உயிர் மூச்சு

வெள்ளம்: வடியாத கேள்விகள்

ஆதி

தமிழகத்துக்கு அதிகத் தண்ணீரைத் தரும் வடகிழக்குப் பருவமழையைப் பற்றி சாதாரண மனிதர்கள் மட்டுமல்லாமல், தமிழக அரசும் சரியாகப் புரிந்துகொள்ளாததையே சமீபத்திய சென்னை வெள்ளப் பேரழிவு எடுத்துக்காட்டியிருக்கிறது.

அதிகப்படியான மழைப்பொழிவே வெள்ளத்துக்கு வழக்கமாக முன்வைக்கப்படும் காரணம். அதேநேரம் மழைப்பொழிவை மட்டும் இதற்குக் குற்றம் சொல்ல முடியுமா என்பது சென்னை வெள்ளப் பேரழிவு எழுப்பியுள்ள முக்கியமான கேள்வி. இது போன்று விடை தெரியாத இன்னும் பல கேள்விகள்:

l இந்த வெள்ளப் பேரழிவுக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? வெள்ளநீர் வடிகால்களை அடைத்துக்கொண்டிருக்கும் சென்னை நகரின் சட்டவிரோதமான, திட்டமிடப்படாத கட்டுமானங்களை அடையாளம் காண்பதற்கும், அகற்றுவதற்கும் அரசு வைத்துள்ள திட்டங்கள் என்ன?

l எஞ்சியுள்ள இந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இன்னொரு பெருமழையோ, புயலோ வந்தால் அதைக் கையாள்வதற்கு மாநில அரசின் செயல்திட்டம் என்ன? அதைக் கையாளத் தயாராக இருக்கிறதா?

l இனிமேலாவது சென்னையில் உள்ள நீர்த்தேக்கங்களில் பாதுகாப்பான நீர்மட்டத்தைப் பராமரிப்பதற்குத் திட்டவட்டமான நடைமுறையை அரசு வகுக்குமா?

l கனமழை பொழிவது தொடர்பான வானிலை துறையின் எச்சரிக்கைகளுக்கு மாநில அரசு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் அளித்தது? அது சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

l பெருமழை பெய்வதற்கு முன் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் தண்ணீரை முன்கூட்டியே திறப்பதைத் தடுத்தது எது? தண்ணீரைத் திறப்பது சார்ந்து தவறுகள் ஏதேனும் நிகழ்ந்திருந்தால், அதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்?

l செம்பரம்பாக்கம் நீர்த் தேக்கத்தில் இருந்து டிசம்பர் 1-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது தொடர்பாக எந்த முன்னெச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. வெள்ளம் தொடர்பாக உரிய நேரத்தில் அபாய எச்சரிக்கை விடுக்கும் வழக்கமான நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என்பது பலரது கேள்வி.

l வீடுகளில் வெள்ளம் புகுவதற்கு முன்னதாகவே அடையாறு கரையோரப் பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்ட நிலையில், டிவி இல்லாமல் மக்களால் எச்சரிக்கைத் தகவல்களை எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? அது மட்டுமல்லாமல் வழக்கமாக ஒலிபெருக்கி வழியாகச் சொல்லப்படும் எச்சரிக்கைத் தகவல்கள் ஏன் தரப்படவில்லை?

l ஒரு பக்கம் மழை வலுத்துக் கொண்டிருந்தது, மற்றொரு பக்கம் செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்தப் பின்னணியில், வெள்ளம் வீட்டுக்குள் நுழைந்த முதல் சில மணி நேரத்துக்கு வெள்ளம் தொடர்பான அவசர உதவி எண்கள் எதைத் தொடர்புகொண்டாலும் உரிய பதில் கிடைக்காதது ஏன்?

l வெள்ள நேரத்தில் உடனடியாக உதவ வேண்டிய அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் ஏன் தொலைபேசி வழியே வழிநடத்தவோ, தகவல் சொல்லவோ இல்லை?

l வெள்ளம் புகுந்த பிறகு மக்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடம் தேடி ஓடிய நேரத்தில் அரசு அதிகாரிகளோ, காவல்துறையினரையோ பல இடங்களில் பார்க்க முடியவில்லை என்கிறார்கள் மக்கள். அதேபோலத் தங்களை முதலில் மீட்டது ராணுவம்தான் என்றும் மக்கள் சொல்கிறார்கள். அதற்கு முன் மீட்பு நடவடிக்கைகள் ஏன் தொடங்கவில்லை என்பது பலரின் கேள்வி.

l பேரழிவு மேலாண்மைக் குழுக்கள், ராணுவத்தின் உதவியை மாநில அரசு ஏன் உடனடியாகக் கேட்கவில்லை? வெள்ளம் அனைத்துப் பகுதிகளையும் சூழ்ந்த பிறகு, மீட்புப் படைகள் ஒருங்கிணைந்து செயல்பட ஏன் ஒரு கட்டுப்பாட்டு அறைகூட அமைக்கப்படவில்லை?

l வெள்ளம், மீட்பு, நிவாரண உதவி தொடர்பான தகவல்களை, அடுத்தடுத்து வரும் முன்னேற்றங்களை ஊடகங்களுக்கும் மக்களுக்கும் அரசு ஏன் முழுமையாகப் பகிர்ந்துகொள்ளவில்லை.

நெருக்கடி காலத்தில், இப்படி முடிவே யில்லாமல் நீளும் கேள்விகளுக்குப் பதில் கிடைப்பது பொதுமக்களுக்கு மட்டுமில்லாமல், அரசு நிர்வாகத்துக்கும்கூட நல்ல பெயரையே வாங்கித் தரும். பதில்கள் கிடைக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி?

SCROLL FOR NEXT