உயிர் மூச்சு

உழவர் குரல்: மிளகாய் வற்றல் விலை சரிவு

செய்திப்பிரிவு

தமிழகத்தின் மிகப் பெரிய மிளகாய் வற்றல் சந்தைகளில் விருதுநகர் முக்கிய மானது. விருதுநகரைச் சுற்றியுள்ள மானா வாரிப் பகுதிகளில் அதிக அளவில் மிளகாய் பயிரிடப்படுகிறது. ஆனால், ஆந்திரத்தில் அதிக அளவில் விளையும் வற்றலை, இங்குள்ள சந்தைகளுக்கு விற்பனைக்குக் கொண்டுவருவதால் உள்ளூர் வற்றலுக்கு உரிய விலை கிடைக்காமல் போய்விடுகிறது. கடந்த வாரம் கிலோ ரூ. 11 அளவுக்குச் சரிந்ததாகக் கூறப்படுகிறது.

இறக்குமதியாகும் கோழித் தீவனம்

கோழி இறைச்சி உற்பத்தியில் தமிழக அளவில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இங்குள்ள கோழிப் பண்ணைகளுக்கான தீவனமாக மக்காச்சோளாம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. உள்ளூரில் விளையும் மக்காச்சோளம் தேவையைப் பூர்த்திசெய்வதில்லை. அதனால், வடமாநிலங்களில் இருந்து மக்காச்சோளாம் தருவிக்கப்படுகிறது. அதன்படி இந்த வாரம் மத்தியப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் 1300 டன் மக்காச்சோளம் நாமக்கல்லுக்குக் கொண்டுவரப்பட்டது.

பொங்கல் கரும்பு சாகுபடி

தஞ்சை, கொங்குப் பகுதிகளில் கரும்பு சாகுபடி தொடங்கியுள்ளது. இந்தச் சித்திரையில் சாகுபடி தொடங்கினால், அடுத்த தை மாதம் கரும்பு அறுவடை செய்ய முடியும். தைப்பொங்கலுக்கு அறு வடை செய்யும் வகையில் இந்தச் சாகுபடி தொடங்கியுள்ளது. இந்தப் பகுதிகளில் கிட்டதட்ட 400 ஏக்கருக்கும் மேல் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.

கோழிகள் மீது போலீசில் புகார்

புனேவின் கிழக்குப் பகுதிக்கு அருகில் உள்ள கிராமம் லோனி கல்போர். இங்கே கோழிப் பண்ணை நடத்திவருபவர் எவ்வளவு தீவனம் போட்டாலும், தன் கோழிகள் முட்டையிடுவதில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது போன்ற புகார் அந்தப் பகுதியைச் சேர்ந்த பண்ணையாளர்கள் பலருக்கும் இருந்துள்ளது. காவல் ஆய்வாளர் ராஜேந்திர மோகசி இது குறித்து விசாரித்துள்ளார். இந்தப் பகுதியைச் சேர்ந்த பண்ணையாளர்கள் புனேயைச் சேர்ந்த தரமான நிறுவனத்தில் கோழித் தீவனம் வாங்கிவந்துள்ளனர். ஆனால், அதன் விலை உயர்த்தப்பட்டதால் அருகில் உள்ள அகமத்நகரில் ஒரு நிறுவனத்தில் தீவனம் வாங்கிய பிறகுதான் இந்தப் பிரச்சினை எனக் கண்டறியப்பட்டது. அந்நிறுவனம் பண்ணையாளர்களுக்கு உரிய நஷ்டஈடு தர ஒப்புக்கொண்டது. மேலும், தீவனத்தையும் மாற்றிக்கொடுத்துள்ளது.

பருத்தி ஏலம்

அவிநாசி, ஆத்தூர், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் வேளாண்மை உற்பத்தி விற்பனையாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பருத்தி ஏல விற்பனை நடைபெற்றுவருகிறது. கடந்த வார விற்பனையில் டி.டி.ஹெச். ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,500 முதல் ரூ.9,090 வரையும் பி.டி. ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6,250 முதல் ரூ. 7,070 வரையும் ஏலம் போயின. இந்தப் பகுதிகளில் கிட்டதட்ட ரூ. 29 லட்சம் வரை மொத்தமாக ஏலம் போனது.

SCROLL FOR NEXT