உயிர் மூச்சு

சவாலை ஏற்குமா மான்சான்டோ?

நவீன்

மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமையுடன் உலகம் முழுவதும் பிரபலமானவர், முனைவர் சிவா அய்யாதுரை. இப்போது அவர் இன்னொரு காரணத்துக்காகப் பிரபலமாகியிருக்கிறார்.

முதன்முதலில் மான்சான்டோவுக்கு சவால் விட்டிருப்பதுதான் அவருடைய புதிய பிரபலத்துக்குக் காரணம்!

புதிய ஆய்வறிக்கை

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் பன்னாட்டு நிறுவனம் மான்சான்டோ. ஆனால், மான்சான்டோ உருவாக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாவில் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கும் காரணி உண்டு என்பதைத் தனது ஆய்வறிக்கையின் மூலம் சிவா அய்யாதுரை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதோடு நிற்காமல், தனது ஆய்வு தவறானது என்று மான்சான்டோ நிரூபித்துவிட்டால், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பகுதியில் தனக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றை மான்சான்டோவுக்குக் கொடுத்துவிடுவதாகவும் அறிவித்துள்ளார். இந்தக் கட்டிடத்தின் மதிப்பு சுமார் 10 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 60 கோடி) என்பது குறிப்பிடத்தக்கது.

சோயாவின் தீங்கு

இது குறித்து ஊடகங்களில் அவர் அளித்த பேட்டியில், " மரபணு மாற்றப்பட்ட சோயாவை தீங்கில்லாதது என்று மான்சான்டோ கூறி வருகிறது. சுவை, மணம், பார்வை மற்றும் அதைத் தொடும்போது ஏற்படும் உணர்வு போன்ற சில அடிப்படை குணாதிசயங்களை வைத்து, இந்த மரபணு மாற்றப்பட்ட சோயா மனிதர்கள் உண்பதற்கு ஏற்றது என்று கூறுகிறது.

ஆனால், இந்தச் சோயாவில் ‘ஃபார்மால்டிஹைட்' மற்றும் ‘க்ளூட்டாதியோன்' போன்ற ரசாயனப் பொருட்கள் உள்ளன. இதில் ஃபார்மால்டிஹைட் புற்றுநோயை உருவாக்கக்கூடிய வேதிப்பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக, இவற்றின் அடிப்படையில் பார்த்தால், இந்த மரபணு மாற்றச் சோயா மிகவும் தீங்கானது" என்று கூறியுள்ளார்.

உணவு பாதுகாப்பானதா?

இதுபோன்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விற்பனை செய்யத் தேவைப்படும் அனுமதியைப் பெற, மான்சான்டோ போன்ற நிறுவனங்கள் தாங்களே சொந்தமாக ஓர் ஆய்வைச் செய்து, அதில் ‘மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எந்தத் தீங்கும் செய்யாதவை' என்பது போன்ற ஒரு முடிவை அரசிடம் தருகின்றன. அமெரிக்காவில் இந்த நடைமுறை ரொம்ப அதிகம்!

"மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ என்னுடைய ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. மக்களுக்குக் கிடைக்கும் உணவு பாதுகாப்பானதாக உள்ளதா என்ற கேள்வியை மட்டுமே இந்த ஆய்வு எழுப்புகிறது. அந்தக் கேள்விக்கான பதில் தற்சமயம் ‘இல்லை' என்பதுதான். வெளிப்படையான உரையாடல்கள், ஆய்வுகள் மூலம் மக்களுக்கு நல்லதொரு வழி பிறக்கும்" என்கிறார் அய்யாதுரை.

ஆனால், இந்தச் சவாலை ஏற்பதற்குப் பதிலாக, சிவா அய்யாதுரையின் நடத்தையைக் கேள்விக்கு உள்ளாக்கும் வேலைகளில் மான்சான்டோ ஈடுபட்டு வருகிறது.

SCROLL FOR NEXT