தெற்கு ஆசியாவில் விலங்குக் காட்சியகம், காட்டுயிர்ப் பாதுகாப்பு என்றவுடன் நம் நினைவுக்கு வரும் முதல் பெயர்களில் ஒன்று சாலி வாக்கர். அமெரிக்கக் குடிமகளான அவர் தனது வாழ்நாளில் மூன்றில் இரண்டு பங்கை இந்தியாவுக்கும், இந்தியக் காட்டுயிர்களுக்கும் அர்ப்பணித்தவர்.
1970-களில் யோகா படிப்பதற்காக இந்தியா வந்த அவர், 1980-லிருந்து உயிரினங்கள், விலங்குக் காட்சியகம், விலங்கு நலவாழ்வு, உயிரினப் பாதுகாப்புக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மைசூர் விலங்குக் காட்சியகத்துக்குச் சென்றது, அங்கு புதிதாகப் பிறந்த புலிக்குட்டியுடனான சந்திப்பு ஆகிய இரண்டும் தெற்காசியாவில் 40 ஆண்டுகள் காட்டுயிர்ப் பாதுகாப்புக்காக சாலி வாக்கர் சேவையாற்றத் தூண்டுகோலாக அமைந்தன.
காட்டுயிர்ப் பாதுகாவலர்
நாம் கற்பனை செய்ய முடியாத நிறைய விஷயங்களை அவர் செய்தார். வெளிப்படையான பேச்சு, கவர்ந்திழுக்கும் ஆளுமையால் நிறைய நண்பர்களும் எதிரிகளும் எளிதில் அவருக்கு உருவானார்கள். காட்டுயிர் சரணாலயங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாவாகவும் முன்னோடியாகவும் திகழ்ந்தார். மைசூருவில் ‘மைசூர் விலங்குக் காட்சியக நண்பர்கள்’ என்ற அமைப்பைத் தொடங்கி அன்றைய சுற்றுச்சூழல் துறை அதிகாரத்தில் இருந்தவர்களின் ஆதரவையும் பெற்றார்.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் ஆதரவு, உதவியுடன் நாட்டின் அனைத்து உயிரியல் பூங்காக்களுக்கும் உதவ, ’விலங்குக் காட்சியக எல்லையற்ற அமைப்பு’ (Zoo Outreach Organisation ZOO) என்ற அமைப்பை தொடங்கினார். 1985-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம், பல்வேறு காட்டுயிர்ப் பூங்காக்கள், மத்திய அரசின் துறைகளுடன் இணைந்து தெற்காசிய காட்டுயிர்ப் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்கியது. விலங்குக் காட்சியகங்களில் உள்ள உயிரினங்களின் பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்த அரசு ஆணையத்தை உருவாக்கவும் சாலி வாக்கர் வித்திட்டார். அதன் விளைவாக உருவானதே மத்திய விலங்குக் காட்சியக ஆணையம் (Central Zoo Authority).
தெற்காசிய விலங்குக் காட்சியகங்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து சிறந்த சேவையாற்றியதற்காக சாலி வாக்கர் பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார். அல்சைமர் எனும் நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட சாலி வாக்கர், அமெரிக்காவில் 2019 ஆகஸ்ட் 22 அன்று உயிர் நீத்தார். அதேநேரம் இந்தியா மீதும், உயிரினங்களின் மீதும் அவர் கொண்ட அன்பும் மேற்கொண்ட பல ஆக்கபூர்வமான செயல்களும் நம் மனதை விட்டு நீங்காதவை.
சாலி வாக்கரின் எழுத்துக்களில் இருந்து
ஒரு இந்தியக் கால்நடை மருத்துவருடைய நட்பின் மூலமாக மைசூர் விலங்குக் காட்சியகத்தைப் பார்வையிடச் சென்றிருந்தேன், அங்குள்ள காப்பாளர் ஒருவர் 2 மாதப் புலிக் குட்டி ஒன்றை என் கைகளில் வைத்த தருணம், என் மனம் யோகாவிலிருந்து விலங்குக் காட்சியகத்துக்குத் தடம் புரண்டது. அதன் பிறகு தினமும் விலங்குக் காட்சியகத்தையும், புலிக் குட்டியையும் சென்று பார்த்து வந்தேன்.
மைசூரு விலங்குக் காட்சியகத்தின் ஊழியர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு எனக்கு சிறிது காலம் தேவைப்பட்டது. பிறகு குறுகிய காலத்திலேயே மைசூரு விலங்குக் காட்சியகத்தில் பல விஷயங்களைச் செய்தேன். சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு சங்கத்தை உருவாக்கி விலங்குக் காட்சியகத்துக்கு உதவும்படி மைசூரு ஆணையர் வேண்டுகோள் வைத்தார். அப்படித்தான் ‘மைசூர் விலங்குக் காட்சியக நண்பர்கள்’ (Friends of Mysore) அமைப்பு உருவானது. நான் செயலாளராக நியமிக்கப்பட்டேன். பல தரப்பட்ட பணிகளை மேற்கொண்டேன். மக்களும் ஊடகங்களும் இவற்றையெல்லாம் பாராட்டினர்.
நூலகங்களுக்குச் சென்று காட்டுயிர்ப் பாதுகாப்பு குறித்த புத்தகங்களைப் படித்தேன். எல்லா உயிரினங்களின் மீதும் ஆர்வம் காட்டினேன். குறிப்பாக சிறு புலிகளின் குணநலன்களைப் பற்றிய தகவல்களைக் கூடுதலாக அறிந்தேன். என்னுடைய நண்பரும் வழிகாட்டியுமான மைசூர் விலங்குக் காட்சியகத்தின் இயக்குநர் சி.டி. கிருஷ்ண கவுடாமிருந்து காட்டுயிர்ப் பாதுகாப்பு குறித்து நிறையக் கற்றுக்கொண்டேன். அவர், மைசூர் விலங்குக் காட்சியக விலங்குகள் பற்றி நன்கு அறிந்திருந்தார். அந்த விலங்குகளும் அவரை அறிந்திருந்தன.
உலக அனுபவம்
இந்தியாவில் கடுமையான விசா நடைமுறைகள் இருந்தன. ஒவ்வொரு 3-6 மாதங்களுக்கும் விசா நீட்டிப்பு கிடைக்காவிட்டால் மீண்டும் விசா பெறும்வரை இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இப்படி அமெரிக்கா திரும்பியபோது அமெரிக்க விலங்குக் காட்சியகங்கள் என்னை ஆர்வமாக வரவேற்றன. அவற்றின் இயக்குநர்கள் எனது பயண அனுபவம் பற்றிக் கேட்டார்கள். அவர்களுடைய அனுபவங்களைப் பற்றியும் நான் கேட்டறிந்தேன். மொத்தமாக 100-க்கும் மேற்பட்ட விலங்குக் காட்சியகங்களைப் பார்த்திருப்பேன். பிறகு ஐரோப்பிய விலங்குக் காட்சியகங்களையும் சென்று பார்த்தேன்.
இந்தப் பின்னணியில் 1984-ம் ஆண்டு தேசிய விலங்குக் காட்சியக ஆலோசனை குழுவில் சிறப்பு அழைப்பாளராக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி சுற்றுசூழல் செயலாளர் டாக்டர் டி.என்.கோஷுவைச் சந்தித்தேன். மைசூர் விலங்குக் காட்சியகத்தில் நாங்கள் மேற்கொண்ட செயல்களை அவரிடம் விளக்கினேன். இந்தியாவில் உள்ள அனைத்து விலங்குக் காட்சியகங்களிலும், இதேபோன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள ஒரு தேசிய அமைப்பின் அவசியம் குறித்து விவாதித்தோம்.
அதற்காக மானியம் கொடுத்து ‘விலங்குக் காட்சியக எல்லையற்ற அமைப்பு’ (Zoo Outreach Organisation) என்ற அமைப்பை 1985-ல் உருவாக்க உதவி கிடைத்தது. விலங்குக் காட்சியகங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு வெளியீடுகளைக் கொண்டு வந்தோம். குறிப்பாக, 1,000-க்கும் மேற்பட்ட காட்டுயிர்ப் பாதுகாப்புக் கையேடுகளை, பிரசுரங்களை வடிவமைத்துள்ளோம்.
அரிய கவுரவம்
இரண்டு மாத இதழ்களை (ZOO ZEN, Zoo's Print) வெளியிடத் தொடங்கி, அனைத்து விலங்குக் காட்சியகங்களும் 2004-ம் ஆண்டு முதல் இலவசமாக அனுப்பிவைக்கத் தொடங்கினோம். அதற்குப் பிறகு தொடர்ந்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறோம்.
எனக்கும் சில வன அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 1987-ம் ஆண்டில் மைசூருவை விட்டு வெளியேறி கோயம்புத்தூருக்குச் செல்ல வேண்டிவந்தது. கோயம்புத்தூரில் இருந்தபடியே பணிகளைத் தொடர்ந்தேன்.
1991 ஆகஸ்ட் 28 அன்று ‘விலங்குக் காட்சியகச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ‘மத்திய விலங்குக் காட்சியக ஆணையம்’ 1992 பிப்ரவரி 3 அன்று அமைக்கப்பட்டது. அதில் ஆறு ஆண்டுகளாக உறுப்பினராக இருந்தேன். இது எந்த வெளிநாட்டவருக்கும் கிடைக்காத ஓர் அரிய கவுரவம்.
-பிரவிண்குமார், கட்டுரையாளர் தொடர்புக்கு: brawinkumarwildlife@gmail.com