உயிர் மூச்சு

அழகும் தூய்மையும்தான் இயற்கை பாதுகாப்பா?

சு.பாரதிதாசன்

ஐரோப்பிய நாடுகளில் நகரங்கள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. ஆனால், அந்தத் தோற்றம் இயற்கையை அரவணைத்துக்கொண்ட தோற்றமா என்ற கேள்வி எழுகிறது.

சமீபத்தில் 27-வது பன்னாட்டு உயிரியலாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரான்ஸுக்குச் சென்றிருந்தபோது, இந்த எண்ணம் தோன்றியது. இந்த மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

250 ஆண்டு உத்தரவு

நான் தங்கியிருந்த மாண்ட்பெலியர் நகரின் பெரும்பாலான சாலைகள் மரங்கள் இல்லாமல் வெறுமையாகக் காணப்பட்டன. அப்படியே மரங்கள் இருந்தாலும், ஒரே வகையான மரங்களால் சொல்லிவைத்தாற்போல அலங்கரிக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட ஒழுங்கில் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் தாவரங்கள் வளர்க்கப்பட்டிருந்தன. அதனால் உயிர்ப் பல்வகைமையைப் பார்க்க முடியவில்லை.

அதேநேரம் அந்த ஊர் எனக்கு வேறொரு ஆச்சரியத்தை அளித்தது. அந்த ஊரின் ஒரு மூலையில் ஒரு குன்று இருந்தது. அந்தக் குன்றின் உயரம் 137 அடி. அதில் 24-ம் லூயியின் சிலையும் கோட்டையும் இருந்தன. கோட்டையின் ஒரு மூலையில் 250 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட அரசன் போட்ட உத்தரவு எழுதப்பட்டு இருக்கிறது. அது பெரிய விஷயமில்லை. ஆனால், அந்த உத்தரவு இன்றைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுதான் ஆச்சரியம் அளித்தது. அந்த ஊரில் கட்டப்படும் எந்தக் கட்டிடமும் இந்தக் குன்றின் உயரத்தைவிட குறைவாகத்தான் கட்டப்பட வேண்டும் என்பதே, அந்த உத்தரவு.

உயிர்ப்பற்ற ஆறு

ஊருக்கு ஆறு அழகு என்பது போல ஊர்களை ஊடறுத்து ஆறு அழகாகச் சென்றாலும், ஆற்றின் முக்கிய அம்சமாக இருக்கும் நாணல் கூட்டமோ, மரங்களோ, கரைகளோ எதுவும் தென்படாமல் வெறுமையாகக் காட்சியளித்தது. அழகு, தூய்மை என்ற பெயரில் ஆற்றின் கரை சிமெண்ட் பூசி மெழுகப்பட்டு, உயிர்ப்பில்லாமல் காணப்பட்டது. ஆற்றின் கரையோரத்தில் அடுக்கு மாடிக் கட்டிடங்களும் உணவகங்களும் எழுப்பப்பட்டு மனிதத் தலையீட்டால், ஆறு உயிர்ப்பை இழந்து காணப்பட்டது.

சென்னையில் ஓடும் கூவம் ஆறு இவ்வளவு மக்கள்தொகையையும் தாங்கிக்கொண்டு இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கும் காட்சி, என் மனதில் ஓடியது. ஆற்றில் மாசு சேராமல் அக்கறையுடன் நடவடிக்கை எடுத்தால்போதும், கூவம் ஆற்றை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

சென்னை பறவைகள்

நம்முடைய ஊர்ப் பகுதிகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதற்கு மற்றுமொரு உதாரணம். சென்னை மாநகரில் வீட்டிலிருந்துகொண்டே, ஒரு நாளில் குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சம் 30 வகை பறவைகளைப் பார்த்துவிட முடியும். மாண்ட்பெலியரில் நான் தங்கியிருந்த ஆறு நாட்களில் நான்கு வகையான பறவைகள், அதுவும் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே தென்பட்டன.

அவர்களிடமிருந்து நாம் கைக்கொள்ள வேண்டிய பாடம் ஆற்றில் மாசு கலக்காமல் எப்படிப் பாதுகாப்பது என்பதையும் பயணத்துக்கும் உற்சாகத்துக்கும் சாகசத்துக்கும் ஆற்றுப் பாதையை எப்படி லாகவமாகப் பயன்படுத்துவது என்பதையும் பற்றித்தான்.

எல்லோருக்கும் ஓர் விதி

குறிப்பிட்ட கால இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் ஆற்று நீர் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. ஆற்று நீரில் மாசு ஏதேனும் கலந்திருந்தால், அதற்குக் காரணமான நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்குப் பல்கலைக்கழகங்களும் விதிவிலக்கல்ல. பல்கலைக்கழக ஆய்வகங்களிலிருந்து வெளியேற்றும் நீரையும், மறுசுழற்சி செய்து மாசு நீக்கித்தான் அனுப்ப வேண்டும். மாசு கலப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பல்கலைக்கழகத்துக்கு அபராதத் தொகை விதிக்கப்படுவதுடன் ஆய்வகத்தின் அனுமதியும் ரத்து செய்யப்படும் என்பதையும் அறிந்தபோது ஆச்சரியம் மேலிட்டது.

ஆனால், சந்தடி சாக்கில் ‘இறக்குமதி' என்ற பெயரில் இதே கழிவுகளை மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டும் கொடுமையை என்னவென்று சொல்வது?

- கட்டுரையாளர், இயற்கை ஆர்வலர்

தொடர்புக்கு: arulagamindia@gmail.com

SCROLL FOR NEXT