உயிர் மூச்சு

கிழக்கில் விரியும் கிளைகள்: இமயத்துக்கு முந்தைய மலை

கு.வி.கிருஷ்ணமூர்த்தி

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண் - திருக்குறள்

தீபகற்ப இந்தியாவின் கிழக்கு அரணாகத் திகழ்வது, கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats). பொதுவாகவே அதிகக் கவனம் பெறாத இந்த மலைத்தொடர், சர்வதேச அளவில் பிரபலமான இமயமலைத் தொடரையும் மேற்கு மலைத்தொடரையும்விட புவியியல் அடிப்படையில் மிகவும் பழமையானது என்பது ஆச்சரியம்தான்.

29 தமிழக மலைகள்

ஒடிசா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் ஊடே பரவிக் காணப்படும் கிழக்கு மலைத்தொடர் நீலகிரிக்கு அருகிலுள்ள மாயாறு பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கு மலைத்தொடருடன் கிட்டத்தட்ட இணைகிறது. மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பென்னாறு, காவிரி போன்ற நதிகள் பாய்வதன் காரணமாக மேற்கு மலைத்தொடரைப் போன்று தொடர்ச்சியாக இல்லாமல், இந்த மலைத்தொடர் அதிக இடைவெளிகளைக் கொண்டுள்ளது.

மலைகள், பெருங்குன்றுகள், சிறுகுன்றுகள், குறுங்குன்றுகள், பாறை குவியல்கள் என ஏறத்தாழ 6,500 புவியியல் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து இந்த மலைத்தொடரை உருவாக்கியுள்ளன. இந்த மலைத்தொடரில் மொத்தமுள்ள 138 பெரிய மலைகளில் 29 தமிழகத்தில் உள்ளன.

தெற்கு எல்லை தமிழகம்

கிழக்கு மலைத்தொடரின் மொத்த நீளம் 1,750 கி.மீ.; மொத்தப் பரப்பு 75,000 முதல் 1,00,000 சதுர கி.மீ.; இந்த மலைத்தொடரின் பெரும்பகுதி பிளவுபடாத ஆந்திரத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட 25 சதவீதம் தமிழகத்தில் இருக்கிறது. இதன் பரப்பு 9,800 சதுர கி.மீ.; தமிழகத்தில் அதிகம் சிதறிக் காணப்படுவதால் மொத்த நீளத்தைக் கணக்கிடுவதில் சிக்கல்கள் உள்ளன.

கிழக்கு மலைத்தொடரின் வடக்கு எல்லை எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதே நேரம் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டது சிமிலிபால்தான். இத்தொடரின் தென்மேற்கு எல்லையாகக் கர்நாடகத்தின் சாம்ராஜ் நகருக்கு அருகிலுள்ள பிலிகிரிரங்கன் மலையும், தெற்கு எல்லையாகத் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வைகை ஆற்றங்கரையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

முதுபெரும் தொடர்

பூமிப் பந்தில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்துடன் லாரேசியா மோதியது. இந்தக் கடுமையான மோதலின் விளைவாகவே இமயமலை தோன்றியது. ஆனால், அதற்கு முன்னர் லாரேசியாவின் ஒரு பகுதியாக இருந்தபோதே, ஏறத்தாழ 160 கோடி ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு மலைத்தொடரின் தோற்றம் தொடங்கிவிட்டது. குறிப்பிடத்தக்க புவியியல் மாற்றங்களும், புவி உருவமைப்பியல் மாற்றங்களும் இந்தத் தோற்றத்துக்குக் காரணங்களாகத் திகழ்ந்தன.

என்றாலும் இந்த மலைத்தொடரின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு புவி காலகட்டங்களில் (160 கோடி முதல் 137 கோடி ஆண்டுகளுக்கு இடையே) தோன்றி, மாற்றமடைந்து, தொடர்ந்து மாற்றமடைந்துவருகின்றன. இந்த மலைத்தொடரின் வடக்குப் பகுதியும், தெற்குப் பகுதியும் வெவ்வேறு புவியியல் தோற்ற வரலாறுகளைக் கொண்டுள்ளன, வெவ்வேறு புவியியல் பண்புகளையும் கொண்டுள்ளன.

(கிழக்கு மலைத் தொடர் தாவரங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்

தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

SCROLL FOR NEXT