுவதும் ஒரே வகையான பயிரை வளர்ப்பது. கரும்பையோ, வாழையையோ அல்லது நெல்லையோ மட்டுமே ஒற்றை பயிராகச் சாகுபடி செய்வதை ஓரினச் சாகுபடி என்கிறோம்.

ஓரினச் சாகுபடியின் பிரச்சினை

இந்த முறையால் உழவருக்கு லாபம் கிடைப்பதில்லை, வாங்கி விற்கும் தரகர்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கிறது. எப்போதெல்லாம் விளைச்சல் அதிகமாக இருக்குமோ, அப்போதெல்லாம் விளைச்சலுக்கான விலை குறைவாகவே இருக்கிறது.

எப்போதெல்லாம் சந்தை விலை அதிகமாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் உழவருக்கு விளைச்சல் குறைவாகவே இருக்கிறது. எனவே, விளைச்சலை எவ்வளவு நுட்பமாக அதிகப்படுத்தினாலும், உழவர்களுக்கு எந்த வகையிலும் லாபம் கிடைப்பதில்லை. இந்தச் சந்தை சூ(ழ்)த்திரத்தை அறியாமல், உற்பத்தியைப் பெருக்க உழவர்கள் தமது உயிரைக் கொடுத்துப் போராடுகிறார்கள்.

அரசும் எவ்வாறு விளைச்சலைப் பெருக்கலாம் என்பதற்கே ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறது. சந்தையைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஒரு நியாயமான சந்தையை உருவாக்கவோ அரசு முனையவில்லை.

எனவே, இயற்கைவழி வேளாண்மையிலும் ஓரினச் சாகுபடியைத் தவிர்த்துப் பன்மயச் சாகுபடி முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது, உழவர்களின் தேவையாக உள்ளது. அப்போதுதான் உழவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும். பெரும் பணம் ஈட்ட முடியாவிட்டாலும், நஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி பன்மயச் சாகுபடி மட்டுமே.

அளவோடு பயிரிடுவோம்

ஒரு பண்ணையாளர் தனது பண்ணையில் உள்ள நிலத்தில் பத்து விழுக்காட்டுக்கு மேல் காய்கறி சாகுபடியில் இறங்கக் கூடாது. அதேபோல, தானியங்கள் என்றாலும், எண்ணெய்ப் பயிர்கள் என்றாலும் இந்த அளவை அதிகப்படுத்தக் கூடாது.

சந்தைக்காக நமது சாகுபடிப் பரப்பை மாற்றினால், சந்தை சிக்கலுக்குள் நாம் மாட்டிக்கொள்வோம். நமது குடும்பத்துக்கான பணத்தேவை என்ன என்பதைச் சிந்தித்து, அதை மட்டுமே சந்தையில் இருந்து வருமாறு ஆக்கிக்கொள்ள வேண்டும். அதன்படி பணப்பயிர்கள் அல்லது சந்தைக்கான பயிர்களை அளவோடு பயிரிட வேண்டும்.

ஆனால், நமது உழவர் பெருமக்கள் பத்து ஏக்கர் வைத்திருந்தால், அந்தப் பத்து ஏக்கரிலும் கரும்பைச் சாகுபடி செய்கின்றனர். அதற்கு அரசும் வங்கிகள் வழியாக உடனடி கடனை ஏற்பாடு செய்து தருகிறது. கரும்பை வாங்குவதற்கு ஆலைகள் உறுதியளித்துவிடுகின்றன. (அவர்கள் சரியான நேரத்தில் வெட்டி எடுப்பதில்லை என்பது வேறு கதை). ஆக, இப்படி உத்தரவாதமான கரும்பைச் சாகுபடி செய்த உழவர்களே, பின்னர்ப் பெரும் சிக்கலுக்கு ஆளாகிறார்கள்.

இதற்காக இவர்கள் பயன்படுத்தும் நீரைக் கணக்கிட்டால் கண்ணீர்தான் மிஞ்சும். அவ்வளவு நீரையும் ரசாயனங்களைக் கொட்டிப் பூச்சிக்கொல்லிகளை வீசி, கடைசியில் மிகக் குறைவான விலைக்கு ஆலைக்குத் தள்ளுகின்றனர்.

மற்றப் பயிர்களைக் கணக்கிட்டால் எந்த வழியிலும் தப்ப முடியாதபடி உழவர்கள் நெருக்கப்பட்டுள்ளனர். ஆகவே தேவைக்கான சாகுபடி, அதன் பின்னரே சந்தைக்கான சாகுபடி என்ற கோட்பாட்டை முதலில் வகுத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல தொழில் தேடி

இப்போது அனைவருக்கும் ஒரு கேள்வி வரும். அப்படியானால் குழந்தைகளின் கல்வி, உடை, மருத்துவம், மற்றத் தேவைகளுக்குப் பணம் வேண்டாமா என்ற கேள்வியே அது. கட்டாயம் தேவை, அதற்காக மட்டுமே நாம் சந்தையை நோக்கி உற்பத்தி செய்ய வேண்டும். அந்தச் சந்தையைக்கூட, முடிந்தவரை நமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் இப்போது பெரும்பாலான நிலம் உடையவர்கள், மற்றத் துறைகளில் இருந்துகொண்டு லாப நோக்கில் வேளாண்மையை ஒரு வணிகமாகச் செய்துவிடலாம் என்று கருதி இறங்குகின்றனர். இவர்கள் ஒரு நியாயமான தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்கள். மற்றத் துறைகளில் உள்ள சீர்கெட்ட தன்மைகளைக் கண்டு மனம் வெதும்பி, வேளாண்மைக்குள் வருபவர்கள். அவர்கள் உண்மையில் மனச்சான்றுடன் வாழ விரும்பும் கண்ணியமானவர்கள்.

குறிப்பாகப் பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்து வெறுப்புற்று வெளியேறுபவர்கள், தொழில்துறையில் தாம் செய்த சூழலியல் அழிவுகளுக்குக் கழுவாய் தேட விரும்புபவர்கள், அல்லது இயற்கைவழி வேளாண்மையின் புதிய வளர்ச்சியைக் கண்டு ஈர்க்கப்பட்ட இளைஞர்கள்தான் அவர்கள். இவர்கள் யாராக இருந்தாலும்,

நமது நாட்டின் சந்தை சூதாட்டத்தை நுட்பமாகப் புரிந்துகொள்ளாதவர்கள். உலகமயச் சந்தை என்பது சிறிதும் ஈவு இரக்கமற்ற எந்திரத்தனமானது என்பதும், அதை இயக்குபவர்கள், லாபம் ஒன்றை மட்டுமே குறிவைத்து இயங்குபவர்கள் என்பதையும் புரிந்துகொள்ளாதவர்கள். அல்லது புரிந்துகொண்டு வென்றுவிட முடியும் என்று நம்புகிறவர்கள். ஆனால், உண்மை அப்படி இல்லை.

பல பயிர் சாகுபடி

வேளாண்மையில் பொய்யும் புனைசுருட்டும் எடுபடாது. பயிர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு விளைச்சலைக் கூடுதலாகத் தந்துவிடாது. ஊழல் செய்து பூச்சிகளை வேலை செய்யாமல் நிறுத்த முடியாது. அடிதடி நடத்திப் பொக்குகளையும் பதர்களையும் நன்மணிகளாகக் காட்ட முடியாது. எனவே, இன்றுள்ள அநியாயச் சந்தையில் வேளாண்மை என்னும் நியாயத் தொழில் நிற்கவே முடியாது. இதற்கு வேறு வகையான அடிப்படை மாற்றம் தேவை.

நமது சங்க இலக்கியமான பட்டினப்பாலை குறிப்பிடுவதுபோல,

‘கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது'

அதாவது வாங்கிக்கொள்ளும் நுகர்வோர் கொடுக்கும் காசுக்குக் கூடுதலாக வாங்காமல் இருப்பதும், விலை வைத்து விற்பவர்கள் பொருளின் தரத்தைக் குறைக்காமல் சரியாகக் கொடுப்பதும் நடக்கும்போது விளைவிக்கும் உழவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

ஆனால், இன்றைய நிலைமை அப்படியல்ல. எனவே சந்தையைப் புரிந்துகொள்ள வேண்டியது உழவர்களின் கடமை. எனவே, ஓரினப் பயிர் சாகுபடி என்பது நாமே வலியப் போய் சந்தையில் மாட்டிக்கொள்ளும் ஆபத்தான செயல். எனவே, பல பயிர் சாகுபடி என்பதே இன்றைக்கு ஏற்றது.

SCROLL FOR NEXT