தென் சென்னையின் மத்தியில் அமைந்திருக்கும் சதுப்புநிலக் காட்டுப் பகுதி பள்ளிக்கரணை. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை, காமாட்சி மருத்துவமனை - ஜெயின் கல்லூரி இடையிலான ரேடியல் சாலை, செம்மஞ்சேரி - குமரன் நகரை இணைக்கும் சாலைகள் இந்த சதுப்புநிலத்தின் மேல்பகுதியில் குறுக்காக அமைக்கப்பட்டவை.
எதார்த்தம் என்னவென்றால் இதில் பயணிக்கும் மக்களில் 95 சதவீதத்திற்கும் மேலான மக்களுக்குத் தாங்கள் ஒரு காட்டின் வழியாகப் பயணிக்கிறோம் என்பது தெரியாது; நமது சுற்றுச்சூழல் சார்ந்த அறிவு அந்த அளவில்தான் இருக்கிறது.
பள்ளிக்கரணை சதுப்புநிலம் மத்திய அரசால் தேசிய சதுப்புநிலங்கள் பாதுகாப்பு - மேலாண்மை (NWCMP) திட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படவேண்டிய சதுப்புநிலங்கள் என அறிவிக்கப்பட்ட 94 சதுப்புநிலங்களில் ஒன்று (தமிழகத்திலுள்ள மற்ற இரண்டு: மரக்காணம் அருகே உள்ள கழுவெளி, கோடியக்கரை). இத்துடன் ராம்சர் சாசனம் (Ramsar Convention) வாயிலாக உலக அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய சதுப்புநிலங்கள் என்ற அந்தஸ்துக்கான அனைத்து அம்சங்களும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கு உண்டு.
சுருங்கிய சதுப்புநிலம்
இந்தியாவின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட, பரப்பளவில் அதிகரித்துக்கொண்டே இருக்கும் மாநகரமான சென்னையின் தென் பகுதியில் அமைந்துள்ளது பள்ளிக்கரணை சதுப்புநிலம்; 1960-களில் கிண்டி தேசிய பூங்காவுக்குத் தெற்கே தொடங்கி தற்போதைய சிறுசேரி தொழில்நுட்பப் பூங்கா வரையும் மேற்கே அடையாறின் உட்புறம் முதல் கிழக்கே பக்கிங்காம் கால்வாய் வரையும் 6,000 ஹெக்டேராக இருந்தது பள்ளிக்கரணை சதுப்புநிலம்.
தற்போது அதன் முழு அளவில் 90 சதவீதத்தை இழந்து வெறும் 690 ஹெக்டேர் நிலப்பரப்புடன் இருக்கிறது. நாள்தோறும் 5,000 மெட்ரிக் டன் குப்பை சென்னை மாநகராட்சி மூலம் கொட்டப்படும் மிகப்பெரிய குப்பைக் கிடங்கு, வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம், தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய காற்றாற்றல் ஆராய்ச்சி நிறுவனம், சோழிங்கநல்லூர் தகவல் தொழில்நுட்ப பூங்கா, பல கல்லூரிகள், செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் உள்ள அரசின் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகள் இந்தச் சதுப்புநிலத்தின் மேல் எழுப்பப்பட்டவையே.
மேலே கூறிய பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட சங்கிலித்தொடர் ஏரிகளின் மிகை நீர் வந்து சேரும் வடிகாலாக இருக்கும் இடம்தான் பள்ளிக்கரணை. மாடம்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், ராஜகீழ்பாக்கம், கோவிலம்பாக்கம், கௌரிவாக்கம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் என பள்ளிக்கரணையைச் சுற்றி இருக்கும் ஏரிகளின் பெயரில் முடியும் 'பாக்கம்', 'வாக்கம்', பள்ளிக்கரணையில் உள்ள 'கரணை' ஆகிய சொற்கள் நீர்நிலைகளைக் குறிக்கின்றன என்கிறார், சூழலியல் எழுத்தாளர் நக்கீரன்.
பள்ளிக்கரணை சதுப்புநிலமும் கடலும் ஒரே மட்டத்தில் இருக்கின்றன. இடையே செல்லும் ஓஎம்ஆர் சாலையை ஒட்டிய பகுதி நான்கைந்து அடி உயரமாக இருப்பதால், பல ஏரிகளில் இருந்து வரும் நீர் இந்தப் பகுதியில் தேங்கி நிற்கிறது. பிறகு துரைப்பாக்கம் - காரப்பாக்கத்துக்கு இடையே உள்ள ஒக்கியம் மடுவு மூலம் வெளியேறி ஆங்கிலேயர்கள் காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் கலந்து கோவளம் அருகே முட்டுக்காடு கழிமுகம் வாயிலாகக் கடலில் கலக்கிறது.
ஆண்டு முழுவதும் நீர் தேங்கியும் ஓடிக்கொண்டும் இருப்பதால் இது உயிரினப் பன்மை (Bio-diversity) மிகுந்த இடமாக உள்ளது; பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் மட்டும் 625 வகைத் தாவரங்கள், உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் 73 வகை மிதவைத் தாவரங்கள், 167 வகைத் தாவரங்கள், 100 வகை மீனினங்கள், 65 வகை வலசைப் பறவைகள், 105 வகை உள்ளூர்ப் பறவைகள், 15 வகைப் பாம்புகள், 10 வகைப் பல்லிகள், 11 வகை நீர்நிலவாழ்விகள், 10 வகைப் பாலூட்டிகள், 34 வகை வண்ணத்துப்பூச்சிகள், 20 வகைத் தட்டான்கள், 25 வகை மெல்லுடலிகள் (நத்தை வகை), 8 வகை கரப்பான்கள் அடங்கும்.
பள்ளிக்கரணையின் உயிர்ப் பன்மை
மத்திய ஆசியப் பறவைகள் வழித்தடத்தில் ஒரு முக்கிய அங்கம் பள்ளிக்கரணை. அக்டோபர் முதல் மார்ச் மாதம்வரை சராசரியாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளுக்கு பள்ளிக்கரணை வசிப்பிடமாக இருக்கிறது. இந்தக் காலத்தில் குளிர்கால வலசையாக 65 வகைப் பறவைகள் மத்திய ஆசியா முதல் மேற்கு ஐரோப்பா வரையுள்ள பகுதிகளில் இருந்து உணவுக்காகப் பள்ளிக்கரணைக்கு வருகின்றன. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புக் கழகம் (IUCN) வெளியிட்டுள்ள சிவப்புப் பட்டியலின்படி அதிக ஆபத்தில் உள்ள (Endangered) ஒரு பறவை இனமும் (வலசை வரும் Great Knot), அழிவை நெருங்கிவரும் உயிரினங்களில் (NT) ஆறு வகை பறவை இனங்களும் பள்ளிக்கரணையில் வாழ்வதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இத்துடன் சதுப்புநில உணவுச் சங்கிலியில் உச்சத்திலிருக்கும் 20 வகை இரைக்கொல்லி பறவைகளை (கழுகு, பருந்து, ஆந்தை போன்ற) பள்ளிக்கரணையில் காணலாம்; தமிழகத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக இருந்து தற்போது நான்கு பறவைகள் மட்டுமே இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள, அழிவின் விளிம்பில் இருக்கும் மஞ்சள் முகப் பாறு கழுகு பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கு 2016ஆம் ஆண்டு வந்து சென்றுள்ளது. இவற்றின் மூலம் பள்ளிக்கரணையின் உயிரினப் பன்மையையும் பல்லுயிர்களின் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ள முடியும்.
உயிர்ப் பன்மை ஒருபுறமிருக்க பள்ளிக்கரணை சதுப்புநிலம் தென்சென்னையின் சிறந்த வெள்ள நீர் வடிகாலாகவும், நிலத்தடி நீரை மறுவூட்டம் செய்யும் அமைப்பாகவும், எருவை (சம்பு), வைலம், அசோலா, நீலாம்பல், ஆகாயத்தாமரை போன்ற பல தாவரங்களின் மூலம் நீரில் இருக்கும் மாசை நீக்கும் இயற்கை மாசு வடிகட்டியாகவும் செயல்படுகிறது.
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், தன்னார்வக் குழுக்களின் தொடர் வழியுறுத்தலால் 09-04-2007 இல் தொடங்கி 06-07-2013 வரை எஞ்சியிருக்கும் சதுப்புநிலத்தில் 694.88 ஹெக்டேர் சதுப்புநிலத்தை நான்கு அரசாணைகள் மூலம் வனத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய காடுகளாக தமிழக அரசு மாற்றியது. இதில் வெறும் 318 ஹெக்டேர் மட்டுமே கடந்த ஆண்டு (2019) காப்புக் காடாக (Reserved forest) மாற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வசம் உள்ள 172 ஹெக்டேர் நிலப் பரப்பையும் வனத்துறை வசம் ஒப்படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிக்கரணையின் முக்கியத்துவம் குறித்து மக்கள் அறிந்துகொள்வதற்காக ஒரு கற்றல் மையத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன் வனத்துறை காரப்பாக்கத்தில் நிறுவியுள்ளது.
இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளாலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யாததாலும் கடந்த 2-3 ஆண்டுகளாக பள்ளிக்கரணையில் உயிரினப் பன்மை அதிகரித்து வருவதைக் காண முடிகிறது; ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் பெரிதும் காணப்படாத தாமரை இலைக்கோழி (Bronze-Winged Jacana) தற்போது இங்கு இனப்பெருக்கம் செய்து வாழ்கிறது; புள்ளிமூக்கு வாத்து, சீழ்கைச் சிறகி, நீலத் தாழைக்கோழி, செந்நீலக் கொக்கு, கூழைக்கடா உள்ளிட்ட 12 வகை உள்ளூர்ப் பறவைகள் இங்கு கூடமைத்து இனப்பெருக்கம் செய்கின்றன.
தூர்வாருவது சரியா?
இவ்வளவு சிறப்புமிக்க பள்ளிக்கரணை சதுப்புநிலம் தென்சென்னையின் உயிர்நாடியாக இருக்கிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் இயற்கை சீற்றங்களுக்கும், பெரும் வெள்ளத்துக்கும், நீண்ட வறட்சிக்கும் பெரிதும் கைகொடுக்கக்கூடிய இந்த சதுப்புநிலத்தைப் பாதுகாத்தாக வேண்டும். அப்படியில்லாமல் சூழலியல் புரிதலின்றி வேளச்சேரி, காமக்கோடி நகர் ஆகியவற்றைப் போன்று சதுப்புநிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்ட பகுதிகளில் ஏற்படும் வெள்ள நீரை வடிக்க சென்னை மாநகராட்சி மூலம் சதுப்புநிலத்தை தூர்வாரி ஆழப்படுத்தி, நீர்தேக்கும் ஏரிபோல் உருவாக்கப் போவதாக தமிழக முதல்வர் கடந்த வாரம் கூறியுள்ளார்.
இந்தச் சதுப்புநிலத்தின் நீர்வழிப் பாதைகளையும், சதுப்புநிலத்தின் ஒரே நீர் வெளியேற்றுப் பாதையான ஒக்கியம் மடுவையும் ஆழப்படுத்தப் போவதாகவும், ஒக்கியம் மடுவு மூலம் பக்கிங்ஹாம் கால்வாய் கடலில் கலக்கும் முட்டுக்காடு பகுதியில் முப்பது அடி அகலமுடைய நுழைவாயிலை நூறு அடியாக மாற்றப் போவதாகவும் கூறியுள்ளார்.
இயல்பாகக் கடல் ஏற்றத்தின்போது ஏற்படும் உயர் அலைகளின் (High tide) மூலம் முட்டுக்காட்டில் இருக்கும் முப்பது அடி நுழைவாயில் வழியாக உவர் நீர் பக்கிங்ஹாம் கால்வாய் வாயிலாகப் பாய்ந்து ஒக்கியம் மடுவு மூலம் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் பாய்கிறது. பிறகு மீண்டும் கடலின் வற்றலின்போது (Low tide) பின்வாங்கிச் செல்கிறது. அந்த வேளையில் சதுப்புநிலத்தில் இருந்து கடலுக்கு நன்னீர் செல்லும். இது அன்றாடம் நடைபெறும் இயல்பான சுழற்சி.
ஆனால், அதுவே 30 அடியை 100 அடியாக அகலப்படுத்தினால் கடல் ஏற்றத்தின்போது உள்வரும் உவர் நீரின் அளவு மூன்று மடங்காக அதிகரிக்கும். அதன் தாக்கம் சதுப்புநிலத்திலும் இருக்கும்; இந்தக் காரணத்தால் பள்ளிக்கரணையின் இயல்பு மாறி பாலை நிலமாக மாறச் சாத்தியமுள்ளது.
ஏன் பள்ளிக்கரணையை ஆழப்படுத்தக் கூடாது?
1) பள்ளிக்கரணை இயற்கையாக உருவான பஞ்சு போன்ற ஓர் உறிஞ்சும் அமைப்பு; மழை நிறைந்த காலத்தில் அதிக நீரைத் தேக்கி வைத்துக்கொண்டு, கோடை காலத்தில் சீராக வெளிவிடக்கூடியது. ஆழப்படுத்துவது இந்த இயல்பை முற்றிலும் தகர்த்து எதிர்காலத்தில் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம், வறட்சி ஏற்படக் காரணமாக அமையும்.
2) மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தின் முக்கிய அங்கம் பள்ளிக்கரணை சதுப்புநிலம். குளிர்கால வலசைப் பருவத்தில் பூநாரை, உள்ளான், மண்கொத்தி, ஆள்காட்டி, தாழைக்கோழி உள்ளிட்ட வகைகளின் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளுக்கு சிறு பூச்சிகள், விதைகள், நத்தைகள், மீன்கள் போன்றவற்றின் மூலம் உணவளித்துவருகிறது. தூர்வாரி ஆழப்படுத்தினால் பறவைகள், அவை உண்ணும் உயிரினங்களின் நிலைமை என்ன ஆகும்?
3) சதுப்புநிலத்தின் உயரமான பகுதிகளான பெருங்குடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி போன்றவற்றில் கடல்நீரைப் போன்று உப்புத்தன்மை நிறைந்த நீர்தான் உள்ளது; இந்நிலையில், நன்னீர் சதுப்புநிலமான பள்ளிக்கரணையை ஆழப்படுத்துவது கடல் நீர் உட்புக வழிவகுக்கும். சுற்றிலும் வாழும் மக்களுக்கும், சதுப்புநிலத்தில் வாழும் பல்லுயிர்களுக்கும் வாழத் தகுதியற்ற சூழலை இது ஏற்படுத்தும்!
4) பள்ளிக்கரணையை ஆழப்படுத்துவதால் இங்கிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் மூலம் கடலுக்கு சீராகச் சென்றுகொண்டிருக்கும் நீரின் அளவு குறைந்து, கடல் நீர் உள்ளே வர சாத்தியம் உண்டு; மத்திய ஆசியாவில் இதுபோன்ற செயலால் பாலைவனமாக மாறிய அரல் ஏரி போன்று பள்ளிக்கரணை மாற சாத்தியமுள்ளது.
5) பள்ளிக்கரணை என்பது முப்பதுக்கும் மேற்பட்ட ஏரி, சதுப்புநிலங்களின் சங்கமம்; சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர் தேங்காமல் இருக்க பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கான நீர் வழிப்பாதைகளைச் சீரமைக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வேண்டும். முக்கியமாக சதுப்புநிலத்தை ஆக்கிரமித்து மலைக் குன்றுகள் போல் நீர்வழிப் பாதையை தடுத்துக்கொண்டிருக்கும் மாநகராட்சிக் குப்பை மேட்டின் பகாசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவது அவசியம்.
6) பள்ளிக்கரணையை ஆழப்படுத்தினாலோ, இருப்பதை மறுகட்டமைப்பு செய்ய முயன்றாலோ அங்கிருக்கும் பல்லுயிர்களின் உயிரினப் பன்மை குறைந்து வெள்ளம், வறட்சி மூலம் மனிதர்கள் பெரும் சிக்கல்களைச் சந்தித்து, உலக அளவில் முக்கியமான ஒரு சதுப்புநிலத்தை பாழாக்கிய அவப்பெயரே வந்துசேரும்!
என்ன செய்யலாம்?
பள்ளிக்கரணையை ஆழப்படுத்த ஒதுக்கப்பட உள்ள ரூ.1,000 கோடியில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாக்க என்ன செய்யலாம், சில பரிந்துரைகள்:
1) சதுப்புநிலத்தின் மீது அமைந்துள்ள சென்னையின் மிகப்பெரிய குப்பை மேட்டை அறிவியல் ஆய்வு அடிப்படையில் அகற்றத் திட்டங்கள் வகுத்தல்
2) குப்பைகளை பஞ்சாயத்து வாரியாகத் தரம் பிரித்து, குப்பை சேகரிப்பு மையங்களைப் பரவலாக்கி, சதுப்புநிலத்தில் குப்பை கொட்டுவதைப் படிப்படியாகக் குறைத்தல்
3) செம்மஞ்சேரியில் நீர் உட்புகுவதைத் தடுக்க செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் சதுப்புநில இணைப்புக் கால்வாய்களை தூர்வாரி சோழிங்கநல்லூர் சதுப்புநிலத்தில் இணைக்கும் பாதையைச் சீர்செய்தல்
4) முப்பதுக்கும் மேற்பட்ட நீர்ப்பிடிப்பு ஏரிகளைப் பாதுகாத்தல், நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சீர்செய்தல்
5) சதுப்புநிலத்தில் நீரின் போக்கைத் தடுக்கும் ஆகாயத் தாமரை, சவுன்டல், சீமைக் கருவேலம் போன்ற தாவரங்கள், கெளுத்தியைப் (Cat fish) போன்று அதிவேகமாக இனப்பெருக்கம் செய்து உயிரினப் பன்மையை பாதிக்கும் அயல் தாவரங்கள், உயிரினங்களை அறிவியல் ஆய்வு அடிப்படையில் குறைத்தல்
6) இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இயங்கும் பள்ளிகள், நிறுவனங்களுக்கும் வனத்துறையின் மூலம் பள்ளிக்கரணையின் முக்கியத்துவத்தை குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
7) நில அளவை (survey) செய்து சதுப்புநிலத்தின் அளவையும் எல்லைகளையும் உறுதிப்படுத்துதல்
8) காப்புக்காடாக (Reserved forest) இன்னும் அறிவிக்கப்படாமல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 380 ஹெக்டேர் நிலத்தை காப்புக்காடாக அறிவித்தல்; பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு இடைப்பட்ட பகுதியை (Buffer zone) உருவாக்குதல்
9) நீரில் மூழ்கி இருக்கும் உயிரின பன்மை நிறைந்த பயன்படுத்தப்படாத சதுப்புநிலப் பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களைக் கையகப்படுத்தி, வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருதல்
10) ராம்சார் சாசனத் தகுதி பெற்ற சதுப்புநிலமாக பள்ளிக்கரணையை அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்
கட்டுரையாளர்: தீபக் வெங்கடாசலம்,
தொடர்புக்கு: suzhalarivom@gmail.com