உயிர் மூச்சு

பறவைகள் தின்றது போக மீதி கிடைத்தால் போதும்

யுகன்

இன்றைக்குப் பலரும் சிறுதானியங் களையும், நம்முடைய பாரம்பரிய உணவையும் தேடிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அவற்றை விளைவிக்கும் ஆர்வமும் பலரிடையே அதிகரித்திருக்கிறது. இந்த வரிசையில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் முதல் திருநங்கை நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்னும் பெருமையைப் பெற்ற ரோஸும் இணைகிறார். திருவள்ளூர் அருகே இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கிறார் ரோஸ். தன் அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

இயற்கை வேளாண்மையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

ஆன்மிகத்திலும் இயற்கையை ரசிப்பதிலும் இயல்பாகவே எனக்கு ஈடுபாடு உண்டு. ஓஷோவின் புத்தகங்களை அதிகம் படிப்பது வழக்கம். ஓஷோவின் கருத்துகளை விவரிக்கும் ஒரு வழிகாட்டி மூலம் இயற்கைவழி விவசாயம் குறித்துத் தெரிந்துகொண்டேன். அது தொடர்பான விவரங்களைத் தேட ஆரம்பித்து நம்மாழ்வாரின் வானகம் அமைப்பால் ஈர்க்கப்பட்டேன். அங்குப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். இயற்கை விவசாயத்தில் எனக்குக் உதவ நிறைய நண்பர்களும் முன்வந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளனர்.

உங்கள் பண்ணையில் என்ன பயிரிட்டிருக்கிறீர்கள்?

மாப்பிள்ளை சம்பா, சீரகச் சம்பா அரிசி வகைகள், சில காய்கறி, மூலிகைகள் மற்றும் வாழை பயிரிட்டுள்ளேன்.

பூச்சிகளை எப்படிக் கட்டுப்படுத்துகிறீர்கள்?

பூச்சிவிரட்டிகள் செய்யப் பயிற்சி பெற்றுள்ளேன். நொச்சி, வேம்பு, புகையிலை மற்றும் பலவிதமான இலை தழைகளைச் சேர்த்து இதைச் செய்யலாம். பூச்சிகள், பறவைகளை ஈர்க்கும். என் பண்ணையில் பறவைகள் வந்து உட்கார்வதற்கு ஏற்பக் கொட்டகை மற்றும் கம்புகளால் ஆன வேலியும் போட்டுள்ளேன். பறவைகள் அதிகம் வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அவை பூச்சிகளை உண்ணும். அது மட்டுமல்லாமல் பூச்சிகளும் பறவைகளும் தின்று முடித்த பிறகு இருக்கும் மீதி விளைச்சல் எனக்குக் கிடைத்தாலேபோதும்.

விளையும் பொருட்களைச் சந்தைப்படுத்தும் வழிகளைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?

முகநூல் வழியில் ‘நான்கு தூண் இயற்கை பண்ணை' என்பது என்னுடைய பண்ணைக்கான பக்கம் மற்றும் http://roseorganics.in என்ற இணையதளத்தையும் தொடங்கயுள்ளேன். இவற்றில் பலரும் இணைந்துள்ளனர். வாட்ஸ்-அப் குழுவும் உள்ளது. அத்துடன் எனக்குத் தெரிந்த நண்பர்களுடைய இயற்கைவழி கடைகளும் உள்ளன. இவ்வழிகள் மூலம் சாகுபடியைச் சந்தைப்படுத்த முயல்கிறேன். அதிகமாக இணையத் தள வழிகளைக் கையாள்கிறேன்.

இந்தப் பணியில் உங்களுக்கு உதவுபவர்கள் யார்?

முக்கியமாகப் பரதநாட்டியக் கலைஞர் லக்ஷயா என்னும் திருநங்கை இயற்கை விவசாயத்தில் எனக்கு உதவுகிறார். வேறு பல நண்பர்களும் உதவுகின்றனர்.

SCROLL FOR NEXT