பல ஊர்களுக்குள் நுழையும்போது, குப்பையும் திடக் கழிவும் நம்மை வரவேற்கும். நாற்றமடிக்கும் இந்தக் கழிவுகளை ஒழிப்பது மட்டுமல்லாமல், மண்ணுக்கு உரமூட்டும் உரமாகவும் மாற்ற முடியும் என்று செய்துகாட்டியிருக்கிறது ஈரோடு கல்லூரி.
ஈரோடு பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி உயிர் வேதியியல் துறைத் தலைவி எஸ்.செல்வி தலைமையிலான குழுவினர், `கழிவை உரமாக்கும்’ முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.
யு.ஜி.சி. மானியம்
“ஈரோடு காய்கனி சந்தைகளில் தேங்கும் குப்பையைச் சேகரித்து, அதன்மூலம் மண்புழு உரம் தயாரிக்க முடிவு செய்தோம். இது தொடர்பான ஆய்வறிக்கையைப் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யு.ஜி.சி.) எங்கள் கல்லூரி சார்பாக அனுப்பினோம். இதற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி கிடைத்தது" என்கிறார் உதவிப் பேராசிரியை செல்வி.
அழுகிய காய், கனிகளிலிருந்து கிடைக்கும் கழிவை மண்புழுக்கள் உணவாக உட்கொள்கின்றன. அவற்றின் குடலில் உள்ள நுண்ணுயிர் நொதிகளின்மூலம் கழிவு செரிமானமாகிறது அத்துடன் சிறு சிறு உருண்டைகளாக வெளியேறும் எஞ்சிய பொருட்களே மண்புழு உரம்.
உரம் விற்கத் திட்டம்
இதற்காகப் பெருந்துறை சந்தையிலிருந்து காய்கறிக் கழிவு சேகரிக்கப்படுகிறது. இதில், பாதி மக்கிய நிலையில் மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகிறது.
உரம் தயாரிக்கத் தேவையான மாட்டுச்சாணம் மற்றும் மண்புழுக்களை ஆப்பக்கூடலில் உள்ள என்.கே.கே.பி. உயிர் பண்ணையிலிருந்து பெற்று, உரத் தயாரிப்பு பணி தற்போது 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் குறைவதோடு, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்குகிறது. வளமற்ற நிலங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் தன்மை இயற்கை உரத்துக்கு உண்டு. அதில் மண்புழு உரம் சிறப்பு வாய்ந்தது. சுற்றுச்சூழலைக் காப்பதற்காகக் காய்கறிக் கழிவு மூலம் தயாரிக்கப்படும் மண்புழு உரத்தைக் கல்லூரி மாணவர்கள் மூலமே விற்பனை செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் செல்வி முத்தாய்ப்பாக.
வீட்டிலேயே தயாரிக்கலாம்!
மூங்கில் கூடை, சிமெண்ட் தொட்டி அல்லது பழைய பிளாஸ்டிக் பெட்டியை எடுத்து, அதன் அடிப்பாகத்தில் அதிகப்படியான நீரை வெளியேற்றத் துளைகளை இட வேண்டும்.
அதன்பிறகு 8 செ.மீ. உயரத்துக்குக் கூழாங்கற்கள் அல்லது தென்னை நாரை நிரப்ப வேண்டும். அதன் மீது 4 செ.மீ. அளவுக்குத் தோட்டத்து மண்ணை நிரப்பவும்.
இதில் தினமும் சமையலறைக் கழிவு, தோட்டக் கழிவு போன்ற மக்கக்கூடிய கழிவைப் போட்டு நிரப்ப வேண்டும். இந்தப் பெட்டியின் மேற்புறம் துளைகள் கொண்ட மூடி அல்லது தென்னங்கீற்றைக் கொண்டு மூட வேண்டும். அவ்வப்போது தண்ணீர் தெளித்து ஈரப்பசையுடன் வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் 30 நாட்களில் கழிவுகள் மட்கி, கருப்பு நிறத்துக்கு மாறும்.
தொட்டியில் மண்புழுவை இட்டு, அதன் மேல் சாணம் தெளிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் மண்புழு உரம் தயாராகிவிடும்.
வீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும்போது, இரு தொட்டிகள் தேவை. ஒன்றில் உரம் மக்கும்போது, இரண்டாவது தொட்டியில் சமையல் கழிவுகளைச் சேகரிக்க உதவும்.
60 நாட்களில் மண்புழு உரம் தயார்
தொட்டி முறையில் மண்புழு உர உற்பத்தி செய்யும் இடமானது நிழலுடன், குளிர்ச்சியாக ஈரப்பதம் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
பயன்படுத்தப்படாத மாட்டுத் தொழுவம், கோழிப் பண்ணை, தென்னங்கீற்றுக் கூரை போன்றவற்றை விவசாயிகள் பயன்படுத்தலாம்.
தொட்டிக் கட்டமைப்பானது 6 அடி நீளமும், 3 அடி அகலம் மற்றும் 3 அடி உயரம் கொண்டதாக இருக்க வேண்டும்.
தொட்டியின் அடிப்பாகத்தில் 3 செ.மீ. உயரத்துக்குத் தென்னை நார்க்கழிவு, கரும்பு சோகை, நெல் உமி, கூழாங்கற்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இட வேண்டும்.
இந்தப் படுக்கையின் மேல் 2 செ.மீ. உயரத்துக்கு வயல் மண்ணைப் பரப்ப வேண்டும். பாதி மக்கிய காய்கறிக் கழிவு, 50 சதவீதக் கால்நடைக் கழிவுகளுடன் (மாட்டு எரு, சாண எரிவாயுக் கழிவு) கலக்கி, தொட்டியில் 2 அடி உயரத்துக்கு இதை நிரப்ப வேண்டும்.
தொட்டியில் கழிவுகளின் மேற்பரப்பில் 2 கிலோ சிவப்பு மண் புழுவைவிட வேண்டும்.
தினமும் 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும். தொட்டியைத் தென்னங்கீற்றைக் கொண்டு மூடி வைக்கவும்.
மண்புழு உரம்: 60 நாட்களில் தயாராகிவிடும். மண்புழு உரம் அறுவடையானதும் உரப்படுக்கையின் மேல் உள்ள மண்புழு கழிவுகளை மட்டும் எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
- உதவிப் பேராசிரியை செல்வி
தொடர்புக்கு: 99445 55090