உயிர் மூச்சு

ஏரின்றி அமையாது உலகு: ஜி.டி.பியின் மறுபக்கம்

பாமயன்

ஒன்று தெரியுமா, இன்றைக்கு உலகமெங்கும் உச்சரிக்கப்பட்டுவரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) கணக்கில் பாலியல் தொழிலையும், போதைப்பொருள் வணிகத்தையும் சேர்க்கப்போவதாகப் பிரிட்டன் முடிவெடுத்துள்ளதை, வேடிக்கை என்பதா, வேதனை என்பதா? இப்படிச் செய்வதால் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்போகிறதாம். ஏனென்றால், அங்கு இந்தத் தொழில்கள் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதமாக வளர்ந்துவிட்டனவாம்.

பிரிட்டன் மட்டுமல்ல கோகைன் என்ற போதைப் பொருளையும், பாலியல் தொழிலையும் இத்தாலி சேர்க்கவுள்ளது என்ற செய்தியை பினான்சியல் டைம்ஸ் என்ற இதழ் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு தொழில்களும் பிரிட்டன் வேளாண்மை வருமானத்தைவிட கூடுதலாகப் போகின்றனவாம்.

அழிவின் வருமானம்

என்னே மேலை நாடுகளின் முன்னேற்றப்பாதை! இந்த இடத்தில் டாஸ்மாக் நினைவுக்குவந்தால், அதற்கு நாம் பொறுப்பல்ல. ஒரு காலத்தில் உலகுக்கே பண்பாட்டையும் அறத்தையும் சொன்ன ரஷ்ய நாட்டின் நிதி அமைச்சர் சொல்கிறார், ‘ரஷ்ய மக்களே! ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதற்கு வோட்கா குடியுங்கள்' என்று. உலகமயமாக்கம் எப்படிப் பயணப்படுகிறது பார்த்தீர்களா?

இதைவிட கொடுமை, கடலில் கச்சா எண்ணெய் கசிவால் ஏற்படும் சீரழிவு மிகவும் ஆபத்தானது. எண்ணற்ற மீன்களும் கடல்வாழ் உயிர்களும் அழியும். ஆனால், அந்த அழிவையும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்துக்கொள்ளும் பெருமைமிக்க கனவான்கள் பெருகிவிட்டனர். அதிக எண்ணெய் கசிவால், அதை சீர் செய்வதற்கு அதிக வேலைவாய்ப்பு பெருகும். எனவே, அதிக வருமானம் கிடைக்கும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியும் உயரும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

கனடாவின் தேசிய ஆற்றல் வாரியம் எண்ணெய் கப்பல்களில் ஏற்படும் கசிவு, பொருளாதாரத்துக்கு நல்லது என்று குறிப்பிடுகிறது. கிண்டர் மோர்கன் என்ற நிறுவனம் இதைக் குறிப்பிட்டுள்ளது. அது ஒரு எண்ணெய்க் குழாய் பதிக்கும் நிறுவனம். நம் நாட்டு கெய்ல் இயற்கை எரிவாயு நிறுவனமும் எதிர்காலத்தில் இப்படிச் சொல்லுமா என்று நமக்குத் தெரியாது.

மாசுபாடு வளமா?

இதேபோல ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரு ரசாயன ஆலை நாசப்படுத்தியதால், அதை சரிசெய்யும்போது அதிகம் பேருக்கு வேலை கிடைக்கும். எனவே, அதை ஆதரிக்கலாம் என்ற கணக்கு வரும்போது, நாடு என்ன செய்ய முடியும்? அதிக அளவு மரங்களை நட்டு நீரைக் காக்கும் வேலையை வளர்ச்சிக் கணக்கில் எடுக்காமல், நீரையும் உணவையும் பணமில்லாமல் தரும் ஒரு வளமான காட்டை அழித்து, அதில் சுரங்கம் தோண்டி ஏற்றுமதி செய்து ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் ஆட்சியாளர்களின் திறமையை என்னவென்பது?

நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி, வளர்ச்சியின் கோர முகமான மாசுபாட்டைக் கணக்கில் எடுப்பதில்லை. ஒரு கடற்கரை ஓரத்தில் அமைக்கப்படும் ரசாயன ஆலை வெளியிடும் கழிவால் எவ்வளவு மீன்வளம் குறைந்துபோகும்? அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு எவ்வளவு என்ற கணக்கைக் கைகொள்வதில்லை. வளமான வயலில் ரசாயனங்களைக் கொட்டுவதால் மாசுபடும் நீரும், அதனால் வரும் நோய்களின் பெருக்கமும் எவ்வளவு பொருளாதாரச் சீரழிவைக்கொண்டுவருகிறது என்ற கணக்கும் பார்க்கப்படுவதில்லை. இதுதான் நமது புள்ளிவிவரப் புலிகளின் திறமை.

இதனால் விவசாயத்தையும், அதற்கு ஆதரவாக உள்ள மற்ற அம்சங்களையும், பின்னோக்கித் தள்ளும் அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பற்றி பேசுவது எப்படிச் சரியாகும்? சிந்திப்போம்.

கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

(‘ஏரின்றி அமையாது உலகு' தொடர் இந்தப் பகுதியுடன் நிறைவடைகிறது. விரைவில் புதிய பகுதியில் சந்திப்போம்.)

பாமயன் தொடர்புக்கு: 9842048317 / adisilmail@gmail.com

SCROLL FOR NEXT