உயிர் மூச்சு

கரோனாவை மட்டுமல்ல... காசநோயையும் கட்டுப்படுத்தும் முகக்கவசம்

பெ.ராஜ்குமார்

கரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதாலும், தடுப்பூசிகள் வந்துவிட்டதாலும் இனி முகக்கவசம் தேவையில்லை என யாராவது நினைத்தால், அந்த நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவதால் கரோனா மட்டுமல்ல, காசநோய், ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட சுவாசம் தொடர்பான மற்ற நோய்களும் குறையத் தொடங்கியுள்ளதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குளிர்காலத்தில் காசநோய், ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகளுக்குத் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அந்தக் காலத்தில் அதிகரிக்கும். “ஆனால், இந்த ஆண்டு குளிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.

தமிழகத்தில் 2019-ம் ஆண்டைக் காட்டிலும் 2020-ல் காசநோய் பாதிப்பு 37 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம், கரோனாவுக்கும், காசநோய்க்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகள் என்பதால், பலர் முன்கூட்டியே பரிசோதனை மேற்கொண்டது காரணமாக இருக்கலாம். அத்துடன், கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிந்ததும் முக்கியக் காரணம்தான்.

முன்பெல்லாம், காசநோய் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க, அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் முகக்கவசம் அணிந்துகொள்ள வலியுறுத்தினாலும் கேட்கமாட்டார்கள். முகக்கவசம் அணிந்தால் நோயாளி என்பது மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும் என நினைத்து, முகக்கவசம் அணியத் தயங்குவார்கள். இதனால், காசநோய் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவிக்கொண்டிருந்தது. ஆனால், தற்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிவதால், காசநோயாளிகளும் எவ்விதத் தயக்கமும் இன்றி முகக்கவசம் அணிந்துகொள்கிறார்கள்” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த அவசர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.முகமது ஹக்கீம்.

முகக்கவசமும் ஓர் ஆடையே

உலகில் காசநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்கிறது மருத்துவ ஆய்வு. இந்த நோயை 2025-ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டுவருகிறது. கரோனா வைரஸ் தொற்று தற்போது கட்டுக்குள் இருந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்வதுதான் பாதுகாப்பானது.

முகக் கவசம் அணிவதால், காற்று மாசுபாட்டால் ஏற்படும் ஆஸ்துமா, சைனஸ் போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். நாம் அணிந்துகொள்ளும் ஆடை களைப் போல், முகக்கவசத்தையும் ஒரு ஆடையாகக் கருதி, வெளியே செல்லும் போது கட்டாயம் அணிந்துகொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT