பூமியில் யானைக்கு அடுத்து மிகவும் பலம் வாய்ந்த உயிரினமாகக் காண்டாமிருகங்கள் இருக்கின்றன. எந்த அளவுக்குப் பலம் என்றால், பெரிய கார் ஒன்றை அக்குஅக்காகப் பிரித்துவிடும் அளவுக்கு!
ஆனால், ‘எவை கடினமான வையோ, அவையே முதலில் உடைபடும்' எனும் புத்தரின் வாக்கை நிரூபிப்பது போலவோ என்னவோ, பலம் வாய்ந்த காண்டாமிருகம் தற்போது அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதற்குக் காரணம் கள்ளவேட்டை. கொம்புக்குக் கிடைக்கும் விலை.
போலி விளம்பரம்
மனித விரல்களில் வளரும் நகங்களும், காண்டாமிருகத்தின் கொம்புகளும் ‘கெரட்டின்' எனும் பொருளால் உருவாகின்றன. நகத்தைச் சாப்பிட்டால் எப்படி எந்த வகையான அதீதச் சக்தியும் கிடைத்துவிடாதோ, அதே போலத்தான் காண்டாமிருகத்தின் கொம்புகளைச் சாப்பிட்டாலும் எதுவும் கிடைத்துவிடாது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே பொருள்தான்.
ஆனால், சீன மருத்துவ முறையின் தொடர்ந்த விளம்பரத்தால், இன்று காண்டாமிருகக் கொம்புகளுக்குச் சர்வதேசக் கள்ளச் சந்தையில் ஏக கிராக்கி. அதனால் அந்த விலங்குகளை வேட்டையாடுவதும் இன்று லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது.
கடைசி உயிரினம்
கருப்பு காண்டாமிருகம், வெள்ளை காண்டா மிருகம், சுமத்ரா காண்டாமிருகம், இந்தியக் காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம் என 5 காண்டாமிருக வகை இருக்கின்றன. இவற்றில் முதல் இரண்டு வகைகள் ஆப்பிரிக்காவில் உள்ளன. எல்லா வகை காண்டாமிருகங்களும் கள்ளவேட்டை காரணமாக அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றாலும், ஆப்பிரிக்காவில் உள்ள காண்டாமிருகங்கள் கிட்டத்தட்ட அழிந்தேவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆப்பிரிக்கக் காண்டாமிருகங்களை அழிவிலிருந்து காப்பாற்ற, ஒரு தனிமனிதனாக லாரன்ஸ் அந்தோனி நடத்திய போராட்டம்தான் ‘தி லாஸ்ட் ரினோஸ்' என்ற புத்தகமாக விரிகிறது. இந்த மாதம் 22-ம் தேதி ‘உலகக் காண்டாமிருக நாள்' கடந்துபோயிருக்கும் சூழ்நிலையில், 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தை நினைவுகூர்வது முக்கியமாகும்.
தனியார் சரணாலயம்
தென்னாப்பிரிக்காவில் சுலுலேண்ட் எனும் பகுதியில் ‘துலா துலா' எனும் தனியார் சரணாலயத்தை லாரன்ஸ் அந்தோனி நடத்திவந்தார். அங்கு யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும் பல அரிய உயிரினங்களைப் பாதுகாத்து வந்தார். யானைகளுடனான தனது அனுபவத்தை ‘தி எலிபன்ட் விஸ்பரர்' எனும் புகழ்பெற்ற புத்தகமாக எழுதியவரும் இவரே!
1960-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் 500 என்ற அளவுக்குத்தான் கருப்பு காண்டாமிருகங்கள் இருந்ததாகச் சொல்லும் அவருடைய கணக்குப்படி பார்த்தால், இன்று அவற்றின் எண்ணிக்கை பெருமளவு சரிந்திருக்கும். அதேபோல காங்கோ, உகாண்டா உள்ளிட்ட இதர ஆப்பிரிக்க நாடுகளில் வெள்ளை காண்டாமிருகங்களும் இதே கதிக்குத் தள்ளப்பட்டிருக்கலாம்.
காப்பாற்ற முயற்சி
அதிலும் கருப்பு காண்டாமிருகத்தைவிட வெள்ளை காண்டாமிருகம் காங்கோ நாட்டில் 15-க்கும் குறைவாக, அழியும் தறுவாயில் இருந்தன. இது 2007-ம் ஆண்டு கணக்கு. அந்தக் காண்டாமிருகங்களைக் காப்பாற்றக் காங்கோ அரசு, தென் ஆப்பிரிக்க அரசு, காங்கோவில் அரசுக்கு எதிராகப் போராடிவரும் ‘லார்ட்ஸ் ரெசிஸ்டென்ஸ் ஆர்மி' எனும் கிளர்ச்சி இயக்கம் போன்றவர்களுடன் இணைந்து லாரன்ஸ் அந்தோனி பல முயற்சிகள் மேற்கொண்டார். இறுதியில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பதை விலாவாரியாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
புத்தகத்தின் ஓர் இடத்தில் இப்படிச் சொல்கிறார்: “ஆப்பிரிக்கர்கள்தான் உண்மையிலேயே இயற்கையின் பாதுகாவலர்கள். தங்கள் தேவைக்கு அதிகமாக அவர்கள் எப்போதும் உயிரினங்களை வேட்டையாடியதில்லை. ஆனால், இங்கேதான் கள்ளவேட்டை அதிகளவில் நடக்கிறது”. அதற்கு அவர் காரணமாகச் சுட்டிக்காட்டுவது அரசு, அரசியல் கட்சிகள், போராட்ட இயக்கங்கள் ஆகியவற்றுக்கிடையே நிலவிய ‘விட்டுக்கொடுக்காத தன்மை' தான்!
2012-ம் ஆண்டு மாரடைப்பால் காலமான லாரன்ஸ் ‘நான் இதுநாள்வரை இந்தப் போராட்டத்தில் உயிர் பிழைத்திருந்ததற்கான காரணம் எனது நண்பர்கள்தான். பூமியைக் காப்பாற்றப் போராடும் எல்லோருமே என்னுடைய நண்பர்கள்தான்' என்கிறார் புத்தகத்தின் இறுதியில். காண்டாமிருகங்களை மட்டுமல்ல... இயற்கையைக் காப்பாற்றும் முயற்சியில் நாமும் அவருடைய நண்பர்களாவோம்!