இந்தியாவின் முதல் தேசிய நீர்க் கொள்கை 1987-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்குப் பின்னணியில் அயராது பாடுபட்டவர் ராமசுவாமி ஆர். ஐயர். இவர் டெல்லியில் கடந்த 9-ம் தேதி காலமானார்.
இந்தியக் கணக்குத் தணிக்கை பணி (ஐ.ஏ.ஏ.எஸ்.) அதிகாரியான இவர், மத்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சகத்தின் செயலராகப் பணியாற்றியுள்ளார். அவர் பணியாற்றிய காலகட்டத்தில்தான் தேசிய நீர்க் கொள்கை வகுக்கப்பட்டது.
பணி ஓய்வுக்குப் பிறகும் இந்தியா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கிடையே நதி நீர் கூட்டுறவுக்கு அவர் ஆற்றிவந்த பணி இன்றியமையாதது. மேலும் நீர்ப் பிரச்சினைகள் தொடர்பாக உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களிலும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
பத்ம விருது பெற்ற இவர், சில நாட்களுக்கு முன் ‘லிவிங் வாட்டர்ஸ், டையிங் வாட்டர்ஸ்' என்ற தண்ணீர் பிரச்சினைகள் தொடர்பான கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். ‘தி இந்து' ஆங்கில நாளிதழில் தண்ணீர் பிரச்சினைகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க நடுப்பக்கக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.