ஈரோட்டில் புறப்பட்ட பசுமை இயக்கத்தின் ஊற்றுக்கண் அடைபட்டுப் போய்விட்டது. இயற்கைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்துத் தமிழகத்தில் முதல்முதலாக ஒலித்த குரல்களில் ஈரோடு மருத்துவர் வெ. ஜீவானந்தத்தின் குரலும் முதன்மையானது. எத்தனை கூட்டங்கள், எத்தனை கருத்தரங்குகள், எத்தனை ஊர்வலங்கள், எத்தனை கட்டுரைகள். நினைக்க நேரமற்று ஓடி உழைத்த மாமனிதர் அவர்.
மார்க்சியத்தையும் பசுமைச் சிந்தனையையும் இணைத்துக் கொண்டு பயணித்தவர். காந்தியையும் குமரப்பாவையும் பசுமைப் பார்வையில் பயின்றவர். பலருக்கும் வழிகாட்டி, போராளி… இப்படி இன்னும் எத்தனையோ கூறலாம். இயற்கைதான் நமது ஆதாரம், அது அழிந்தால் எல்லாம் அழியும் என்கிற கருத்தை அனைவரது மனத்திலும் ஆழப்பதிக்க முனைந்தவர். அதற்காகப் பல பசுமைச் சந்திப்புகளை ஒருங்கிணைத்தவர். கருத்துப் பரிமாற்ற நிகழ்வுகளை நடத்தியவர்.
ஆறுகள் காக்க…
பவானி ஆறு மாசுபடுவதை எதிர்த்த போராட்டங்களில் அவரது பங்களிப்பு மகத்தானது. சத்தியமங்கலம் சாலை களில் நின்று போராடி யிருக்கிறார். கரூர் சாயப்பட்டறைக் கழிவுகளால் ஏற்பட்ட மாசுபாட்டை எதிர்த்து கரூர் சுப்பிரமணியன், கரூர் சிவராமன் போன்ற ஆளுமைகளுடன் அவர் செய்த பணி மகத்தானது. நொய்யல் ஆறு மாசுபாட்டுக்காகத் திருப்பூரில் அவர் செய்த பல பணிகள் மறக்க இயலாதவை. அப்போது ‘பசுமைத் தாயகம்’ அருள் ‘நஞ்சைக் கக்கும் நதி’ என்று கையேடு ஒன்றை வெளியிட்டார். திண்டுக்கல் தோல் தொழிற்சாலைக் கழிவைத் தடுக்க ‘அமைதி அறக்கட்டளை‘ பால்பாஸ்கருடன் பல கூட்டங்களை ஜீவா நடத்தியிருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற எந்த ஒரு சூழலியல் செயல்பாட்டுக்கும் உந்துசக்தியாக விளங்கியவர் ஜீவா. தனது மருத்துவப் பணியையும் பார்த்துக்கொண்டு இடைவிடாது சூழலியல் செயல்பாடுகளில் பங்களிப்பை வழங்கிவந்தார். சிறு கிராமக் கூட்டம் முதல் பெரும் கருத்தரங்குகள்வரை, அவர் தவறாமல் கலந்துகொள்வார்.
அதிகார மாற்றம் தேவை
இந்தியாவின் முன்னணி சூழலியல் செயற்பாட்டாளர்கள் மேதா பட்கர் முதல் எம்.சி. மேத்தாவரை அவரது நண்பர்கள். சூழலியல் செயல்பாடுகளின் இன்றைய நிலை என்ன என்று கேட்டால் விரல் நுனியில் தரவுகளை வைத்துக்கொண்டு விளக்குவார். யாரிடமிருந்தும் இயற்கையைக் காக்கக் குரல் எழுந்தாலும் உடனே பதிவிட்டு வரவேற்பார். கிரெட்டாவையும் பாராட்டுவார், போப்பையும் பாராட்டுவார். போப்பாண்டவர் சூழலியல் குறித்துப் பேசிய செய்தியை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
ஜீவாவின் பேச்சில் விமர்சன நெருப்புப் பறக்கும். அவரது மேடைப் பேச்சு கூட்டத்தை அப்படியே அசைத்து விடும். குறிப்பாக, இயற்கையைச் சிதைக்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டார். ஒரு காலத்தில் பசுமைக் கட்சி ஒன்று வேண்டும். ஜெர்மனியின் பெட்ராகல்லிபோல நாம் செயல்பட வேண்டும் என்று கூறிவந்தார். பசுமை அரசியல் என்பது முன்னணி அரசியல் களத்துக்கு வர வேண்டும் என்பது அவரது ஆவல். “பறவை நோக்குதல், இயற்கை வேளாண்மை, மரபு மருத்துவம் என்கிற அளவிலேயே அது உள்ளது. இது நல்லதுதான் என்றாலும், ஒட்டுமொத்த மாற்றத்துக்கான அதிகார மாற்றம் தேவைப்படுகிறது” என்பார்.
காத்திருக்கும் பணி
மருத்துவர் ஜீவானந்தம், பல்வேறு சூழலியல் இயக்கங்களில், பொறுப்புகளிலிருந்தவர். ‘தமிழகப் பசுமை இயக்கம்‘, ’நீதிபதி பகவதி சுற்றுச்சூழல் மேம்பாட்டு இயக்கம்’, ‘பவானி ஆறு பாதுகாப்பு இயக்கம்’ என்ற நீண்ட பட்டியல் உண்டு. புதுச்சேரியில் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் அவர் ஆற்றிய உரையும், என்ன செய்ய வேண்டும் என்று அன்று இரவு எங்களுடன் விரிவாக நடத்திய ஆலோசனையும் மனத்தைவிட்டு நீங்காதவை.
தீவிர இறால் சாகுபடியால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்த்து நாகப் பட்டினத்தில் சர்வோதயத் தலைவர் ஜெகந்நாதன் நடத்திய போராட்டம், தூத்துக்குடியில் பவளத்திட்டுகள் அழிக்கப்படுவதையும், கடலூரில் சிப்காட் மாசுபாட்டையும் எதிர்த்த செயல்பாடுகள் எனச் சோர்வடையாமல் பங்கெடுத்துக்கொண்டவர் ஜீவா.
எப்போது அழைத்தாலும் நீண்ட நேரம் பேசுவார். அவரது மெல்லிய குரலும் அழுத்தமான கருத்துகளும் எப்போதும் மனத்தில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கும். அந்த மகத்தான மனிதர் தனது இடைவிடாத பணியைத் தொய்வின்றிச் செய்துவிட்டார். அதைத் தொடரோட்டமாக்க வேண்டிய பணி நம்முன் காத்திருக்கிறது.
கட்டுரையாளர்,
சூழலியல் எழுத்தாளர் –
இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com