உயிர் மூச்சு

தேர்தல் வாக்குறுதிகள் 2021 - வேளாண்மை: உயிர்பெறுமா உயிர் நாடி?

ஜெய்

சமீப காலத்தில் மிகப் பெரிய பேசு பொருள்களுள் ஒன்றாகியுள்ள வேளாண்மை குறித்து சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்துள்ளன.

தி.மு.க. அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்:

# வேளாண் துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
# வேளாண் விளைபொருட்களுக்கான விற் பனைச் சந்தைகள் ஏற்படுத்தித் தரப்படும். உழவர் சந்தைத் திட்டம், அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
# நெல் குவிண்டால் ஒன்றுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும், கரும்பு ஆதார விலை
ரூ. 4,000 ஆக உயர்த்தித் தரப்படும்.
# வாழை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பருப்பு, மிளகாய், சிறுதானியங்கள், தேயிலை, எண்ணெய் வித்துக்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.
# அனைத்து ரக நெல் விதைகளுக்கும் முழு மானியம் வழங்கப்படும்.
# புதிய மின் மோட்டர் வாங்க ரூ. 10,000 மானியம் வழங்கப்படும்.
# ஒட்டுமொத்தச் சேதமாக இல்லாமல், இயற்கைச் சீற்றத்தால் வேளாண் நிலங்கள் பகுதி பகுதியாகப் பாதிக்கப்படும்போதும் இழப்பீடு வழங்கப்படும்.
# ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்க ரூ. 1,000 ஊக்கத் தொகை அளிக்கப்படும்.
# இயற்கை வேளாண்மைக்கு எனத் தனிப்பிரிவு உருவாக்கப்படும்.
# மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
# கண்மாய், அணைகளில் உள்ள வண்டல் மண்ணை வேளாண் பயன்பாட்டுக்கு எடுக்க இலவச அனுமதி.
# நீர்ப் பாசனத் துறைக்கு மாற்றாக புதிய நீர்வள ஆதார அமைச்சகம் அமைக்கப்படும்.
# 10 ஆயிரம் கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்புச் சிறப்புத் திட்டம் அறிமுகப் படுத்தப்படும்.
# 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.
அ.தி.மு.க. அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்:
# உழவர்களுக்கு ஆண்டுதோறும் உழவு மானியம் ரூ.7,500 வழங்கப்படும்.
# மாநில வேளாண்மை ஆணையம் அமைக்கப்படும்.
# நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்த்தித் தரப்படும். மஞ்சள், வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு, வாழை, சிறுதானியங்கள் போன்ற முக்கிய விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.
# வேளாண் விளைபொருட்கள் உற்பத்திக்கும் விற்பனைக்கும் வழிகாட்டும் அமைப்பு தொடங்கப்படும்.
# அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த வேளாண் விளைபொருட் களுக்கான குளிர்சாதன, பதப்படுத்தும் கிடங்கு அமைக்கப்பட்டு, இவற்றைக் கண்டறியச் செயலி ஒன்று உருவாக்கப்படும்.
# வேளாண் இயந்திரங்களுக்குத் தொழிற்கூடங்கள் டெல்டா மாவட்டங்களில் உருவாக்கப்படும்.
# தமிழ்நாட்டில் 309 தாலுக்காக்களிலும் உழவர் வங்கித் திட்டம் செயல்படுத்தப்படும், இதன் மூலம் வேளாண்மைக்குத் தேவை யான இயந்திரங்கள் வாடகை முறையில் உழவர்களுக்கு வழங்கப்படும்.
# வறண்ட நில உழவுத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இஸ்ரேல் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து வறண்ட நில வேளாண் ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்படும்.
# ஐந்து புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
# கரிசல் மண், தூர்வை மண், களிமண் எடுக்கத் தடையில்லா அனுமதி.
# நீர்நிலைகளின் கரைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், கடலோர மாவட்ட சாலைகளில் பனை மரங்கள் வளர்க்கப்படும்.
# இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்.

சாத்தியமா?

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவது குறித்து இரு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளிலும் கூறப்பட்டுள்ளது. எவ்வளவு தொகை எனக் குறிப்பிடாமல் உயர்த்தித் தரப்படும் என அ.தி.மு.க. குறிப்பிட்டுள்ளது. நெல்லுக்கான ஆதார விலை ரூ.2,500 என தி.மு.க. குறிப்பிட்டுள்ளது. ஆனால், நெல்லுக்கு குவிண்டால் உற்பத்தி செலவே ரூ.3,000 ஆகிவிடுகிறது என்பது உழவர்களின் கருத்தாக இருக்கிறது. அதுபோல் களிமண், வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதிக்கப்படும் என இரு தேர்தல் அறிக்கை களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அரசாணை எண் 50இன் படி ஏற்கெனவே இது அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் நல்ல பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதிக நிதி தேவைப்படும் இந்த வாக்குறுதிகளைப் புதிதாக அமையவிருக்கும் அரசு எப்படிச் செயல்படுத்தப்போகிறது என்பதுதான் கேள்விக்குறி.

வேளாண்மை: விடுபட்ட முக்கிய அம்சங்கள்

தேர்தல் வாக்குறுதிகளில் கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய அம்சங்கள்:

# வேளாண் நிவாரணங்கள், கடன் தள்ளுபடி போன்றவற்றைத் தாண்டி வேளாண் தொழிலைக் காப்பதற்கான தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
# காவிரி பாசனப் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட பூர்வ நடவடிக்கைகள், எடுக்கப்படவில்லை.
# தனியார்மயத்தின் பிடியிலிருந்து வேளாண்மையை, உழவர்களைக் காப்பதற்கான சட்ட உத்தரவாதங்கள் குறித்துக் குறிப்பிடவில்லை.
# இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு பொத்தாம்பொதுவான திட்டங்களுக்குப் பதிலாக, நடைமுறை சாத்தியமான செயல்திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.
# உள்ளூர் மாட்டினங்கள், ஆட்டினங்கள் போன்ற கால்நடைகள் வளர்க்கப்படுவதை ஊக்குவிக்க சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இவை பரவலாக விரிவுபடுத்தப்பட வேண்டும்.
வேளாண் கடன், வேளாண் காப்பீடு போன்றவை எளிய உழவர்களுக்கு இன்னமும் சிக்கலுக்குரியவையாகவே உள்ளன. அவற்றைப் பரவலாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் தேவை

SCROLL FOR NEXT