பசுமையான சூழலில் வசித்தால் மனம் அமைதியடையும் என்பது, அறிவியல் நிரூபணங் களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இயல்பாக உணர்ந்த ஒன்று. இதன் எதிரிடையாக, காலநிலை மாற்றத்தால் பேரிடர்களைச் சந்திப்பவர்களின் மனநலம் பாதிக்கப்படுவதும் உண்மை.
தொடர் பேரிடர்களைச் சந்திக்கும் மக்களுக்கு, போர்ச் சூழலில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் அளவுக்கு மனநலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை அதிகரித்துள்ள நாடுகளில் மனிதர்கள் எளிதில் கோபப்படுகிறார்கள், குடும்ப வன்முறை அதிகரிக்கிறது எனப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை அறிந்த உலகின் பல நாடுகள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல்நலக் கேடுகளுடன் மனநலனையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தயாராகி வருகின்றன.
சுற்றுச்சூழல் சார்ந்த உளவியல் என்பது வேகமாக வளர்ந்துவரும் துறை. அதில் சில புதிய கருத்தாக்கங்கள் தற்போது விவாதிக்கப்பட்டுவருகின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடுகளாலும் காலநிலை மாற்றத்தாலும் கண் முன்னே உலகம் தலைகீழாக மாறுவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள், உளவியல்ரீதியாக அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை முன்வைத்தே இந்தக் கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
பதற்ற நோய்
சூழலியல்சார் பதற்றம் (Eco anxiety) என்பதை, ‘சுற்றுச்சூழலின் முற்றறிவு/ஊழிக்காலத்தைப் பற்றிய தொடர் பயம்’ என்று வரையறுக்கிறது அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு. “இதே நிலை தொடர்ந்தால் ஒருகாலத்தில் நாம் வாழ்வதற்குத் தகுதியற்றதாக இந்தப் பூமி மாறிவிடும்”என்று பதற்றப்படுவதை 2017இல் உருவாக்கப்பட்ட மேற்கண்ட கருத்தாக்கம் குறிக்கிறது. நல்ல சுற்றுச்சூழலும் நிலைத்த காலநிலையும் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். அவை இல்லாமல் போகும்போது, மனிதர்கள் பதற்றத்துக்கு ஆளாகி றார்கள். இது இருத்தலியல் சிக்கலாகவும், இருப்பு - எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையாகவும் வெளிப்படுகிறது.
மேலைநாடுகளில் இப்போது சூழலியல்சார் பதற்றம் வேகமாகப் பரவிவருகிறது. பின்லாந்து நாட்டில் உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக வருகிற பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் - பதின் பருவத்தினருக்குச் சூழலியல் பதற்றம் இருக்கிறது என்று 2020இல் வெளியான ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. “சூழலியல் சீர்கேடு, காலநிலை மாற்றம் ஆகியவை அசல் பிரச்சினைகள் என்பதால், அவற்றைச் சார்ந்து எழும் பதற்றம் இயல்பானது. ஆனால், அது நம்மை உலுக்கக் கூடியது. சில நேரம் நம் அன்றாடச் செயல்பாடுகளைப் பாதிக்கும் அளவுக்குத் தீவிர மனநோயாகவும் மாறக்கூடும்" என்கிறார் உளவியலாளர் கிரெய்க் சால்க்விஸ்ட்.
காலநிலை - சூழலியல் ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், தொல்குடிகள் ஆகியோர் எளிதில் சூழலியல் பதற்றத்துக்கு ஆளாகின்றனர். தூக்க மின்மை, கையறு நிலை, அடிக்கடி கோபப்படுவது, எதிர்காலத்தின்மீது நம்பிக்கையின்றி இருப்பது என்று இது பலவிதங்களில் வெளிப்படுகிறது. சிலர், சூழலியல் பதற்றத்தை எதிர்கொள்வதற்காக, சூழலியல் பாதுகாப்பு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.அது அவர்கள் மனத்துக்கு ஆறுதல் அளிப்ப தாகவும் கூறுகிறார்கள். அதீதப் பதற்றத்துக்கு ஆளாகும் நபர்கள், முழுவதுமாக நம்பிக்கை இழந்து, “சுற்றுச் சூழலுக்காக நான் எதுவும் செய்யப் போவதில்லை”என்கிற சூழலியல் முடக்கநிலைக்குத் (Eco paralysis) தள்ளப்படு கிறார்கள். தனிநபர் சிகிச்சைகளை மையப்படுத்திய மனநலத் துறை யில், இதுபோன்ற சமூகம் சார்ந்த கூட்டுப் பதற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான முதற்கட்ட ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.
இந்திய நிலைமை
இந்தியாவைப் பொறுத்தவரை, காற்று மாசு அதிகமுள்ள வட மாநிலங்களில் சூழலியல் பதற்றம் அதிகமாக இருக்கிறது. வெள்ளம், பேரிடர் போன்ற குறுகியகாலப் பிரச்சினைகளுடன் ஒப்பிடும்போது, வீரியம் குறைந்த, ஆனால் தொடர்ந்து பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கிற மௌனப் பிரச்சினையாகக் காற்று மாசு பிரச்சினை இருக்கிறது. அது அடிமனத்தில் பதற்றத்தை உருவாக்கு கிறது. காற்று மாசால் நோய்க்கு ஆளாகும் குழந்தைகளின் பெற்றோர், தங்கள் வாரிசுகளின் எதிர்காலத்தை நினைத்து அதீத பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். காற்று மாசு அதிகமாக உள்ள மாதங்களில், இவர்களின் பதற்றத்தின் அளவும் அதிகரிக்கிறது.
சூழலியல் விசனம் (Eco grief) என்றொரு கருத்தாக்கமும் உண்டு. கண் முன்னே ஒரு பெரு நிலப்பரப்பு அழிந்து, அடையாளமே தெரியாதபடி சூழலியல் மாறிப்போகும்போது ஏற்படும் இழப்பு சார்ந்த துக்கம் அது. “கடலின் மீதிருக்கும் பனிப்பாறைகளில் வாழும் மக்கள் என்பதுதான் எங்களது அடையாளம், இந்தப் பனிப்பாறைகள் உருகிவிட்டால் எங்கள் அடையாளம் என்னவாகும்?”என்று கேள்வி எழுப்புகிறார் வடதுருவத்தைச் சேர்ந்த இனியூட் தொல்குடி ஒருவர். காட்டுத் தொல்குடிகள், மீனவர்கள் ஆகியோரைப் போல இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்வை வாழ்ந்துவரும் இனக்குழுக்கள் இந்தப் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.
“நம் பூமி, முந்தைய தலைமுறையிட மிருந்து கிடைத்த பரிசு அல்ல, அடுத்த தலைமுறையிடமிருந்து நாம் வாங்கியிருக்கும் கடன்”என்றொரு கருத்து உண்டு. நம் வாரிசுகள் வாழத் தகுதியில்லாததாக இந்த பூமி மாறக்கூடும் என்கிற எண்ணம், மனித இனத்துக்கே பெரும் பதற்றத்தை உருவாக்கக் கூடியது. அது நம்மை இயல்பாக இருக்க விடாது, இயங்க விடாது, உறங்க விடாது. உளவியலாளர்கள் மட்டுமல்லாமல் வளர்ச்சித் திட்டங்களை வரையறுப்பவர்களும் அரசும் சேர்ந்தே இதை எதிர்கொண்டாக வேண்டும்.
கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com