மரபணு மாற்றப்பட்ட பயிர் வகைகளைப் பரிந்துரைக்கும் விஞ்ஞானிகளின் அடுத்த அஸ்திரம் தயார். பி.டி.பருத்தி, பி.டி.கத்திரிக்காயைத் தொடர்ந்து புதிதாக வந்துவிட்டது ‘தாரா கடுகு'!
டெல்லி பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கும் இந்த மரபணு மாற்றக் கடுகுக்கு ‘தாரா மஸ்டர்ட் ஹைபிரிட் 11' என நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.
இந்தக் கடுகை வர்த்தக ரீதியாகச் சாகுபடி செய்ய அனுமதி தர வேண்டும் என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபணு மாற்றுப் பயிர் ஆய்வுகளை நெறிப்படுத்தும் உயர் அமைப்பான ‘மரபணு பொறியியல் அங்கீகாரக் குழு'விடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்புக் குரல்
இதைத் தொடர்ந்து மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிராகப் போராடிவரும் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ‘இந்த மரபணு மாற்றக் கடுகுக்கு அனுமதி வழங்கக்கூடாது' என்று குரல் எழுப்பியுள்ளன.
“கடுகு உற்பத்தியைப் பெருக்குவதற்குச் சந்தையில் ஏற்கெனவே மரபணு மாற்றம் செய்யப்படாத கலப்பின விதைகள் கிடைத்துவருகின்றன. அப்படியிருக்கும்போது, பன்னாட்டு விதை உற்பத்தியாளர்களின் வியாபாரத்தை வாழ வைக்கவே, மரபணு மாற்றப்பட்ட புதிய கடுகு அறிமுகம் செய்யப்பட உள்ளது” என்கிறார் ‘மரபணு மாற்றம் இல்லாத இந்தியாவுக்கான கூட்டியக்க'த்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கிருஷ்ணன்.
இந்திய விளைநிலங்களில் மரபணு மாற்றுப் பயிர்கள் மற்றும் களைகளை மீறி வளரும் பயிர்களைப் பெருமளவில் புகுத்துவதற்கான முன்னோட்டமாக இந்தப் புதிய கடுகு அமையவுள்ளது என்றும் அவர் எச்சரிக்கிறார்.
காற்றில் பறக்கும் உத்தரவுகள்
"மரபணு மாற்றப்பட்ட கடுகு குறித்த தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் நாங்கள் பல மாதங்களாகக் கேட்டு வருகிறோம். ஆனால், எங்களுக்குத் தொடர்ந்து பதில் மறுக்கப்பட்டு வருகிறது" என்கிறார் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிரான செயற்பாட்டாளர் கவிதா குருகந்தி.
மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்த வழக்கு ஒன்றில், ‘மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தொடர்பான ‘உயிரிப் பாதுகாப்பு' தகவல்களைப் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும்' என்று 2008-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கும் முன்னதாக எந்த ஒரு மரபணு மாற்றுப் பயிரையும் விளைநிலங்களில் பரிசோதித்துப் பார்ப்பதற்கு முன்னர், அந்தப் பயிர் ஏற்படுத்தும் தாக்கம், பின்விளைவு ஆகியவை குறித்த தகவல்களைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று மத்தியத் தகவல் ஆணையம் 2007-ம் ஆண்டே உத்தரவிட்டுள்ளது.
ஏன் இத்தனை ரகசியம்?
“இந்த உத்தரவுகள் எல்லாம் இன்னமும் நடைமுறையில் இருக்கும் நிலையில், புதிய கடுகின் அறிமுகம் குறித்த நடவடிக்கைகளை மத்திய அரசு ரகசியமாக மேற்கொண்டு வருகிறது.
பி.டி.கத்திரிக்காய் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், கடந்த முறை ஆட்சியில் இருந்தவர்கள் மக்களிடம் கருத்து கேட்ட பிறகே, அந்தப் பிரச்சினை குறித்து முடிவெடுத்தார்கள். ஆனால், இந்த ஆட்சியில் எங்களுடைய கருத்துகளைக் கேட்பதற்குச் சுற்றுச்சூழல் அமைச்சர் தயாராக இல்லை. எவ்வளவோ முயன்றும் அவரை சந்திப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அரசு எவ்வளவுக்கு எவ்வளவு ரகசியமாக இயங்குகிறதோ, அதே அளவுக்கு இந்தப் பிரச்சினையில் என்ன நடக்கிறது என்பதை அறியும் உரிமை மக்களுக்கும் இருக்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்கிறார் கவிதா.
பொத்திப் பொத்தி வைக்கப்படும் இந்தக் கடுகுப் பிரச்சினையின் காரம், அவ்வளவு சீக்கிரம் குறைந்துவிடாது என்றுதான் தோன்றுகிறது!