நம்மைச் சுற்றியுள்ள பூச்சிகள், பறவைகள், இயற்கை குறித்துத் தமிழில் அறிந்துகொள்ள முடியுமா? உரிய படங்களுடன் அறிவியல்பூர்வமான விளக்கம் கிடைக்குமா? தமிழக இயற்கை சார்ந்த அறிவை மேம்படுத்திக்கொள்வது எப்படி – இது போன்ற கேள்விகளுக்கு விடையளித்துவருகிறது 'சூழல் அறிவோம்' என்ற தலைப்பிலான காணொலிகள். இந்தத் தலைப்பில் வாரந்தோறும் இணையவழி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம் ஆகிய ஏரிப் பகுதிகளை மையப்படுத்தி ‘பறவைகள் சூழ் உலகு’ என்றொரு குழு செயல்பட்டுவருகிறது. இந்தக் குழு வாரஇறுதி நாள்களில் இயற்கை நடை, பறவை நோக்குதல் ஆகிய செயல்பாடுகளை வனத்துறை அலுவலர்கள் உதவியுடன் நடத்திவந்தது. இந்தப் பகுதிகளில் உள்ள நீர்ப் பறவைகள், நிலப் பறவைகள், தாவரங்கள், தட்டான்கள், வண்ணத்துப்பூச்சிகள், நீர் வாழ் தாவரங்கள் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இயற்கை அம்சங்களுக்குத் தமிழில் பெயர்களை அறிமுகப்படுத்துதல், இயற்கை வரலாற்றுத் தகவல்களைப் பகிர்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தனிநபர்களின் பங்கு, சூழலியல் போராட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்த நிகழ்வுகளில் பேசப்பட்டது. அவசர வாழ்க்கை, நெருக்கடியான வேலைகளில் ஈடுபட்டுவந்த இளைஞர்களுக்கு, இந்தப் புற உலக அறிமுகம் ஆசுவாசம் அளிப்பதாக இருந்தது. வெ. தீபக், அமர பாரதி, மேகா உள்ளிட்டோர் இந்தக் குழுவில் செயல்பட்டுவந்தனர்.
சூழல் அறிவோம்
கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியில் செல்ல முடியாத நிலையில், ‘சூழல் அறிவோம்’ என்றொரு இணையவழி நிகழ்ச்சிகளை இந்தக் குழுவினர் தொடர்ச்சியாக ஒருங்கிணைத்து வருகின்றனர். இதில் இயற்கையின் ஒவ்வொரு அங்கத்தைப் பற்றியும் துறைசார் நிபுணர்கள் விரிவாக எடுத்துரைத்து வருகிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள, அதேநேரம் அதிகம் அறியப்படாத பூச்சிகள், தட்டான்கள், வண்ணத்துப்பூச்சிகள், சிலந்திகள் பற்றி படங்களுடன் முதல் கட்டமாக விளக்கப்பட்டது. பிறகு அதிகம் பேசப்படாத பல்லிகள், காவிரி ஆற்று மீன்கள், புற்கள், தானியங்கள், கிழக்குத் தொடர்ச்சி மலை குறித்து விரிவாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு பிரிவு சார்ந்தும் நடப்பு நிலை, சூழலியல் சவால்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. இயற்கை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், சாதாரணர்கள் என ஒவ்வொரு நிகழ்விலும் நூறு பேர்வரை பங்கேற்று வருகிறார்கள். முகநூல், யூடியூப் வழியாகவும் இந்த நிகழ்ச்சிகளைக் காணலாம்.
கோவை சதாசிவம், பெங்களூரு ஏட்ரீ நிறுவனத்தின் கணேசன், கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் மாசிலாமணி, திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் பேசியிருக்கிறார்கள். இவர்களுடன் 9 ஆம் வகுப்பு மாணவியான அஷ்வதா தொல்லுயிர்கள், பவளத்திட்டுகள் குறித்து இரண்டு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். எழுத்தாளர் நக்கீரன் எழுதிய ‘நீரெழுத்து’ உட்பட இயற்கை, சுற்றுச்சூழல் சார்ந்த முக்கியமான சூழலியல் நூல்களும் இந்த நிகழ்ச்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு உதவும்
“ஒவ்வொரு தலைப்பு சார்ந்தும் படங்கள், விளக்கங்களுடன் விரிவான காணொலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் காணொலிகள் பெரியவர்களுக்கு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் இயற்கை சார்ந்த பார்வை, புரிதலை ஏற்படுத்தக்கூடியவை. நம்மைச் சுற்றியுள்ள இயற்கை குறித்துக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த நல்ல வாய்ப்பாக இந்தக் காணொலிகள் அமையும்” என்கிறார் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து வருபவர்களில் ஒருவரான மென்பொருள் பொறியாளர் வெ. தீபக்.
இந்த நிகழ்ச்சிகளின் பலனாக, ‘பூச்சிகளைப் பற்றிய பயம் அகன்றிருக்கிறது’, ‘நமக்கு அருகிலேயே இயற்கை இவ்வளவு செழிப்புடனும் பன்மைத்தன்மையுடனும் இருக்கிறதா என்று ஆச்சரியத்துடன் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறோம்’, ‘நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை ரசித்து அனுபவிக்கவும் பாதுகாக்கவும் உந்துதலாக இந்த நிகழ்ச்சிகள் அமைந்திருக்கின்றன’ என்கிறார்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த சிலர்.
‘சூழல் அறிவோம்’ நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவும், ஏற்கெனவே நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளைக் காணவும் கீழ்க்கண்ட சுட்டிகள் உதவும்:
முகநூல் பக்கம்:-
https://bit.ly/SuzhalArivomFB
முந்தைய காணொலிகளைக் காண:-
https://bit.ly/SuzhalArivomYT