இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை எந்தச் சமரசமும் செய்துகொள்ளாமல் விற்பனை செய்துவருகிறது, சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் செயல்படும் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் ஸ்டோர்.
தரத்துக்கு உறுதி
"சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளைக் குறித்து மக்களிடையே பரவலான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், எங்களிடம் செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகையை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய், நாட்டுச் சர்க்கரை போன்றவை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதால், நாங்கள் விற்கும் பொருட்களின் தரத்துக்கு எங்களால் உறுதி தர முடியும்" என்கிறார் இதன் நிர்வாகி ஃபெரோஸ் கான்.
பிரச்சினையில்லா பட்சணங்கள்
கடைகளில் விற்கப்படும் சிப்ஸ், பேக்கரி பொருட்களுக்கு மாற்றாக, இங்கே கிடைக்கும் கமர்கட், கடலை உருண்டை, திணை அதிரசம் போன்றவற்றைக் குழந்தைகளுக்காகப் பெற்றோர் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். பாரம்பரியமான இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட காய், கனிகளை ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று விற்பனை செய்கிறார்கள்.
பாரம்பரிய அரிசி
குதிரைவாலி, திணை, சாமை, வரகு, கம்பு, சோளம், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி, கிச்சிலி சம்பா, சீரகச் சம்பா, நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வளரும் மூங்கில் அரிசி, ராஜ்மூடி, மாப்பிள்ள சம்பா போன்ற அரிசி ரகங்களையும் விற்பனை செய்கிறார்கள்.
இதுதவிர, இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களைச் சமைப்பதற்குப் பயன்படும் மண் பாண்டங்களையும் எளிய முறையில் சத்தான உணவைச் சமைக்கும் முறையை விளக்கும் புத்தகங்களும் இங்கே கிடைக்கின்றன.
பிளாஸ்டிக் தவிர்ப்பு
இக்கடையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துவருகிறார்கள். முதல்கட்டமாகப் பொருட்களைக் கொடுப்பதற்குப் பிளாஸ்டிக் பைகளை இக்கடையில் தருவதில்லை. காகிதப் பைகளில் பொருட்களைத் தருகிறார்கள். பேக் செய்வதற்குப் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுப்பதற்குப் படிப்படியாக முயன்றுவருகிறார்கள்.
தொடர்புக்கு: 9940114894