உயிர் மூச்சு

வெள்ளம் வெறும் சாபமா?

சேகர் ராகவன்

பெருநகரங்களில் ஏற்படும் வெள்ளத்துக்கான அடிப்படைக் காரணங்கள், அதற்கான தீர்வுகள் குறித்த விவாதம் மீண்டும் எழுந் துள்ளது. இதன் பின்னணியில் உள்ள பிரச்சினைகளை அலசுவதன் மூலம், இது தொடர்பான புரிதலும் தீர்வும் கிடைக்கும்.

அடிப்படைக் காரணம்

நகர்ப்புறங்களில் உள்ள திறந்தவெளிப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டிடங்களைக் கட்டுவது. எந்த இடத்திலும் நிலமோ, மண்ணோ தெரியாதபடி பொது இடங்களில் அரசும், தனியார் இடங்களில் பொது மக்களும் சிமெண்ட் போட்டு மூடுவது ஆகிய இரண்டும்தான் வெள்ளத்துக்கு அடிப்படைக் காரணம்.

மற்றக் காரணங்கள்

1. மழைநீர் வடிகால்கள் இழுத்து இழுத்துக் கட்டப்பட்டாலும், கட்டிய பிறகு பராமரிப்பதே இல்லை. அதனால், மழைநீர் வடிகால் கட்டி யதற்கான பயனி ன்றிப் போகிறது.

2. ஒரு குடியிருப்புப் பகுதியின் இரண்டு பக்கங்களிலும் கட்டிடங்களைக் கட்டினால் மழை நீர் வெளியே செல்ல வழியில்லாமல், வாகனங்கள் செல்லும் பாதை வழியாக மீண்டும் குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே மழைநீர் தேங்கிவிடலாம்.

3. நான்கு புறமும் மேடாக இருந்து, நடுவில் ஒரு பகுதி குழிவாக இருந்தாலும் வெள்ளம் வரும்.

4. ஒரு பகுதிக்கு அருகே இருக்கும் நீர்நிலையின் கொள்ளளவைவிட அதிகமாகத் தண்ணீர் வந்தாலும் வெள்ளம் வரும்.

பிந்தைய இரண்டும் இயற்கைக் காரணங்கள். ஆனால், இயற்கைக் காரணங்களைவிட செயற்கை காரணங்களே சமீபத்திய ஆண்டுகளில் அதிகம். அதிலும் குறிப்பாக நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுதல், அழிக்கப்படுவதால் வெள்ளம் வருவதே முக்கியக் காரணம்.

திடீர் வெள்ளம் என்பவை சட்டென்று உருவாகுபவை. இதற்கு ஒரே நேரத்தில் கொட்டித் தீர்க்கும் மழையே காரணம். இதைத் தவிர மற்ற வெள்ளங்கள் அனைத்துக்கும், மேலே கூறிய காரணங்கள் பொருந்தும்.

வெள்ளக் கட்டுப்பாடு

வெள்ளத்தை இரண்டு வழிகளில் கட்டுப்படுத்தலாம். முதலாவது தண்ணீரைச் சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் பயனுள்ள வழி. இரண்டாவது கரையோர நகரங்களில் பரவலாகப் பின்பற்றும் பயனற்ற வழி. சென்னை மாநகராட்சி சாலையில் மழைநீர் வடிகால்களை அமைக்கிறது. இது வெள்ள நீரை நேரடியாகக் கடலுக்கு அனுப்பும். ஒரு கிலோமீட்டர் மழைநீர் வடிகாலைக் கட்டுவதற்குச் சராசரியாக ரூ. 50 லட்சம் ஆகும் என்று தெரிகிறது. இப்படியாக லட்சக்கணக்கில் செலவழித்து இயற்கையின் கொடையான மழையை வீணடிக்கிறோம்.

மழைநீர் சேகரிப்பு

மழைநீரைச் சேகரிப்பதிலும் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, தனி நபர்கள் தங்கள் வீட்டுப் பகுதியில் விழும் மொத்த மழைநீரையும் மண்ணுக்குள் அனுப்புவது. இதில் மழைநீர் தேவையில்லாமல் தெருவுக்குச் சென்று வீணாவது கட்டுப்படுத்தப்படும். இது தொடர்பாகக் கூடுதல் விவரம் அறிய: www.raincentre.net. இந்த விவரம் தனிப் புத்தகமாகவும் கிடைக்கிறது.

மற்றொரு மழைநீர் சேகரிப்பு முறையைத் தனிநபர்களும், அரசும் பின்பற்ற முடியும். வீடு, அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ள கிணற்றுக்குள் தண்ணீரை விடுவது. அதேபோலப் பொதுக் கிணறுகளிலும் திறந்தவெளிப் பகுதிகளிலும் அரசு மழைநீரை விடலாம். இந்தச் செயல்பாடுகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எதிர்காலத்தில் நல்ல தண்ணீர் கிடைக்கும்.

- கட்டுரையாளர், மழைநீர் சேகரிப்பு செயல்பாட்டாளர்

தொடர்புக்கு: sekar1479@yahoo.co.in

SCROLL FOR NEXT