மாகாளிக் கிழங்கு என்ற பெயரைக் கேட்கும் போதெல்லாம் என்னுடைய தாயின் நினைவும் அவர் தயாரிக்கும் மாகாளிக் கிழங்கு ஊறுகாயின் நினைவும்தான் உடனே எனக்குத் தோன்றும். அத்துடன் திருச்சி மலைக்கோட்டை நுழைவாயிலுக்கு எதிரில் ஊறுகாய் தாவரங்கள் விற்கும் நான்கைந்து தெருவோரக் கடைகளும் நினைவுக்கு வரும். பல் தேய்க்க உதவும் ஆலங்குச்சி கட்டை போன்று மாகாளிக் கிழங்கின் சீரான வேர்த் துண்டுகளின் கட்டு அந்தக் கடைகளில் விற்கப்படும்.
இந்தக் கட்டுகளில் சிலவற்றை வாங்கி, வேர்க்கிழங்குகளின் மையத்திலுள்ள கடினமான நார்ப் பகுதியை நீக்கிவிட்டு, கிழங்குப் பகுதிகளைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி உப்பு, மிளகாய்த்தூள், சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்த வெந்நீரில் போட்டு என்னுடைய தாய் ஊறுகாய் தயாரிப்பார். இதனுடன் நிறைய மோரையும் கலப்பார்.
சுவையும் மணமும்
ஒரு வாரத்துக்குள் ஊறுகாய் பயன்படத் தயாராகிவிடும். தயிருடன் கலந்த பழைய சாதத்துடன் இந்த ஊறுகாயைத் தொட்டுச் சாப்பிடுவது மிகுந்த சுவையாக இருக்கும். மாகாளிக் கிழங்குத் துண்டுகள் தீர்ந்தவுடன் எஞ்சியுள்ள ஊறுகாய் நீரில் வாழைத்தண்டுத் துண்டுகளையோ, எலுமிச்சைப் பழத் துண்டுகளையோ போட்டு என்னுடைய தாய் மற்றொரு ஊறுகாய் தயாரிப்பார்.
இந்த ஊறுகாய் நீர் அடர் வானில்லா (Vanilla) (தற்போது தவறாக வெந்நிலா என்று மருவிவிட்டது) சுவையுடன் இருக்கும், நன்னாரியின் சுவையையும் மணத்தையும்கூடக் கொண்டிருக்கும். மேற்கூறப்பட்ட ஊறுகாய் தாவரங்கள் விற்கும் பகுதிக்கு அண்மையில் சென்றிருந்தபோது, ஒன்றிரண்டு கடைகள் மட்டுமே இருப்பதைப் பார்க்க முடிந்தது. மாகாளிக் கிழங்குக் கட்டுகளின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே காணப்பட்டன. மாகாளிக் கிழங்கைத் தேடி வாங்க வருவோரின் எண்ணிக்கை, தற்போது கணிசமாகக் குறைந்துவிட்டது மட்டுமின்றி, கடைக்கு வரும் கட்டுகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டன என்று அந்தக் கடையின் மூதாட்டி கூறினார்.
அருகிய தாவரம்
உண்மையில் மாகாளிக் கிழங்குத் தாவரத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது என்று என்னுடைய மாணவர்கள் ஒரு சிலரின் கள ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஐ.யு.சி.என். என்ற பன்னாட்டு உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் உலகளவில் ஆபத்திலுள்ள ஒரு தாவரம் என்று மாகாளிக் கிழங்குத் தாவரத்தை அடையாளமிட்டுள்ளது.
இதன் இயல்பான வளரும் பரப்பு குறைந்துவிட்டது, தாவரத்தொகையளவும் (Population size) சுருங்கிவிட்டது, இதன் அழிப்பு அறுவடையும் (destructive harvesting) அதிகமாகிவிட்டது.
மரக்கொடி
மாவிலங்குக் கிழங்கு, பெருநன்னாரி, வரணி, குமாரகம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் மாகாளிக் கிழங்கின் தாவரப் பெயர் டிகாலெபிஸ் ஹாமில்டோனிஐ (Decalepis hamiltonii தாவரக் குடும்பம்: asclepiadaceae). மரக்கொடியாக வளரும் இந்தத் தாவரம் கிழக்கு மலைத் தொடரின் தென் பகுதிகளில் திறந்தவெளி பாறைச் சரிவுகளில் (300 1200 மீட்டர் உயரம்வரை) மட்டுமே காணப்படுகிறது. இது ஒரு ஓரிடவாழ் (Endemic) தாவரம். ஒட்டும்தன்மை கொண்ட பால் (latex) இந்தத் தாவரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இதன் மலர்கள் சிறியவை, மஞ்சள் நிறமானவை, உலர்ந்த வெடிகனிகள் (எருக்கம் கனிகளைப் போன்று) எப்பொழுதும் ஜோடியாகவே காணப்படும். விதைகளின் நுனியில் குடுமியைப்போல, பட்டு போன்ற மயிர்களின் ஒரு கொத்து காணப்படும்.
(அடுத்த வாரம்: நம் நாட்டு மணமூட்டி)
- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in