உயிர் மூச்சு

அழியும் நிலம், மிரட்டும் பாலை

ஆதி

பாலையாதலைக் கட்டுப்படுத்தும் உலக நாள்: ஜூன்-17

நமது நாட்டின் புவிப் பரப்பில் நான்கில் ஒரு பகுதி பாலையாகிவருகிறது (Desertification) என்று மத்திய அரசு அறிக்கை ஒன்று கூறுகிறது. இது எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்து வருகிறது.

ஐ.நா. பாலையாதலைக் கட்டுப்படுத்தும் பேரவைக்கு மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கை, நிலச் சீர்கேடும் வறட்சியும் இந்தியாவில் தொடர்வதாகக் கூறுகிறது. இந்தியாவின் மொத்தப் பரப்பில் 32 சதவீதம் நிலச் சீர்கேடு அடைந்துவருகிறது. நிலம் பாலையாதல், நிலச் சீர்கேடு, வறட்சி ஆகியவை இந்தியாவின் 7,91,475 சதுர கிலோ மீட்டர் பரப்பைப் பாதித்திருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நிலச் சீர்கேடு

பாலையாதல் என்பது நிலச் சீர்கேட்டின் ஒரு வடிவம்தான். சாதாரணமாகவே வறண்டிருக்கும் ஒரு நிலப்பகுதி, கடுமையாக வறண்டு போவது, அப்பகுதியில் இருக்கும் நீர்நிலைகள், தாவரங்கள், உயிரினங்கள் போன்றவை அழிவது ஆகியவற்றின் மொத்த விளைவுதான் பாலையாதல் எனப்படுகிறது. இதனால் மக்களுக்குத் தண்ணீர், உணவு ஆகியவை கிடைப்பதும் பற்றாக்குறையாகிவிடுகிறது.

வறட்சி, பருவநிலை மாற்றம், கட்டுப்பாடற்ற வேளாண் பயன்பாடு, மேய்ச்சல், விறகு மற்றும் கட்டுமானத்துக்காகக் காட்டை அழித்தல் போன்றவையே பாலையாதலுக்கு முக்கியக் காரணங்கள்.

தாவரங்கள் அழிவு

இயற்கை வளத்தைச் சூறையாடுவதே பாலையாதலுக்கு முக்கியக் காரணமாக இருப்பதால், பாதிக்கப்பட்ட பகுதியின் தாவரங்கள்தான் முதலில் அழியும். ஆனால் தாவரங்களே, ஒரு பகுதியின் மண் வளத்தைத் தீர்மானிக்கின்றன. தாவரங்கள் இல்லாத பகுதியில் மண்ணரிப்பும், நீர் வீணாதலும் அதிகரிக்கிறது. அத்துடன் தாவரங்கள் அழிக்கப்பட்ட, பாதுகாப்பற்ற வறண்ட நிலப்பகுதியில் உள்ள வளமான மேல் மண் காற்றாலோ அல்லது திடீர் வெள்ளத்தாலோ அடித்துச் செல்லப்படும். இதனால், அந்த நிலப்பகுதி எதுவும் விளையாத கட்டாந்தரையாக மாறிவிடுகிறது.

மற்றொரு புறம் பெருமளவு கால்நடைகளும் காட்டுயிர்களும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இயல்பாக நகர்வது தாவரங்களையும், மண் வளத்தையும் பாதுகாக்க உதவுகிறது. இந்த இயல்பான நகர்வை மனிதத் தலையீடுதான் தடை செய்கிறது.

வாழ்வாதார இழப்பு

பாலையாதல் வெறும் சூழலியல் பிரச்சினை மட்டு மல்ல. இதன் காரணமாகக் கிராமங்கள், நிலப்பகுதிகள், நீர்நிலைகள் அழிந்து போகின்றன. பாலையாதலால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துவருகின்றனர். உணவு, தண்ணீர் கிடைப்பதில் ஏற்படும் தடையும், அதன் தொடர்ச்சியாக வேலையிழப்பும் அதிகரிக்கின்றன, லட்சக்கணக் கானோர் இடம்பெயர்கின்றனர்.

நிலத்தைப் பயன்படுத்துவதில் சரியான திட்டம், கழிவையும் சீர்கேடு அடைந்த நிலத்தையும் நிர்வகிக்கும் திறன் அதிகரிப்பு, நீர் ஆதாரங்களைத் திறன்மிக்க வகையில் பயன்படுத்துவது போன்றவற்றின் மூலமே பாலையாதலை எதிர்கொள்ள முடியும்.

SCROLL FOR NEXT