உயிர் மூச்சு

கிழக்கில் விரியும் கிளைகள் 10: காணாமல் போகும் வியப்பு

கு.வி.கிருஷ்ணமூர்த்தி

வியப்பு தரும் யானைக் கொழிஞ்சி தாவரத்தை, பழங்குடி மக்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வந்துள்ளனர். விதைகள், தண்டுகள், பட்டைகள் சோப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனென்றால் விதைகளில் சாப்போனின் என்ற வேதிப்பொருளின் அளவு 5.5 சதவீதம் உள்ளது. பட்டைகளிலும் தண்டுகளிலும் இந்த வேதிப்பொருள் சற்றுக் குறைவாக உள்ளது. விதை அரைக்கப்பட்டு ஷாம்பூவாகப் பயன்படுத்தப்படுகிறது. தொழில்முறை சோப்பு தயாரிப்பில் இவற்றைப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், விதைகளின் பற்றாக்குறையால் இம்முயற்சி கைவிடப்பட்டது. இன்றும்கூடக் கொல்லி, சேர்வராயன் மலைப் பகுதி மக்கள் இந்தத் தாவரப் பகுதிகளைச் சோப்பாகப் பயன்படுத்திவருகின்றனர்.

பஞ்சகால உணவு

விதைகள், பழங்குடி மக்களால் பருப்பு வகைகள் போன்று உண்ணப்படுகின்றன, குறிப்பாகப் பஞ்சகால உணவாக. என்றாலும், விதைகளை அப்படியே உண்ண முடியாது. பதப்படுத்த வேண்டும். இவற்றிலுள்ள லெக்டின்கள், சாப்போனின்கள், ஆல்கலாய்டுகள், ரஃப்பினோஸ் கிளைகோசைடுகள் போன்றவை விஷத்தன்மையுடையவை. இவை ரத்தச் செல்களை அழித்துவிடும்; சுவாச மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். நீண்ட நேரம் நீரில் ஊற வைத்தோ, நெருப்பில் வறுத்தோதான் இவற்றை உண்ண முடியும். இவற்றில் புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் (எண்ணெய்) அதிகம் உள்ளன. விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் (7-12 சதவீதம் உள்ளது) பழங்குடி மக்களால் தீவட்டி கொளுத்தப் பயன்படுத்தப்பட்டது.

விதையும் பட்டையும் பழங்குடி மருத்துவத்திலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன. கல்லீரல் நோய்கள், உடல் வலி, ஜலதோஷம், கண் நோய்கள், மூட்டு வலி, பக்கவாதம், வீக்கம், குடல் புழுக்கள் போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விதையும் பட்டைச் சாறும் டானிக்காகவும், ஓரளவுக்கு உணர்வு நீக்கியாகவும் ஒரு சில பழங்குடிகளால் பயன்படுத்தப்படுகின்றன. விதை, கனி ஆகியவற்றின் பசை மீன்கொல்லியாகவும் பயன்படுகிறது. விதைகள் மாலைகளாகவும், காதணிகளாகவும் பொடி டப்பாக்களாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தாவரப் பட்டையிலிருந்து பெறப்படும் வலுவான நார் கயிறு திரிக்கவும், மீன்வலைகள் பின்னவும் பயன்படுகிறது.

ஏன் அழிந்தது?

கிழக்கு மலைத்தொடரில், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தத் தாவரத்தின் எண்ணிக்கை தற்போது இல்லை. இத்தாவரம் காணப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் தற்போது குறைந்துவிட்டது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்படி இத்தாவரம் தற்போது கொல்லிமலை, சேர்வராயன் மலை, ஜவ்வாது, ஏலகிரி மலைகள், குத்திராயன் மலை, கல்ராயன் மலை, சித்தேரி, அரக்கு மலைச் சரிவு, விசாகப்பட்டின மலைப் பகுதிகள், ரொல்லகொண்டா, தலகோனா, திருமலா, கோடிகாடப்பள்ளி, பகாராப்பட்டு ஆகிய பகுதிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே உள்ளது.

இந்தத் தாவரம் இவ்வளவு மோசமாக அழிந்து போனதற்கு என்னுடைய கள ஆய்வு காட்டும் காரணங்கள்: தேக்கு, செம்மரம் போன்ற பெரிய மரங்களைத் தன்னுடைய ஆர்கிமிடிஸ் சுருள் கொண்ட தண்டுகளின் அழுத்தத்தால் இது நெருக்கி அழித்துவிடுவதால், வன அலுவலர்கள் இத்தாவரத்தை வெட்டி விடுகின்றனர். விதைகளின் முளைப்புத்திறன் மிகவும் குறைவு, அப்படியே முளைப்பதற்கும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொள்கின்றன. முளைக்கும் தாவரத்துக்கு முதலிலிருந்தே பற்றுத்தாங்கித் தாவரங்கள் தேவைப்படுகின்றன.

மேலும், இத்தாவரங்களை நன்கு பாதுகாத்துவந்த பழங்குடிகளும் அவர்களுடைய பண்பாட்டு பயன்பாடுகளும் அழிந்து வருகின்றன. எனவே, இது ஒரு அழிந்துவரும் தாவரச் சிற்றினமாக அடையாளமிடப்பட்டுள்ளது. இத்தாவரத்தை அதனுடைய இயல் சூழலில் போற்றிப் பாதுகாப்பது நம்முடைய கடமை.

(அடுத்த வாரம்: அடையாளமிழந்த நம் மண்ணின் தாவரம்)
- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

SCROLL FOR NEXT